;
Athirady Tamil News

துருக்கி – சிரியாவை துரத்தும் சோகம்: இடிபாடுகளில் மீட்கப்பட்டவர்கள் கடும் குளிர் – பசியால் தவிப்பு!!

0

துருக்கி- சிரியா நாடுகளை கடந்த திங்கட் கிழமை உலுக்கிய நிலநடுக்கம் அந்நாட்டு மக்களை நிலை குலைய செய்துள்ளது. நிலநடுக்கத்தால் குலுங்கிய ஆயிரக்கணக்கான கட்டிடங்கள் நொடிப்பொழுதில் இடிந்து விழுந்து தடைமட்டமானது. சின்னாபின்னமான கட்டிட இடிபாடுகளில் இருந்து கொத்து கொத்தாக பிணங்கள் மீட்கப்பட்டு வருகின்றன. இதனால் தினமும் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே செல்கிறது. 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பொதுமக்கள் படுகாயம் அடைந்து உள்ளனர். துருக்கி வரலாற்றில் அந்தநாடு சந்தித்த மிக மோசமான நிலநடுக்கம் இது என கருதப்படுகிறது. இந்த கோர சம்பவம் நடந்து இன்று 5 நாளாகி விட்டது. இன்னும் கட்டிட இடிபாடுகளில் ஆயிரக்கணக்கான மக்கள் சிக்கி உள்ளனர். அவர்களை எப்படியும் மீட்டு விட வேண்டும் என்ற துடிப்புடன் மீட்பு படையினர் இரவு பகல் பாராமல் 24 மணி நேரமும் தங்கள் பணிகளை செய்து வருகின்றனர்.

இந்தியா உள்பட பல்வேறு உலக நாடுகளில் இருந்து துருக்கி மற்றும் சிரியா நாட்டுக்கு சென்று உள்ள மீட்பு குழுவினரும் இடிபாடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டுள்ளனர். துருக்கியில் பல வானுயிர கட்டிடங்கள் இடிந்து கிடக்கிறது. இதனால் மலை போல குவிந்துள்ள இடிபாடுகளை அகற்றுவதில் சற்று தாமதம் ஏற்பட்டு உள்ளது. இடிபாடுகளில் இருந்து தொடர்ந்து உயிர் இழந்தவர்களின் உடல்கள் மீட்கப்படுவதால் பலி எண்ணிக்கை 21 ஆயிரத்தை தாண்டி உள்ளது. துருக்கியில் 17,674 பேரும், சிரியாவில் 3,377 பேரும் இது வரை இறந்து உள்ளனர். இதனால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 21,051 ஆக உயர்ந்துள்ளது. கட்டிட இடிபாடுகளில் இன்னும் ஆயிரக்கணக்கான மக்கள் மாட்டிக்கொண்டு வெளியே வர முடியாமல் தவித்து வருகிறார்கள்.

சம்பவம் நடந்து 5 நாட்களாகி விட்டதாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் கடுமையான குளிர் நிலவி வருவதாலும் அவர்கள் இன்னும் உயிருடன் இருக்க பெரும்பாலும் வாய்ப்பு இல்லை என்றே கருதப்படுகிறது. இதனால் சாவு எண்ணிக்கை மேலும் அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது. இருந்த போதிலும் மீட்பு படையினர் நம்பிக்கையுடன் மீட்பு பணியை இடைவிடாமல் செய்து வருகின்றனர்.துருக்கியில் 82 மணி நேரத்துக்கு பிறகு 2 வயது சிறுவன் உயிருடன் மீட்கப்பட்டு உள்ளான். இந்த இயற்கை பேரழிவில் வீடுகள் மற்றும் உறவினர்களை இழந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்ணீரும், கம்பலையுமாக அங்கும் இங்கும் பித்து பிடித்தது போல சுற்றி வருவது சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தரை மட்டமான வீடுகள் மற்றும் கட்டிடங்களில் இருந்து உயிர் பிழைத்தவர்கள் தங்கள் உறவினர்கள் குறித்து தகவல் எதுவும் கிடைக்காமல் தவித்து வருகின்றனர்.

