உக்ரைன் போருக்கு நான் காரணமல்ல; பைடன் மீது டிரம்ப் பழி!
‘அமெரிக்க அதிபர் உக்ரைனுக்கு வருகை தர வேண்டும்’ என்று அழைப்பு விடுத்துள்ளார் உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி.
நேட்டோ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிா்ப்பு தெரிவித்து அந்த நாட்டின் மீது ரஷியா கடந்த 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் படையெடுத்தது. சுமார் 3 ஆண்டுகளாகியும் உக்ரைனில் அழுகுரல் இன்னும் ஓய்ந்தபாடில்லை…
இந்தநிலையில், உக்ரைன் – ரஷியா இடையிலான சண்டையை முடிவுக்கு கொண்டு வருவதற்கான எந்தவொரு நகர்விலும் ஈடுபடும் முன், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உக்ரைனை நேரில் பார்வையிட்டு அங்குள்ள கள யதார்த்தத்தை உணர்ந்து முடிவெடுக்க ஸெலென்ஸ்கி வலியுறுத்தியுள்ளார்.
சிபிஎஸ் செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்துள்ள உக்ரைன் அதிபர் வோலோதிமீர் ஸெலென்ஸ்கி, “உக்ரைன் விவகாரம் குறித்த எந்தவொரு பேச்சுவார்த்தை அல்லது முடிவுக்கு முன், உக்ரைனுக்கு வந்து இங்குள்ள மக்களை, போராளிகளை, வீரர்களை, தேவாலயங்களை, மருத்துவமனைகளை, போரில் காயமுற்ற அல்லது மரித்த குழந்தைகளைக் கண்ணால் பார்த்துவிட்டு அதன்பின் செயல்படுங்கள்” என்று பேசியுள்ளார்.
இதைத்தொடர்ந்து, இது குறித்து தமது ‘ட்ரூத்’ சமூக வலைதளப் பக்கத்தில் விளக்கமளித்துள்ள டிரம்ப் கூறியிருப்பதாவது, “இந்த எதிர்பாரா அசம்பாவிதத்துக்கு பிள்ளையார்சுழி போட அனுமதித்ததன் மூலம் அதிபர் ஸெலென்ஸ்கியும் ஜோ பைடனும் கோரமானதொரு காரியத்தை செய்துவிட்டனர். இதனை தொடங்கவிடாமல் தடுத்திருப்பதற்கு ஏராளமான வழிகள் இருந்தபோதிலும், இந்த சண்டை ஆரம்பிக்கப்பட்டுவிட்டது.
ரஷியா, உக்ரைன் இடையிலான போருக்கு நான் பொறுப்பல்ல. எனினும், அழிவை நிறுத்துவதற்காக நான் தொடர்ந்து செயலாற்றி வருகிறேன். இப்போது இதனை விரைவாக முடிவுக்கு கொண்டுவர வேண்டும்” என்று கருத்து தெரிவித்துள்ளார்.
ஒருவேளை கடந்த 2020-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் தேர்தலில் தான் வெற்றி பெற்று மீண்டும் அதிபராகியிருப்பின் ரஷியாவின் இந்த தாக்குதலை தடுத்திருப்பேன் என்றும் டிரம்ப் குறிப்பிட்டுள்ளார்