;
Athirady Tamil News

பங்குச்சந்தை வரலாற்றில் முதல்முறையாக 20 ஆயிரம் தொட்ட நிஃப்டி!!

0

இந்திய பங்குச்சந்தையில் தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி மற்றும் மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் ஆகியவை முக்கியத்துவம் வாய்ந்தவையாக கருதப்படுகிறது. இந்திய பங்குச்சந்தைகளில் நிறுவனங்களின் பங்குகளை வாங்குவதும் விற்பதும் ஒவ்வொரு வாரமும் திங்கட்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை 5 நாட்கள் நடைபெறும். வாரத்தின் முதல் நாளான இன்று இந்திய பங்குச்சந்தையின் இரண்டு குறியீட்டு எண்களில் ஒன்றான தேசிய பங்கு சந்தை குறியீட்டு நிஃப்டி, முதல் முறையாக 20 ஆயிரம் புள்ளிகளை கடந்தது.

பங்குச்சந்தை முதலீட்டாளர்களிடையே பெறும் மகிழ்ச்சியை ஏற்படுத்திய இந்த உயர்வு, நிஃப்டி வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். விண்வெளியில் உலகயே திரும்பி பார்க்க வைத்த சாதனை, ஜி20 உச்சி மாநாட்டின் வெற்றி, குறைந்து வரும் காய்கறிகளின் விலை, ஒரு வருடமாக அதிகரிக்காமல் இருக்கும் பெட்ரோல் விலை மற்றும் குறைய தொடங்கி இருக்கும் விலைவாசி ஆகிய காரணிகளால் இந்தியர்களின் “வாங்கும் சக்தி” உயரக்கூடும் என பெருமுதலீட்டாளர்கள் நம்புவதால் இந்த ஏற்றம் உண்டாகி இருப்பதாக பங்குச்சந்தை ஆலோசகர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்திய தொழில்துறையிலும், இந்திய பங்குச்சந்தையிலும் முக்கிய நிலையில் உள்ள ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் மற்றும் ஹெச்.டி.எஃப்.சி. ஆகியவற்றை வாங்குவதில் முதலீட்டாளர்கள் ஆர்வம் காட்டினர். இதனாலும் இந்த உயர்வு ஏற்பட்டிருக்கலாம் என சில ஆலோசகர்கள் கூறுகின்றனர். காலை தொடக்க நிலையிலிருந்து சந்தை நிறைவடையும் நேரத்திற்குள் நிஃப்டி 188 புள்ளிகள் உயர்ந்து 20 ஆயிரத்தை தொட்டு 19,996 எனும் அளவில் முடிவடைந்தது.

கடந்த வெள்ளிக்கிழமை அன்று அமெரிக்க பங்குச்சந்தை நம்பிக்கை அளிக்கும் விதத்தில் நிறைவடைந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.