;
Athirady Tamil News

இந்த வார்த்தைகள் உங்களை அடைந்தால்.. அல் ஜஸீரா செய்தியாளரின் உருக்கமான இறுதிப் பதிவு

0

காஸா மீது, இஸ்ரேல் நடத்திய மிகக் கோரமான தாக்குதலில், செய்தியாளர்களின் முகாமில் இருந்த அனஸ் அல்-ஷரீஃப் உள்பட 5 அல் ஜஸீரா செய்தியாளர்கள் ஞாயிற்றுக்கிழமை கொல்லப்பட்டனர்.

28 வயதே ஆன அல் ஜஸீரா செய்தியாளர் அனஸ் கொல்லப்படுவதற்கு ஒரு மணி நேரத்துக்கு முன்பு, தங்களது முகாமுக்கு அருகே இஸ்ரேல் நடத்திய மிகத் தீவிரமான குண்டுவீச்சுகளின் விடியோக்களை பகிர்ந்திருந்தார்.

தங்களது மரணம் நெருங்கிவிட்டதை உணர்ந்த அனஸ், மிக உருக்கமான இறுதிப் பதிவையும் முன்கூட்டியே அனுப்பியிருந்தார். அதில், இது எனது மிகவும் விருப்பமான மற்றும் இறுதித் தகவலாக இருக்கும். இந்த வார்த்தைகள் உங்களை அடைந்திருந்தால், இஸ்ரேல் எங்களைக் கொன்று எங்கள் குரல்களை அமைதியாக்கும் முயற்சியில் வெற்றிகண்டுவிட்டது என்பதை உறுதி செய்துகொள்ளுங்கள்.

ஒரு சில நேரலை செய்திகளின்போது, தான் நேரில் பார்த்தவற்றை சொல்ல முடியாமல், உணர்ச்சிக் கொந்தளிப்புடன் அனஸ் கண்ணீர் விட்டு அழும் விடியோக்களும் வெளியாகியிருந்தன. காஸாவின் கோர முகத்தை அப்பட்டமாக வெளிஉலகுக்கு வெளிப்படுத்தி வந்த அனஸ், ஊடகத் துறையில் மிகவும் புகழ்பெற்று விளங்கினார்.

காஸாவின் ஜபாலியா அகதிகள் முகாமின் அன்றாட வாழ்க்கையை தொடர்ந்து உலகுக்குப் பதிவு செய்து வந்த அனஸ், ஒருநாளும் உண்மையை உரக்கச் சொல்வதற்குத் தான் தயங்கியதில்லை. இங்கிருக்கும் அனைத்து ரூபங்களின் வாயிலாகவும் வலியை மட்டுமே உணர்ந்திருக்கிறோம், தொடர்ந்து ஏற்பட் பெரும் இழப்புகளுக்கு சாட்சியாக நின்றிருந்தோம், முஸ்லிம்களின் உலகத்துக்கு மணிமகுடமாக இருப்பது பாலஸ்தீனம். அதை விட்டுவிடாதீர்கள். கைவிலங்குகள் உங்களை மௌனமாக்காது, எல்லைகள் யாரையும் தடுத்து நிறுத்தாது என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும், தன்னுடைய தாய், மனைவி மற்றும் இரண்டு பிள்ளைகளுக்கும் உருக்கமான தகவலையும் பதிவு செய்திருக்கிறார். ஒருவேளை நான் இறந்துவிட்டால், எனது கொள்கைகளின் மீது நான் உறுதியாக நின்றிருக்கிறேன் என நினைத்துக் கொள்ளுங்கள். காஸாவை யாரும் மறந்துவிடாதீர்கள். உங்களது ஆத்மார்த்தமான பிரார்த்தனையின்போதும் என்னை மறந்துவிடாதீர்கள் என்று பதிவு செய்திருக்கிறார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.