;
Athirady Tamil News

ஆதியோகி சிலையை ஹெலிகாப்டரில் பார்வையிடும் ஜனாதிபதி திரவுபதி முர்மு- பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!!

0

கோவை பூண்டி அருகே ஈஷா யோகா மையம் உள்ளது. இந்த யோகா மையத்தில் வருடந்தோறும் மகா சிவராத்திரி விழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான மகா சிவராத்திரி விழா வருகிற 18-ந்தேதி நடக்கிறது. தியான லிங்கத்தில் பஞ்சபூத ஆராதனையுடன் மகா சிவராத்திரி வழா தொடங்குகிறது. லிங்க பைரவி தேவியின் மகா யாத்திரை, உள்நிலையில் பரவசத்தில் ஆழ்த்தும் சக்தி வாய்ந்த தியானங்கள், சத்குருவின் சத்சங்கம், கண்ணை கவரும் ஆதியோகி திவ்ய தரிசன காட்சி, பாரத பாரம்பரியத்தை பறைசாற்றும் புகழ்பெற்ற கலைஞர்களின் இசை, நடன நிகழ்ச்சியுடன், அன்று மாலை 6 மணி முதல் மறுநாள் காலை 6 மணி வரை நடக்கிறது.

ஒவ்வொரு ஆண்டும் மகா சிவராத்திரியிலும் முக்கிய பிரமுகர்கள் பங்கேற்று வருகின்றனர். இந்த ஆண்டு நடைபெறும் மகா சிவராத்திரி விழாவில் ஜனாதிபதி திரவுபதி முர்மு பங்கேற்கிறார். இதற்காக அவர் வருகிற 18-ந்தேதி காலை டெல்லியில் இருந்து விமானப்படை விமானம் மூலம் மதுரை விமான நிலையத்துக்கு செல்கிறார். அங்கிருந்து கார் மூலமாக மதுரை மீனாட்சியம்மன் கோவிலுக்கு செல்கிறார். அங்கு மீனாட்சியம்மனை தரிசித்து விட்டு கோவிலை சுற்றி பார்க்கிறார்.

தொடர்ந்து கார் மூலமாக மதுரை விமான நிலையம் செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார். பின்னர் சூலூரில் இருந்து ஹெலிகாப்டர் மூலமாக ஈஷா யோகா மையத்திற்கு மாலை 6 மணிக்கு வருகிறார். ஈஷா யோகா மையத்திற்கு வரும் ஜனாதிபதி திரவுபதி முர்முவை, ஈஷா மைய நிறுவனர் சத்குரு மற்றும் நிர்வாகிகள் வரவேற்கின்றனர். அதனை தொடர்ந்து ஈஷா வளாகத்தில் உள்ள லிங்க பைரவி, தியானலிங்கம், 112 அடி உயரம் உள்ள ஆதியோகி சிலை உள்ளிட்டவற்றையும் பார்வையிடுகிறார். பின்னர் ஆதியோகி சிலை முன்பு நடைபெறும் மகா சிவராத்திரி விழாவிலும் பங்கேற்கிறார். மேலும் ஜனாதிபதி ஹெலிகாப்டரில் இருந்த படியே ஆதியோகி சிலையை பார்வையிட உள்ளார். இதற்கான ஏற்பாடுகளையும் ஈஷா மைய நிர்வாகத்தினர் செய்து வருகிறார்கள்.

பின்னர் அவர் நிகழ்ச்சிகளை முடித்து கொண்டு அங்கிருந்து ஹெலிகாப்டரில் சூலூர் விமானப்படை தளத்திற்கு வருகிறார். அங்கிருந்து அவர் டெல்லி புறப்பட்டு செல்வதாக போலீஸ் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஜனாதிபதி வருகையை முன்னிட்டு, கோவை மாநகர் புறநகரில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்படுகிறது. மாவட்டம் முழுவதும் 5 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட உள்ளதாகவும் கூறப்படுகிறது. இது தொடர்பாக போலீஸ் உயர் அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

மேலும் கோவையில் ஜனாதிபதி வருகையை முன்னிட்டு செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடுகளை அறிவதற்காக ஜனாதிபதியின் சிறப்பு பாதுகாப்பு பிரிவினர் விரைவில் கோவை வருகை தர உள்ளனர். அவர்கள் கோவை வந்து, உயர் போலீஸ் அதிகாரிகளிடம் பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து கேட்டறிகின்றனர். இதற்கிடையே ஜனாதிபதி திரவுபதி முர்மு குன்னூர் வெலிங்டனில் நடைபெறும் ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்க வாய்ப்புள்ளதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.