;
Athirady Tamil News

மூத்த குடிமக்கள் பயணம் மூலம் ரூ.2,242 கோடி கூடுதல் வருவாய்: ரெயில்வே தகவல்!!

0

60 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய ஆண்களுக்கும், திருநங்கைகளுக்கும் ரெயில்களில் 40 சதவீத கட்டண தள்ளுபடியும், 58 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடைய பெண்களுக்கு 50 சதவீத கட்டண தள்ளுபடியும் வழங்கப்பட்டு வந்தது. ரெயில்களில் பல்வேறு பிரிவினருக்கு அளிக்கப்பட்டு வந்த கட்டண சலுகைகளில் மூத்த குடிமக்களுக்கான சலுகை மட்டும் 80 சதவீத இடத்தை பிடித்தது. இதற்கிடையே, கொரோனா பரவல் காரணமாக, கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதி, மூத்த குடிமக்களுக்கான ரெயில் கட்டண சலுகை ரத்து செய்யப்பட்டது. ரெயில் சேவை முழுமையாக சீரடைந்த போதிலும், அந்த சலுகை இன்னும் வழங்கப்படவில்லை. மீண்டும் கட்டண சலுகை வழங்கக்கோரி, சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

இந்நிலையில், மத்தியபிரதேசத்தை சேர்ந்த சந்திரசேகர் கவுர் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டத்தின்கீழ், மூத்த குடிமக்கள் பயணத்தால் கிடைத்த வருவாய் குறித்து கேள்வி கேட்டிருந்தார். அதற்கு ரெயில்வே நிர்வாகம் பதில் அளித்துள்ளது. ரெயில்வே கூறியிருப்பதாவது:- மூத்த குடிமக்கள் பயணம் மூலம் கிடைக்கும் வருவாய் சீராக உயர்ந்து வருகிறது. 2020-ம் ஆண்டு மார்ச் 20-ந் தேதி முதல் 2022-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை 7 கோடியே 31 லட்சம் மூத்த குடிமக்கள், ரெயிலில் பயணம் செய்தனர். அவர்கள் மூலம் ரூ.3 ஆயிரத்து 464 கோடி வருவாய் கிடைத்தது. கட்டண சலுகையை அளித்திருந்தால், ரூ.1,500 கோடி குறைவாகத்தான் கிடைத்திருக்கும்.

சலுகையை ரத்து செய்ததன் மூலம், ரூ.1,500 கோடி கூடுதலாக கிடைத்துள்ளது. அதுபோல், 2022-ம் ஆண்டு ஏப்ரல் 1-ந் தேதி முதல் 2023-ம் ஆண்டு மார்ச் 31-ந் தேதிவரை ரெயில்களில் பயணித்த மூத்த குடிமக்கள் மூலம் ரூ.5 ஆயிரத்து 62 கோடி வருவாய் கிடைத்தது. இதில், கட்டண சலுகையை ரத்து செய்ததால் கிடைத்த ரூ.2 ஆயிரத்து 242 கோடி கூடுதல் வருவாயும் அடங்கும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.