தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு
video link-https://fromsmash.com/
ஐந்து அம்சக் கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதம் இருந்து உயிர்நீத்த தியாக தீபம் திலீபனின் 38 ஆவது ஆண்டு நினைவு நிகழ்வு அம்பாறை மாவட்டத்தில் அனுஷ்டிக்கப்பட்டது.
குறித்த நிகழ்வு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் காரைதீவு பிரதேச தலைவரும் முன்னாள் தவிசாளருமான கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தலைமையில் காரைதீவு அலுவலகத்தில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் திலீபனின் உருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தியதுடன் கட்சி ஆதரவாளர்கள் உறுப்பினர்கள் என பலரும் உணர்வு பூர்வமாக கலந்துகொண்டனர்.
தியாகி திலீபனின் தியாகம் வரலாற்றில் என்றும் தமிழினத்திற்கு வழிகாட்டி நிற்கின்றது என கிருஷ்ணபிள்ளை ஜெயசிறில் தனது உரையில் குறிப்பிட்டார்.
தியாக தீபம் திலீபன் தமிழ் மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளுக்கு எதிராகப் போராடினார். அவர் எமது மக்கள் தாயகத்தில் சுதந்திரமாக வாழவேண்டும் என்பதற்காக அகிம்சை வழியில் தன் இன்னுயிரினைத் தியாகம் செய்தார். தியாக தீபத்தின் நினைவுகளை எமது மக்கள் வரலாற்று ரீதியில் என்றும் நினைவு கூர்கின்றனர் . எமது மக்களுக்கு எதிரான ஒடுக்கு முறைகளுக்கு எதிராக அகிம்சை வழியில் தன் உயிரை நீராகாரம் ஏனும் அருந்தாது ஆகுதியாக்கிய மகானுக்கு தமிழர் தேசம் அஞ்சலிக்கின்றது. இன்றும் தியாக தீபம் திலிபன் எதற்காகப் போராடினாரோ அவரது போராட்டத்திற்கான காரணங்கள் தீர்க்கப்படாது அவ்வாறே காணப்படுகின்றன. அரசாங்கங்கள் மாறி மாறி ஆட்சிக்கு வந்த போதும் தமிழ் மக்கள் மீதான ஒடுக்குமுறைகளுக்கு எதிரான அடிப்படைகளில் எவ்வித மாற்றத்தினையும் செய்யவில்லை.
இலங்கையில் பௌத்த சிங்கள பேரினவாதம் அவ்வாறே காணப்படுகின்றது. அவ் பௌத்த சிங்கள பேரினவாதத்தினை திறன்பட முன்னெடுக்கத்தக்க சட்டங்கள் வலுவில் காணப்படுகின்றன. அரசியலமைப்பில் மாற்றங்கள் கொண்டு வரப்படவில்லை. குறைந்தபட்சம் தமிழ் மக்களுக்கான அரசியல் தீர்வு முன்வைக்கப்படவில்லை. எமது மக்கள் மீது மேற்கொள்ளப்பட்ட இனப்படுகொலைக்கு குறைந்தபட்ச பொறுப்புக்கூறல் ஏனும் இடம்பெறவில்லை.
யதார்த்தம் இவ்வாறிருக்க நடைமுறையில் இப்போதைக்கு பிரச்சினையில்லை என அரசாங்கம் சமாளிப்புச் செய்கின்றது. இனப்பிரச்சினையினையினை மனிதாபிமானப்பிரச்சினைக்குத் தீர்வின்றி நடைமுறையில் அரச நிர்வாகத்தில் சமாளிப்புக்களைச் செய்வதன் வாயிலாக எல்லோரையும் ஏமாற்ற அரசு நினைக்கின்றது.
இவ்விடத்தில் நாங்கள் ஓர் இனமாக இலட்சியத்தினால் ஒன்றுபட்டவர்களாக சர்வதேசம் ஏற்றுக்கொண்ட எமது சுயநிர்ணய உரிமைக்காக நாம் போராடவேண்டியுள்ளது. அதற்கு தியாகி திலீபனின் தியாகங்கள் எமக்கு வழிகாட்டியாகவுள்ளன என்றார்.
வடக்கு கிழக்கு மாகாணங்களில் புதிதாக திட்டமிடப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தடுத்து நிறுத்த வேண்டும், சிறைகளிலும், முகாம்களிலும் தடுத்துவைக்கப்பட்டுள்ள தமிழ் அரசியற் கைதிகள் விடுதலை செய்யப்பட வேண்டும், அவசரகாலச் சட்டம் முழுமையாக நீக்கப்பட வேண்டும், ஊர்காவல் படையினருக்கு வழங்கப்பட்ட ஆயுதங்கள் முற்றாகக் களையப்பட வேண்டும், தமிழர் பிரதேசங்களில் புதிதாக பொலிஸ் நிலையங்களைத் திறப்பதற்கு மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் முற்றாக நிறுத்தப்பட வேண்டும் என ஐந்து அம்ச கோரிக்கைகளை முன்வைத்து, தியாகதீபம் திலீபன் 15.09.1987 தொடக்கம் 26.09.1987 வரையான 12 நாட்கள் அகிம்சை வழியில் யாழ். நல்லூரில் நீராகாரம் அருந்தாமல் உண்ணாவிரதப் போராட்டம் நடாத்தி சாவைத் தழுவிக் கொண்டார்.










