;
Athirady Tamil News

உதயநிதி பிறந்தநாள் விழாவில் தள்ளுமுள்ளு: இலவசங்கள் வழங்கும் நிகழ்ச்சி பாதியில் நிறுத்தம்

0

பென்னாகரம்: பென்னாகரத்தில் நடைபெற்ற துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில், இலவச சேலை, பெட்ஷீட், உணவு வழங்கும்போது அதனை பெறுவதற்காக மக்கள் மேடையை நோக்கி முந்தியடித்துக் கொண்டு சென்றதால் கூட்டத்தை கட்டுப்படுத்த முடியாமல் விழாவை திமுக நிர்வாகிகள் பாதியில் நிறுத்திவிட்டு வெளியேறினர்.

திமுக இளைஞா் அணி செயலாளரும், தமிழக துணை முதல்வருமான உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழாவை கொண்டாடும் வகையில்,ஏழை எளியோருக்கு இலவசமாக சேலை, பெட்ஷீட், உணவு வழங்கும் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த விழாவில் கிழக்கு மாவட்ட செயலாளர் தடங்கம் பெ.சுப்பிரமணி,மாநில வர்த்தகரணி துணைச் செயலாளர் தர்மச்செல்வன் ஆகியோர்கள் மக்களுக்கு இலவசமாக சேலை,பெட்ஷீட் உணவு வழங்கும் நிகழ்வை தொடங்கி வைத்தனர்.

பேருந்து நிலையம் பகுதியில் விழா நடத்துவதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில் பொதுமக்கள் ஏராளமானோர் அங்கு குவிந்தனர்.

நிர்வாகிகளின் சார்பில் சுமார் 300-க்கும் மேற்பட்டவருக்கு மட்டுமே நலத்திட்டங்கள் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்த நிலையில், கிளை நிர்வாகிகளால் அழைத்து வரப்பட்ட மக்களுக்கு வழங்கப்படும் பொருட்கள் கிடைக்காத நிலை ஏற்பட்டது. இதனை அறிந்த மக்கள் பொருட்களை பெறுவதற்காக நேரடியாக மேடையை நோக்கி முந்தியடித்துக் கொண்டு சென்றதால் அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

இதையடுத்து நிர்வாகிகள் கூட்ட நெரிசலை தவிர்க்கும் பொருட்டு அழைத்து வரப்பட்ட நபர்களுக்கு மட்டுமே பொருட்கள் வழங்கப்படும் என தெரிவித்ததால் சில பெண்கள் மேடையிலேயே அமர்ந்தனர். தொடர்ந்து கூட்ட நெரிசல் ஏற்பட்டதால் நலத்திட்ட உதவிகளை வழங்காமல் அவசர அவசரமாக விழா ஏற்பாடு செய்திருந்த முக்கிய நிர்வாகிகள் மேடையை விட்டு வெளியேறினர்.

தொடர்ந்து இலவசமாக வழங்கப்படும் பொருட்கள் பெறுவதற்காக மழையையும் பொருட்படுத்தாமல் பொதுமக்கள் மேடையிலேயே அமர்ந்து வருகின்றனர்.

பென்னாகரத்தில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்காமல் பாதியில் நிறுத்தப்பட்டதால் கட்சி நிர்வாகிகளிடையே சலசலப்பு ஏற்பட்டுள்ளது.

பென்னாகரத்தில் நடைபெற்ற உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் இலவச பெட்ஷீட் சேலை உணவு வாங்குவதற்காக மேடையில் அமர்ந்திருக்கும் பொதுமக்கள் .

உதயநிதி ஸ்டாலின் பிறந்தநாள் விழாவில் இலவச நலத்திட்டங்கள் பெறுவதற்காக மேடையின் மீது குவிந்துள்ள பொதுமக்கள்

You might also like

Leave A Reply

Your email address will not be published.