;
Athirady Tamil News

ஜனாதிபதி தேர்தல்- எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக சரத்பவாரை களம் இறக்க தீவிரம்..!!

0

ஜனாதிபதி ராம்நாத் கோவிந்தின் பதவிக்காலம் அடுத்த மாதம் (ஜூலை 24-ந்தேதி) முடிவடைகிறது. இதையடுத்து புதிய ஜனாதிபதியை தேர்ந்தெடுக்க அடுத்த மாதம் 18-ந்தேதி தேர்தல் நடைபெற உள்ளது. போட்டி ஏற்பட்டு ஓட்டுப்பதிவு நடக்கும் பட்சத்தில் ஜூலை 21-ந்தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இன்னும் சில தினங்களில் பா.ஜனதா கட்சி வேட்பாளரை அறிவிக்க திட்டமிட்டுள்ளது.

இதில் அனைத்து கட்சிகளிடையே ஒருமித்த கருத்து ஏற்படுத்த பா.ஜனதா தலைவர் நட்டா, மத்திய மந்திரி ராஜ்நாத் சிங் ஆகிய இருவரையும் பிரதமர் மோடி பணியில் அமர்த்தி உள்ளார். அவர்கள் இருவரும் பா.ஜனதாவின் தோழமை கட்சி தலைவர்களிடம் பேசி வருகிறார்கள். அதுபோல சில எதிர்க்கட்சி தலைவர்களிடமும் அவர்கள் பேச்சுவார்த்தையை தொடங்கி உள்ளனர். என்றாலும் 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளரை களம் இறக்க காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் முடிவு செய்துள்ளன.

தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவாரை எதிர்க்கட்சிகன் பொது வேட்பாளராக களம் இறக்க முயற்சிகள் நடந்து வருகிறது. இதுதொடர்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான மல்லிகார்ஜுன கார்கே கடந்த வாரம் சரத் பவாரை சந்தித்து பேசினார். பிறகு மகாராஷ்டிர முதல்-மந்திரி உத்தவ் தாக்கரேயையும் சந்தித்து ஆலோசனை நடத்தினார். சரத்பவார் அனைத்து கட்சிகளுடன் நல்ல அணுகுமுறையில் இருப்பதால் அவரை ஜனாதிபதி வேட்பாளராக நிறுத்தலாம் என்று சோனியா விரும்புகிறார். எனவே ஜனாதிபதி தேர்தல் தேதி அட்டவணை வெளியிடப்பட்டதும் அவர் முதன் முதலில் சரத் பவாருடன் போனில் பேசினார். அதுபோல இடதுசாரி கட்சி தலைவர்களும் சரத்பவாருக்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

சரத்பவாரை பொது வேட்பாளராக நிறுத்தலாம் என்று முடிவு செய்து காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்டு கட்சி தலைவர்கள் மற்ற எதிர்க்கட்சிகளிடம் ஆதரவு திரட்டி வருகிறார்கள். குறிப்பாக மேற்கு வங்காள முதல்-மந்திரியும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜியிடம் காங்கிரஸ், கம்யூனிஸ்டு தலைவர்கள் தொடர்ந்து பேசி வருகிறார்கள். மம்தா பானர்ஜி தனது கட்சியை சேர்ந்த ஒருவரை ஜனாதிபதி பதவிக்கு போட்டியிட செய்ய வேண்டும் என்று நினைக்கிறார். இதற்காகவே அவர் நாளை (புதன்கிழமை) டெல்லியில் 22 எதிர்க்கட்சி தலைவர்களின் கூட்டத்துக்கு அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் அவர் தனது விருப்பத்தை வெளிப்படுத்துவார் என்று தெரிகிறது. குறிப்பாக சமீபத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த முன்னாள் பா.ஜனதா தலைவரும், முன்னாள் மத்திய மந்திரியுமான யஷ்வந்த் சின்காவை எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக போட்டியிட செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி விரும்புகிறார்.

ஆனால் அவரது திட்டத்துக்கு எதிர்க்கட்சிகளின் ஒருமித்த ஆதரவு கிடைக்கவில்லை. பா.ஜனதாவில் இருந்து வந்த ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தக்கூடாது என்று காங்கிரஸ், இடதுசாரிகள் திட்டவட்டமாக கூறிவிட்டன. எனவே நாளை மம்தா பானர்ஜி நடத்தும் கூட்டத்தில் தி.மு.க., ஆம்ஆத்மி, போன்ற கட்சிகளும் பங்கேற்காது என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக களம் இறங்க தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார் தயக்கத்தை வெளியிட்டுள்ளார். நேற்று அவர் தனது கட்சி மூத்த தலைவர்களுடன் பேசுகையில், ‘பொது வேட்பாளராக போட்டியிட எனக்கு விருப்பமில்லை’ என்று கூறியுள்ளார்.

எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் பட்டியலில் நான் இல்லை என்றும் அவர் தெளிவுபட கூறி உள்ளார். 81 வயதாகும் சரத் பவார் தனக்கு பதில் காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரை பொது வேட்பாளராக நிறுத்தச்செயலாம் என்று கூறி வருகிறார். குறிப்பாக காங்கிரஸ் மூத்த தலைவர்களில் ஒருவரான குலாம்நபி ஆசாத்தை பொது வேட்பாளராக நிறுத்த வேண்டும் என்று சரத்பவார் விரும்புகிறார். தனது விருப்பத்தை அவர் காங்கிரஸ் தலைவர்களிடம் தெரிவித்து உள்ளார். இந்த நிலையில் காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சிகள் டெல்லியில் நாளை கூடி ஜனாதிபதி பொது வேட்பாளர் தொடர்பாக ஆலோசனை நடத்த உள்ளன.

இந்த கூட்டத்தில் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளர் பற்றி ஒருமித்த முடிவு எடுக்கப்பட்டு விடும் என்று உறுதியாக தெரிகிறது. காங்கிரஸ், இடதுசாரிகள், சிவசேனா உள்பட பல கட்சிகள் சரத்பவாரையே ஆதரிக்கின்றன. எனவே அவர் எதிர்க்கட்சிகளின் பொது வேட்பாளராக தேர்வு செய்யப்படுவாரா என்பது நாளை தெரிந்து விடும். சரத் பவாருக்கு பெரும்பாலான கட்சிகள் ஆதரவு அளிக்கும் பட்சத்தில் மம்தா பானர்ஜி, சந்திர சேகர ராவ், நவீன் பட்நாயக் போன்ற தலைவர்களும் ஆதரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சரத் பவாரை முன் நிறுத்தினால் மட்டுமே அனைத்து எதிர்க்கட்சிகளையும் ஓர் அணியில் ஒன்று திரட்ட முடியும் என்று சோனியா கருதுகிறார். எனவே நாளை முக்கிய முடிவுகள் எடுக்கப்பட உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.