;
Athirady Tamil News

தலைமன்னாரிலிருந்து தனுஷ்கோடியை நீந்திக் கடக்க முயன்ற முதியவர் நடுக்கடலில் உயிரிழப்பு!

0

தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல்முனை வரை தொடர் ஓட்ட முறையில் நீந்தி கடக்க முயன்ற பெங்களூரைச் சேர்ந்த முதியவர் நடுக்கடலில் நெஞ்சு வலி காரணமாக உயிரிழந்துள்ளார்.

இலங்கையின் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி வரை உள்ள 30 கிலோமீற்றர் தூரம் பாக் ஜலசந்தி கடல் பகுதியை சமீப காலமாக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களை சேர்ந்த பல நீச்சல் வீரர்கள் நீந்திக் கடந்து சாதனை படைத்து வருகின்றனர்.

இந்த நிலையில் தலைமன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடப்பதற்கு இந்திய இலங்கை இருநாட்டு அரசிடம் உரிய அனுமதி பெற்று நேற்று (22) 31 பேர் கொண்ட குழு ராமேஸ்வரத்தில் இருந்து படகு மூலம் புறப்பட்டு தலைமன்னார் சென்றடைந்தனர்.

ராமேஸ்வரம் அரசு மருத்துவமனை
அங்கிருந்து இன்று (23) அதிகாலை சுமார் 12.10 மணி அளவில் கடலில் குதித்து தொடர் ஓட்ட முறையில் நீந்த தொடங்கினர். அப்போது சரியாக மூன்று மணி அளவில் தொடர் ஓட்ட நீந்துதலில் மூன்றாவது இடத்தில் இருந்த பெங்களூரை சேர்ந்த கோபால் ராவ் (78) என்பவருக்கு திடீரென நடுக்கடலில் நெஞ்சுவலி ஏற்பட்டது.

இதனையடுத்து அவரை பரிசோதித்த மருத்துவக் குழு நெஞ்சு வலி காரணமாக கோபால் ராவ் உயிரிழந்ததை உறுதிப்படுத்தினர்.

தொடர்ந்து கோபால் ராவ் உடலை தனுஷ்கோடி பாலம் கடற்றொழில் துறைமுகத்திற்கு எடுத்து வந்த பின்னர் உடற்கூற்று ஆய்வுக்காக ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

காவல்துறையினர் விசாரணை
உடன் வந்த நபர் ஒருவர் உயிரிழந்ததால் 30 பேரும் மன்னார் முதல் தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை நீந்தி கடந்து சாதனை படைக்கும் நிகழ்வை கைவிட்டனர்.

இந்த நிலையில் கோபால் ராவ் உயிரிழந்தமை தொடர்பாக ராமேஸ்வரம் நரைன் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.