;
Athirady Tamil News

பொருளாதார பாதிப்புக்கு விரைவான தீர்வின்றேல் நாட்டுக்கு எதிர்காலம் கிடையாது -ஹர்ஷ டி சில்வா!!

0

தேசிய மட்டத்திலான பொருளாதார வரைபுகளுக்கு அமைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.

பொருளாதார பாதிப்புக்கு விரைவாக தீர்வு காணாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் என்பதொன்று கிடையாது.பொருளாதார மீட்சிக்கான திட்டம் எம்மிடம் உள்ளது என ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் ஹர்ஷ டி சில்வா தெரிவித்தார்.

குருநாகல் நகரில் ஞாயிற்றுக்கிழமை (29) இடம்பெற்ற ஐக்கிய மக்கள் சக்தியின் முதலாவது தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் கலந்துக் கொண்டு உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

அவர் மேலும் குறிப்பிட்டதாவது,

நாடு வரலாற்றில் என்றுமில்லாத வகையில் பொருளாதார நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.பொருளாதார நெருக்கடிக்கு வெகு விரைவாக தீர்வு காணாவிட்டால் நாட்டுக்கு எதிர்காலம் என்பதொன்று கிடையாது,2022 ஆம் ஆண்டு மே ஏப்ரல் முதல் ஜூலை மாதம் வரை நாடு எவ்வாறான நெருக்கடியை எதிர்கொண்டிருந்தது என்பதை மக்கள் நன்கு அறிவார்கள்.

வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தற்போது நாட்டுக்கு அதிளவில் வருகிறார்கள்,வெளிநாட்டு செலாவணி அதிகம் கிடைக்கப் பெறுகிறது,ஆகவே பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு கண்டு விட்டோம் என ஆளும் தரப்பு குறிப்பிடுவது நாட்டு மக்களை ஏமாற்றும் பிறிதொரு செயற்பாடாகும்.

வங்குரோத்து நிலையில் இருந்து மீண்டெழ வேண்டுமாயின் இலங்கையின் முதன் நிலை கடன் வழங்குநர்களின் இணக்கப்பாட்டுடன் வெளிநாட்டு கடன்கள் மறுசீரமைக்கப்பட வேண்டும்,அல்லது கடன் செலுத்தல் தவணை பிற்போட வேண்டும்.

சர்வதேச பிணைமுறி தனியார் கடன் வழங்குநர்களுக்கு 14 பில்லியன் டொலர் செலுத்த வேண்டியுள்ளது.மறுபுறம் இந்தியா,சீனா ஆகிய நாடுகள் பிரதான நிலை கடன் வழங்குநர்களாக உள்ளனர்.பிரதான நிலை கடன் வழங்குநர்களின் இணக்கப்பாட்டுடன் வெளிநாட்டு கடன்களை மறுசீரமைக்க வேண்டும்.

பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண வேண்டுமாயின் சர்வதேசத்தின் நம்பிக்கையை அரசாங்கம் பெற்றுக்கொள்ள வேண்டும்.இந்த அரசாங்கத்திற்கு சர்வதேச அங்கிகாரம் உள்ளதா என்பது சந்தேகத்திற்குரியதாக உள்ளது.

இலங்கையின் சட்டத்திற்கு அமைய வெளிநாட்டு கடன்களை மறுசீரமைக்க முடியாது,அமெரிக்காவின் சட்டத்திற்கு அமையவே வெளிநாட்டு கடன்களை மறுசீரமைக்க முடியும்.கடன் மறுசீரமைப்புக்கான தீர்மானங்கள் சமூகத்தில் ஒரு தரப்பினருக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை ஏற்றுக்கொள்ள முடிகிறது.

தேசிய மட்டத்திலான பொருளாதார வரைபுகளுக்கு அமைய பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காண முடியாது.பொருளாதார நெருக்கடிக்கு தீர்வு காணும் திட்டங்கள் எம்மிடம் உள்ளது என்றார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.