மேலும் 5 பிணைக் கைதிகளின் உடல்களை ஒப்படைத்தது ஹமாஸ்
இஸ்ரேலுடனான போர் நிறுத்த அமலாக்கத்தின் ஒரு பகுதியாக, மேலும் ஐந்து பிணைக் கைதிகளின் உடல்களை ஹமாஸ் அமைப்பு ஒப்படைத்ததாக காஸாவிலுள்ள சர்வதேச செஞ்சிலுவைச் சங்கம் தெரிவித்துள்ளது. இத்துடன், 2023 அக்டோபர் 7 தாக்குதலின்போது கடத்திச் செல்லப்பட்ட 47 பிணைக் கைதிகளின் சடலங்களில், 30 சடலங்கள் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
இந்த உடல்கள், எகிப்து மற்றும் கத்தார் மத்தியஸ்தர்கள் மூலம் இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்டன. அதற்குப் பதிலாக, 50 பாலஸ்தீன கைதிகளை இஸ்ரேல் விடுவித்தது. இதில் 20 பேர் ஃபதஹ் இயக்கத்தைச் சேர்ந்தவர்கள். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப்பின் 20 அம்ச அமைதித் திட்ட முதல் கட்டத்தின் கீழ் இந்தப் பரிமாற்றம் நடைபெற்றுள்ளது.
போர் நிறுத்தம் அமலுக்கு வந்தாலும், காஸாவுக்குள் நிவாரணப் பொருள்கள் அனுப்புவதை இஸ்ரேல் தொடர்ந்து கட்டுப்படுத்துவதாக ஐ.நா. குற்றஞ்சாட்டுகிறது. பிணைக் கைதிகளின் சடலங்கள் அனைத்தையும் ஹமாஸ் இதுவரை ஒப்படைக்காததே இதற்குக் காரணம் என்று கூறப்படுகிறது.