ஹிருணிகா உள்ளிட்ட 14 சந்தேகநபர்கள் தொடர்பில் பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
ஹிருணிகா பிரேமச்சந்திர (Hirunika Premachandra) உள்ளிட்ட 14 சந்தேகநபர்கள் தொடர்பிலான முறைப்பாடு ஒன்றை எதிர்வரும் ஆண்டு பெப்ரவரி 10 ஆம் திகதி விசாரிக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சர்வதேச மகளிர் தினம் அன்று குருந்துவத்தை காவல்துறை பிரிவில் பொதுமக்களுக்கு இடையூறு செய்யும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் தொடர்பில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
விசாரணை
அத்தோடு, இந்த சம்பவம் தொடர்பான விசாரணை அறிக்கைகள் சட்டமா அதிபர் திணைக்களத்தின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக விசாரணைகளை மேற்கொண்டு வரும் குருந்துவத்தை காவல்துறையினர் நீதிமன்றில் அறிவித்துள்ளனர்.
மேலும், இந்த வழக்கு தொடர்பான சட்டமா அதிபரின் அறிவுறுத்தல்கள் இதுவரை தமக்கு கிடைக்கவில்லை என்றும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
நீதிமன்ற உத்தரவு
சந்தேகநபர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி அத்துல ரணகல, பெண்களுக்கு எதிரான வன்முறைகள் தொடர்பில் சமூகத்திற்கு தெரியப்படுத்துவதற்காகவே சந்தேகநபர்களால் இந்த ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளப்பட்டதாகவும் அரசாங்கத்தை அவமானப்படுத்தும் சதித்திட்டம் எதுவுமில்லை எனவும் நீதிமன்றில் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், இந்த வழக்கு தொடர்பான கோப்புகள் சட்டமா அதிபரின் ஆலோசனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதால், இது தொடர்பில் சட்டமா அதிபருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென நீதவான் குறிப்பிட்டுள்ளார்.
அதன்பிறகு, சம்பந்தப்பட்ட முறைப்பாட்டு மனுவை பெப்ரவரி 10 விசாரிக்க உத்தரவிடப்பட்டது.