ரஷ்ய போர் விமானத்தை கடல் ட்ரோன் மூலம் வீழ்த்தி உக்ரைன் சாதனை

உலகிலேயே முதல்முறையாக ரஷ்ய போர் விமானத்தை கடல் ட்ரோன் மூலம் வீழ்த்தி உக்ரைன் சாதனை படைத்துள்ளது.
உக்ரைன் உளவுத்துறையான GUR தெரிவித்திருப்பதன்படி, ரஷ்யாவின் Su-30 போர் விமானம் உக்ரைனின் கடல்சார்பு ட்ரோன் மூலம் சுட்டு வீழ்த்தப்பட்டுள்ளது.
இது உலகிலேயே முதல் முறையாகக் கடலில் இருந்து ஒரு ட்ரோன், போர் விமானத்தை அழித்ததைக் குறிக்கிறது.
இந்த தாக்குதல் கருங்கடலில் உள்ள ரஷ்யாவின் முக்கியமான நவரோசிஸ்க் போர்த்துறைக்கு அருகில் இடம்பெற்றது. Group 13 என்ற உக்ரைன் ராணுவ உளவுப் பிரிவு இந்தச் செயல்பாட்டை திட்டமிட்டு நடத்தியது.
உக்ரைன் பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்ட வீடியோவில், உக்ரைன் ட்ரோன் ரஷ்ய விமானத்தை டார்கெட் செய்து தாக்கும் காட்சி தெளிவாக காணப்படுகிறது.
ரஷ்யாவின் மிகப்பாரிய ராணுவத்தை எதிர்கொள்வதற்காக, உக்ரைன் தற்போது ட்ரோன்களை முக்கிய ஆயுதமாக பயன்படுத்தி வருகிறது. குறிப்பாக கடல்சார்பு ட்ரோன்கள் ரஷ்யாவின் கருங்கடல் கடற்படைக்கு பெரும் சேதங்களை ஏற்படுத்தி வருகின்றன.
இதற்கிடையில், அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் உக்ரைன் ஜனாதிபதி ஜெலென்ஸ்கி ஆகியோர், போப்ப்பின் இறுதிச்சடங்கில் சந்தித்து 30 நாள் போர்நிறுத்தம் ஒரு நன்மை தரும் முதலாவது நடவடிக்கையாக இருக்கலாம் என ஒப்புக்கொண்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதே நேரத்தில், ரஷ்யா உக்ரைனை மீண்டும் தாக்கியதில் 5 பேர் உயிரிழந்தும், 61 பேர் காயமடைந்தும் உள்ளனர் என உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.