சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் பலி

சூடானில் தங்கச் சுரங்கம் இடிந்து விழுந்ததில் 11 தொழிலாளர்கள் பலியான நிகழ்வு சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கிழக்கு நைல் நதி மாகாணத்தில் உள்ள பாலைவன நகரமான ஹூயிதில் உள்ள கெர்ஷ் அல்-ஃபீல் தங்கச் சுரங்கத்தின்பகுதியளவு இடிந்து விழுந்தது. அப்போது அங்கு பணியில் இருந்த தொழிலாளர்கள் 11 பேர் பலியானார்கள். மேலும் 7 பேர் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இருப்பினும் விபத்து ஏற்பட்ட தேதி குறிப்பிடப்படவில்லை என்று சின்ஹுவா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து பாதுகாப்பு காரணங்களுக்காக சுரங்கப் பணியை நிறுவனம் தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளது. சூடானில் மோசமான பாதுகாப்பு காரணமாக இத்தகைய விபத்துகள் அடிக்கடி ஏற்படுகின்றன.
கடந்த 2021ஆம் ஆண்டு 38 தொழிலாளர்களும், 2023ஆம் ஆண்டு 14 தொழிலாளர்களும் இதுபோன்ற சம்பவங்களில் பலியாகியுள்ளனர். அதிகாரப்பூர்வ தரவுகளின்படி, சூடானின் தங்கத்தில் கிட்டத்தட்ட 80 சதவீதத்தை சுமார் 1.5 மில்லியன் சுரங்கத் தொழிலாளர்கள் உற்பத்தி செய்கிறார்கள். இது 2024இல் மொத்தம் 64 டன்களாக இருந்தது.