இடிபாடுகளில் சிக்கிய அவர்கள் உயிருடன் மீட்கப்படுவார்களா? என்ற ஏக்கத்தில் மணிக்கணக்கில் காத்து கிடக்கின்றனர். இது ஒரு புறம் இருக்க மறுபுறம் மீட்கப்பட்ட பொதுமக்கள் கடும் குளிராலும் பசி பட்டினியாலும் இருந்து வருவது மேலும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. வீடுகளை இழந்தவர்களுக்காக தற்காலிக கூடாரங்கள் அமைக்கப்ட்டு உள்ளன. இதைத்தவிர மைதானங்கள், மசூதிகளில் பொதுமக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். ஆனால் இது அவர்களுக்கு போதுமானதாக இல்லை. இதனால் வெட்ட வெளிகளிலும், சாலையோரம் நிறுத்தப்பட்டிருக்கும் கார் போன்ற வாகனங்களிலும் அவர்கள் தங்கி இருக்கிறார்கள். இரவு நேரம் கடுமையான பனிப்பொழிவு வாட்டி வதைப்பதால் அவர்கள் தாங்க முடியாத வேதனையை சந்தித்து வருகின்றனர். மேலும் அவர்கள் அடிப்படை வசதியின்றியும் தவிக்கின்றனர். கைக்குழந்தைகள் பாலுக்காக அழும் காட்சி நெஞ்சை உருக்குவதாக உள்ளது. அவர்களுக்கு சரிவர உணவு, மற்றும் குடிநீர் எதுவும் கிடைக்கவில்லை.

நில நடுக்கம் ஏற்பட்ட பகுதிகளில் சாலைகள் மற்றும் விமான நிலையங்கள், ரெயில் தண்ட வாளங்கள் சேதம் அடைந்து உள்ளதால் நிவாரண பொருட்கள் கொண்டு செல்வதில் பல்வேறு சிரமங்கள் ஏற்பட்டு உள்ளது. துருக்கியில் 7 நகரங்கள் முற்றிலும் உருக்குலைந்த நிலையில் கிடக்கிறது. இங்கு பொது மருத்துவ மனைகள் உள்பட 3 ஆயிரம் கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளதாக அந்நாட்டு அரசு அறிவித்து உள்ளது. இதேநிலைமை தான் சிரியா நாட்டிலும் நிலவுகிறது. ஏற்கனவே உள்நாட்டு போரால் பாதிக்கப்பட்டுள்ள சிரியா மக்களின் வாழ்க்கையை தற்போது நிலநடுக்கம் மேலும் புரட்டி போட்டு உள்ளது. இந்தியா உள்ளிட்ட நாடுகள் நிவாரண பொருட்கள் மற்றும் நன்கொடை வழங்குமாறு சிரியா கோரிக்கை விடுத்து உள்ளது. நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட 2 நாடுகளுக்கும் தேவையான உதவிகளை இந்தியா செய்யும் என பிரதமர் மோடி தெரிவித்து இருந்தார்.

இதையடுத்து மத்திய அரசு உடனடியாக மீட்பு குழு மற்றும் மருத்துவ குழுவினரை போர் விமானம் மூலம் அந்த நாடுகளுக்கு அனுப்பி வைத்தது. ஆபரஷேன் தோஸ்த் என்று அழைக்கப்படும் 250 பேர் கொண்ட இந்த படையினர் தற்போது நிலநடுக்க பகுதியில் தீவிரமாக களம் இறக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் தங்களுடன், நவீன கருவிகள் மற்றும் 135 டன் எடை கொண்ட உபகரணங்கள், மருந்து, மாத்திரைகள் உள்ளிட்டவைகளை கொண்டு சென்றனர். மேலும் இடிபாடுகளில் சிக்கி இருப்பவர்களை கண்டுபிடிக்கும் வகையில் நன்கு பயிற்சி பெற்ற மோப்ப நாய்கள் சென்று உள்ளன.

இந்திய படையினர் துருக்கியில் துரிதமாக செயல்பட்டு அங்கு தற்காலிகமாக 30 ஆஸ்பத்திரிகளை அமைத்து உள்ளனர். படுக்கை வசதிகள் கொண்ட இந்த ஆஸ்பத்திரிகளில் ஆபரேஷன் தியேட்டர்கள், எக்ஸ்ரே உள்ளிட்ட வசதிகள் உள்ளன. இங்கு காயம் அடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு இந்திய மருத்துவ குழுவினர் சிறப்பான சிகிச்சை அளித்து வருகிறார்கள். இந்த மீட்பு படையில் இந்திய ராணுவத்தை சேர்ந்த 2 பெண் அதிகாரிகளும் இடம் பெற்று உள்ளனர்.

இவர்களின் அயராத உழைப்பு துருக்கி மக்களிடயே சோகத்தை மறந்து பாராட்டுகளை பெற்று உள்ளது. துருக்கி பெண்கள் இந்திய ராணுவ பெண் அதிகாரிகளை கட்டிப்பிடித்து கன்னத்தில் முத்தமிட்டு தங்கள் நன்றியை தெரிவித்தனர். இந்த காட்சி தற்போது சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.