;
Athirady Tamil News

நிலவில் விக்ரம் லேண்டர், பிரக்யான் ரோவருக்கு அச்சுறுத்தல்: ஆய்வாளர்கள் அச்சம்

0

நிலவில் விக்ரம் லேண்டருக்கும் பிரக்யான் ரோவருக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நிலவை ஆய்வு செய்வதற்காக கடந்த 2008 -ஆம் ஆண்டு ‘சந்திரயான் 1’ கலத்தை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது இஸ்ரோ. இந்த சந்திரயான் 1 கலம் முதல் முறையாக நிலவில் நீர் இருப்பதற்கான தடயங்களை பூமிக்கு அனுப்பி அதிரவைத்தது. அதனைத் தொடர்ந்து சுமார் 10 ஆண்டுகளுக்கு பின்னர் ரூ.603 கோடி செலவில் ‘சந்திரயான் 2’ விண்கலம் உருவாக்கப்பட்டது.

இதில் நிலவில் தரையிறங்கி செயல்படும் ‘விக்ரம்’ என்ற லேண்டர் இயந்திரமும் உடன் அனுப்பப்பட்டது. ‘சந்திரயான் 2’ வெற்றிகரமாக நிலவின் சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தப்பட்ட நிலையில், அதன் லேண்டர் இயந்திரத்தை நிலவில் தரையிறக்க முயன்றபோது, நிலவுக்கு 2.1 கிமீ தூரத்தில் சிக்னலை இழந்தது. அதன் பின்னர் நிலவின் தென் துருவ பகுதியில் விக்ரம் லேண்டர் விழுந்து நொறுங்கியது கண்டறியப்பட்டது.

பின்னர் ‘சந்திரயான் 3’ விண்கலம் நிலவுக்கு ஏவப்பட்டது. அதிலிருந்து பிரிந்த விக்ரம் லேண்டர் சில நாட்களுக்கு முன்னர் ஆகஸ்ட் 23 ஆம் தேதி வெற்றிகரமான நிலவில் தரையிறக்கி அதன் ரோவர் நிலவில் தனது ஆய்வுப் பணியை தொடங்கியது. நிலவில் 14 நாட்கள் ஆய்வு செய்தபின்னர் நிலவில் சூரியன் மறைந்ததால் விக்ரம் லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவை உறக்கநிலைக்கு கொண்டுசெல்லப்பட்டன.

நிலவில் மீண்டும் சூரியன் உதயமாகிய பின்னர் இந்த லேண்டர் மற்றும் ரோவர் ஆகியவற்றை செயல்பாட்டுக்கு கொண்டுவர முயற்சி மேற்கொள்ளப்படும் என இஸ்ரோ அறிவித்தது.

அதன்படி, விக்ரம் லேண்டர் இருக்கும் பகுதியில் சூரிய ஒளி மீண்டும் வந்த நிலையில், ரோவர் மற்றும் விக்ரம் லேண்டர் ஆகியவற்றுடன் தொடர்பை மீண்டும் ஏற்படுத்த இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ முயற்சிகளை மேற்கொண்டதில், இதுவரை எந்த சிக்னலும் கிடைக்கப் பெறவில்லை. அதனை தொடர்பு கொள்வதற்கான முயற்சிகள் தொடர்ந்து நடைபெறும் என்று இஸ்ரோ தெரிவித்தது.

இஸ்ரோ தலைவர் எஸ் சோம்நாத் கூறுகையில், விண்கலத்தின் பணி முடிந்தது, ஆனால் அது பூமிக்குத் திரும்பாமல் நிலவின் மேற்பரப்பில் இருக்கிறது. விக்ரம் லேண்டர் அதன் “வேலையை நன்றாக” செய்த பிறகு “மகிழ்ச்சியாக உறங்குகிறது”. உறக்கநிலையில் இருக்கும்போது விண்கலம் தொடர்ந்து புதிய ஆபத்துகளை எதிர்கொள்கிறது, அவற்றில் ஒன்று நிலவுக்கு வெளியே இருந்து வந்துள்ளது என்று தெரிவித்தார்.

நிலவில் விக்ரம் லேண்டர் மற்றும் பிரக்யான் ரோவரை அச்சுறுத்துவது எது?
இந்த நிலையில், விக்ரம் லேண்டருக்கும் பிரக்யான் ரோவருக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

நிலவின் வளிமண்டலம் இல்லாத நிலையில், அதன் மீது ஏராளமான விண்கற்களும், பாறைகளும் அன்றாடம் மோதுவது வழக்கமாக உள்ளது. அப்படி நிலவில் மோதும் பாறைகள் விக்ரம் லேண்டர் அல்லது பிரக்யான் ரோவர் மீது மோதக்கூடும் என்று ஆய்வாளர்கள் கூறியுள்ளனர்.

ஒருவேளை அப்படி மோதினால் விக்ரம் லேண்டர் அல்லது பிரக்யான் ரோவர் வெடித்து சிதறவும் வாய்ப்பிருப்பதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடந்த காலங்களில் அப்பல்லோ விண்கலம் இதேபோன்ற பாதிப்பை சந்தித்துள்ள நிலையில், தற்போது விக்ரம் லேண்டர் அல்லது பிரக்யான் ரோவருக்கும் இந்த நிலை ஏற்படலாம் என விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

அபாயம் இல்லை
விண்கலம் பாதிக்கப்படும் அபாயம் இல்லை என மணிபால் இயற்கை அறிவியல் மையத்தின் பேராசிரியரும் இயக்குநருமான டாக்டர் பி.ஸ்ரீகுமார் தெரிவித்துள்ளார்.

நிலவில் வளிமண்டலமோ அல்லது ஆக்ஸிஜனோ இல்லை என்பதே இதற்குக் காரணம். இருப்பினும், இரவில் கடுமையான குளிரால் அதன் மீது ஏராளமான விண்கற்களும், பாறைகளும் மோதக்கூடிய வாய்ப்பு இருப்பதால் விண்கலத்திற்கு கூடுதல் தீங்கு விளைவிக்குமா என்பது இன்னும் தெரியவில்லை என தெரிவித்துள்ளார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.