;
Athirady Tamil News

ஜேர்மனியில் தீவிர வலதுசாரி கட்சி பரப்புரை நிகழ்வில் எலோன் மஸ்க்

0

கிழக்கு ஜேர்மனியின் ஹாலேவில் நடந்த ஜேர்மனியின் AfD கட்சியின் தேர்தல் பரப்புரை நிகழ்வின் போது எலோன் மஸ்க் எதிர்பாராத விதமாகத் தோன்றி மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார்.

ஒருவித பன்முக கலாச்சாரம்
அத்துடன் பல வாரங்களில் இரண்டாவது முறையாக தீவிர வலதுசாரிக் கட்சிக்கு ஆதரவாகப் பகிரங்கமாகப் பேசியுள்ளார். AfD கட்சித் தலைவர் ஆலிஸ் வெய்டலுடன் 4,500 பேர்கள் திரண்டிருந்த மண்டபத்தில் உரையாற்றிய மஸ்க்,

ஜேர்மன் கலாச்சாரத்தைப் பாதுகாப்பது மற்றும் ஜேர்மன் மக்களைப் பாதுகாப்பது குறித்தும் காணொளி இணைப்பு மூலம் மஸ்க் பேசியுள்ளார். ஜேர்மனியின் கலாச்சாரம், மதிப்புகள் குறித்து பெருமை கொள்வது நல்லது, எல்லாவற்றையும் நீர்த்துப்போகச் செய்யும் ஒருவித பன்முக கலாச்சாரத்தில் அதை இழக்காமல் இருப்பது நல்லது என்றும் மஸ்க் கூறியுள்ளார்.

மேலும், குழந்தைகள் தங்கள் பெற்றோரின் தவறுகளுக்குக் குற்றவாளிகளாக இருக்கக்கூடாது என்றும் மஸ்க் குறிப்பிட்டுள்ளார். ஆனால், மஸ்கின் இந்த கருத்து ஜேர்மனியின் நாஜி கடந்த காலத்தைக் குறிப்பிடுவதாக கருதப்படுகிறது.

மேலும், கடந்த கால குற்ற உணர்ச்சியில் அதிக கவனம் செலுத்தப்படுகிறது, அதையும் தாண்டி நாம் முன்னேற வேண்டும் என்றும் மஸ்க் தெரிவித்துள்ளார். ஜேர்மன் அரசாங்கத்தின் கீழ் பேச்சுரிமை ஒடுக்குமுறை பற்றிப் பேசிய மஸ்க், தனது சமூக ஊடக பக்கத்தில் ஜேர்மன் சேன்ஸலர் ஓலாஃப் ஷோல்ஸை கடுமையாக விமர்சித்திருந்தார்.

ஆனால் மஸ்கிற்கு பதிலளிக்கும் வகையில் செவ்வாய்க்கிழமை ஷோல்ஸ் தெரிவிக்கையில், தீவிர வலதுசாரிக் கருத்துக்களுக்குப் பயன்படுத்தப்படும் பேச்சு சுதந்திரத்தை தாம் ஆதரிப்பதில்லை என குறிப்பிட்டுள்ளார்.

தீவிர வலதுசாரி எதிர்ப்பு
இதனிடையே, மஸ்கின் திடீர் ஆதரவுக்கு நன்றி தெரிவித்துள்ள AfD கட்சித் தலைவர் ஆலிஸ் வெய்டல், குடியரசுக் கட்சியினர் அமெரிக்காவை மீண்டும் சிறந்த நாடாக மாற்றப்போகிறார்கள் என்றும், ஜேர்மனியை மீண்டும் சிறந்த நாடாக மாற்ற தனது ஆதரவாளர்களுக்கும் அழைப்பு விடுத்தார்.

கடுமையான குளிர் வானிலை இருந்தபோதிலும், சனிக்கிழமை தீவிர வலதுசாரி எதிர்ப்பு பரப்புரையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர், பேர்லினின் பிராண்டன்பர்க் வாயிலைச் சுற்றி சுமார் 100,000 பேரும், கோலோனில் 20,000 பேரும் கூடினர், இதில் அனைத்து வயது மக்களும் வண்ணமயமான குடைகளை ஏந்திச் சென்றனர்.

முன்னதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்டு ட்ரம்பின் பதவியேற்பு விழாவின் போது நாஜி வணக்கம் தொடர்பான ஒரு சைகையை செய்ததை அடுத்து எல்லொன் மஸ்க் பரபரப்பை ஏற்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.