;
Athirady Tamil News

பிளீச்சிங் பவுடர் வாங்கியதில் முறைகேடு: வட்டார வளர்ச்சி அலுவலர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை!!

0

பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் என்பவர் அரசின் திட்டங்களை செயல்படுத்துவதில் முறைகேடு செய்ததாக எழுந்த புகார் காரணமாக தருமபுரியில் உள்ள அவரது வீட்டில் லஞ்ச ஒழிப்புதுறையினர் சோதனை நடத்தி வருகின்றனர். தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக கிருஷ்ணன் என்பவர் பணியாற்றி வருகிறார். இவர் தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கருவூல காலனி பகுதியில் வசித்து வருகிறார். இவர் கடந்த 2018-ம் ஆண்டு முதல் 2019-ம் ஆண்டு வரை தருமபுரி மாவட்டத்தில் உள்ள மொரப்பூர், காரிமங்கலம், பாலக்கோடு, பென்னாகரம், ஏரியூர், தருமபுரி, நல்லம்பள்ளி, பாப்பிரெட்டிப்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் வட்டார வளர்ச்சி அலுவலராக பணிபுரிந்து வந்தார்.

தற்போது அவர் பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றி வருகிறார். கிருஷ்ணன் கடந்த 2019-ம் ஆண்டு பென்னாகரம் வட்டார வளர்ச்சி அலுவலராக பணியாற்றியபோது அரசின் திட்டங்களை செயல்படுத்துவது தொடர்பாக கொரோனா காலங்களில் பிளீச்சிங் பவுடர் கொள்முதலில் முறைகேட்டில் ஈடுபட்டதாக புகார் எழுந்துள்ளது. இதுதொடர்பாக சேலம் மாவட்ட லஞ்சஒழிப்பு துறை போலீஸ் சூப்பிரண்டு கிருஷ்ணா ராஜன் வழக்கு பதிவு செய்து பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணன் வீட்டில் சோதனை செய்ய உத்தரவிட்டார். இதனை தொடர்ந்து தருமபுரி மாவட்ட லஞ்ச ஒழிப்பு துறையினர், இன்ஸ்பெக்டர் பழனிசாமி தலைமையிலான 7 பேர் கொண்ட குழுவினர், தருமபுரி மாவட்ட கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள கருவூல காலனியில், வட்டார வளர்ச்சி அலுவலர் கிருஷ்ணனின் வீட்டில் இன்று காலை 6 மணி முதல் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த முறைகேட்டில் ரூ.27.84 லட்சம் வரை கையாடல் செய்தது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்தது.

இதில் விழுப்புரம் மாவட்டம் சாலமேடு அசனகுளம் பகுதியைச் சேர்ந்த பாப்பாத்தி என்பவருக்கு சொந்தமான ஸ்ரீநடியம்பாள் ஏஜென்சி நிறுவனத்திற்கும், சென்னை பத்மாவதி நகரைச் சேர்ந்த வீரய்யா பழனிவேலுக்கு சொந்தமான நாக டிரேடர்ஸ் நிறுவனத்திற்கும், சுப்பாராவ் நகரைச் சேர்ந்த தாகீர்உசேன் என்பவருக்கு சொந்தமான கிரசண்ட் டிரேடர்ஸ் நிறுவனத்திற்கும், காஞ்சிபுரம் மடிவாக்கம் பகுதியில் உள்ள வனரோஜா என்பவருக்கும் சொந்தமான ஆர்.வி.என் என்ற நிறுவனத்திற்கும் இந்த முறைகேடுகளில் தொடர்பு உள்ளது என்று லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு தெரியவந்தது. அந்த 4 நிறுவனங்களிலும் சோதனை நடத்த லஞ்ச ஒழிப்பு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து அந்தந்த நிறுவனங்களில் லஞ்ச ஒழிப்பு போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.