;
Athirady Tamil News

இறந்த தம்பியின் உடலை சாலையோரம் மடியில் வைத்து அமர்ந்திருந்த 8 வயது சிறுவன்..!!

0

மத்திய பிரதேச மாநிலம் அம்பா பத்ரா கிராமத்தைச் சேர்ந்தவர் பூஜாராம் யாதவ். இவரின் 2 வயது இளைய மகன் ராஜாவுக்கு திடீர் உடல் நலக்குறைவு ஏற்பட்டது. வயிற்று வலியால் அவதிப்பட்ட சிறுவனை அவனது தந்தை பூஜா ராம் மொரேனா மாவட்ட அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தார். இவர்களுடன் ராஜாவின் அண்ணன் எட்டு வயது குல்சன் ஆஸ்பத்திரிக்கு உடன் சென்றான். பின்னர் மேல் சிகிச்சைக்காக வேறொரு ஆஸ்பத்திரிக்கு சிறுவன் அனுப்பி வைக்கப்பட்டான். இந்த நிலையில் அந்த சிறுவன் சிகிச்சை பலனளிக்காமல் பரிதாபமாக இறந்து விட்டான். இதையடுத்து ஆஸ்பத்திரி நிர்வாகம் உடலை பெற்றுச்செல்லுமாறு கூறியது. உடனே பூஜாராம் சொந்த ஊர் செல்ல 30 கி.மீ. தூரம் பயணிக்க வேண்டும். ஆகவே ஒரு ஆம்புலன்ஸ் அனுப்பி வைக்குமாறு வேண்டினார். அப்போது ஆஸ்பத்திரி நிர்வாகத்தினர் இப்போது ஆம்புலன்ஸ் எதுவும் இல்லை. தனியார் ஆம்புலன்சுக்கு பணம் கட்டி கொண்டு செல்லுமாறு கூறினர். அப்போது அங்கு நின்று கொண்டிருந்த தனியார் ஆம்புலன்ஸ் டிரைவரிடம் சென்று கேட்டபோது பத்ரா கிராமத்துக்கு செல்ல ரூ.1,500 செலுத்த வேண்டும் என்று கூறினார். ஆனால் அந்தத் தொகை தன்னிடம் இல்லை என்பதால் குறைந்த வாடகைக்கு வேறு வாகனம் கிடைக்குமா என்று பூஜாராம் தேடச் சென்றார். இதற்கிடையே இறந்த சிறுவனின் உடலை அவனது மூத்த சகோதரன் குல்சனிடம் ஒப்படைத்துச் சென்றார். ஏதும் அறியாத அப்பாவி சிறுவன் குல்சன் டவுன் பகுதியில் உள்ள நேரு பூங்கா அருகாமையில் சாலையோரம் இறந்த ரெண்டு வயது தம்பியின் உடலுடன் அமர்ந்திருந்தான். சுமார் அரை மணி நேரமாக இறந்த சகோதரனின் உடலை தன் மடி மீது வைத்து உட்கார்ந்து இருந்ததை கண்டு மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனே அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்து ஏராளமானோர் அங்கு திரண்டனர். பின்னர் போலீஸ் அதிகாரிகள் ஒரு ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்து டிரைவரிடம் உடலை வீட்டுக்கு உடலை எடுத்துச் செல்லும்படி கூறினர். இதுகுறித்து பூஜாராம் கூறும்போது, நான் ஒரு ஏழை, மனைவி வீட்டில் இல்லை. இந்த நிலையில் அவன் என்ன சாப்பிட்டான் என்று எனக்கு தெரியவில்லை. உடல்நிலை மோசமானதால் ஆஸ்பத்திரிக்கு கொண்டு வந்தோம். ஆனால் அவன் இறந்துவிட்டான். அவனது உடலை எடுத்துச் செல்ல இலவச ஆம்புலன்ஸ் கிடைக்கவில்லை. ஆஸ்பத்திரி நிர்வாகம் அதற்கான ஏற்பாடுகளை செய்ய தவறிவிட்டது என்றார். மொரேனா ஆஸ்பத்திரி டாக்டர் வினோத் குப்தா கூறும் போது, அந்த சிறுவன் ரத்த சோகையால் பாதிக்கப்பட்டிருந்தான். கல்லீரலும் பாதிக்கப்பட்டிருந்தது. காப்பாற்ற எடுத்த முயற்சிகள் தோல்வி அடைந்தது. உடலை எடுத்துச் செல்ல ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தோம். வாகனம் வருவதற்கு முன்பாகவே அவனது தந்தை சிறுவனின் உடலை எடுத்து க்கொண்டு வெளியே சென்று விட்டதாக தெரிவித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.