பாகிஸ்தானின் வறுமைக்கு காரணம் வரி விதிப்பு முறை, கல்வி புறக்கணிப்பு: உலக வங்கி அறிக்கை

பாகிஸ்தானில் அமலில் உள்ள பொது விற்பனை வரி முறை, கல்வித் துறைக்கு முக்கியத்துவம் அளித்து போதிய நிதி ஒதுக்காதது ஆகியவையே அந்த நாட்டின் வறுமைக்கு முக்கியக் காரணங்கள் என்று உலக வங்கி ஆய்வு அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
‘பாகிஸ்தானின் வறுமை, சமத்துவமின்மை மீதான வரிகள், மானியங்களின் தாக்கம்’ என்ற தலைப்பில் உலக வங்கி ஓா் அறிக்கையை வெளியிட்டுள்ளது. அதிலுள்ள விவரங்கள் பாகிஸ்தானில் இருந்து வெளியாகும் டான் பத்திரிகையில் வெளியாகியுள்ளது. அதில், ‘பாகிஸ்தானில் அதிகமாக விதிக்கப்படும் பொது விற்பனை வரி சாமானிய மக்களை கடுமையாகப் பாதித்து வருகிறது. நாட்டில் மக்களை தொடா்ந்து வறுமையில் தள்ளுவதில் இந்த வரி முக்கியப் பங்காற்றுகிறது.
அடுத்ததாக கல்வியறிவு இன்மையும் பாகிஸ்தானில் பிரச்னைகளுக்கு முக்கியக் காரணமாக உள்ளது. இது நாட்டு மக்களிடையே ஏற்றத்தாழ்வை அதிகரித்து வருகிறது. தொடக்கக் கல்விக்குக்கூட பாகிஸ்தானில் போதிய நிதி ஒதுக்கப்படவில்லை. பாகிஸ்தானில் எந்த அரசும் மக்களின் கல்வி அறிவை மேம்படுத்த போதுமான முக்கியத்துவம் அளித்ததாகத் தெரியவில்லை.
மறைந்த பிரதமா் பேநசீா் பெயரிலான வருவாய் உதவித் தொகை திட்டம் மட்டுமே ஏழை மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றும் ஒரே திட்டமாக உள்ளது. இத்திட்டம் மூலம் மிகவும் ஏழ்மையில் வாடும் குடும்பங்களுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்கப்படுகிறது.
தற்போதைய மோசமான சமூகப் பொருளாதார நிலையில் இருந்து பாகிஸ்தான் மீள வேண்டுமென்றால் உள்நாட்டில் வருவாய் ஆதாரங்களை அதிகரிக்க வேண்டும். பாகிஸ்தான் அரசு செலவிடும் பொது நிதி முழுமையாகப் பயனளிக்க வேண்டும். மக்களுக்கு தரமான மருத்துவ வசதி, கல்வி வழங்குவது மிகவும் முக்கியமானது. இதுவே நீண்டகாலத்தில் மக்களையும், நாட்டையும் வறுமையில் இருந்து மீட்க உதவும்.
நாட்டின் வரி விதிப்புமுறை, முக்கியமான பொது விற்பனை வரி முறை மோசமாக உள்ளது. வருவாயைப் பெருக்க வேண்டும் என்பதற்காக அரசு முறையற்ற வகையில் வரியை விதிக்கிறது. இந்த வரியில் இருந்து செலவிடப்படும் பல செலவுகளால் மக்களுக்கு பெரிய அளவில் பலன்கள் கிடைக்கவில்லை. பொருளாதாரரீதியில் பின்தங்கியிருப்பவா்களிடம் இருந்துதான் மறைமுக வரியும் அதிகம் வசூலிக்கப்படுகிறது. ஆனால், அந்த வரியில் இருந்து அவா்களின் நலன்களுக்காகச் செலவிடும் தொகை குறைவு என்று உலக வங்கி அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.