டிஜிட்டல் கைது மோசடியில் ரூ.58 கோடியை இழந்த மும்பை தொழிலதிபர்: 3 பேர் கைது
மும்பை: மும்பை தொழிலதிபர் ஒருவர் டிஜிட்டல் கைது மோசடி கும்பலிடம் சிக்கி ரூ.58 கோடியை இழந்துள்ளார். இது தொடர்பாக கைது செய்யப்பட்ட 3 பேரிடம் தீவிர விசாரணை நடைபெறுகிறது.
நாட்டில் டிஜிட்டல் கைது மோசடி சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில், கடந்த ஆகஸ்ட் 19-ம் தேதி 72 வயதான மும்பை தொழிலதிபர் ஒருவரிடம் மோசடி கும்பல் செல்போனில் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டு பேசி உள்ளனர். அமலாக்கத் துறை மற்றும் சிபிஐ அதிகாரிகள் என கூறிக் கொண்ட அவர்கள், சட்டவிரோத பணப் பரிவர்த்தனை வழக்கில் உங்கள் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது என கூறியுள்ளனர்.
மேலும், அந்த நபரையும் அவருடைய மனைவியையும் டிஜிட்டல் கைது செய்துள்ளதாக தெரிவித்த அவர்கள், தாங்கள் சொல்லும் வங்கிக் கணக்குகளில் பணம் செலுத்தினால் வழக்கிலிருந்து தப்பிக்கலாம் என கூறியுள்ளனர். மேலும் இதுபற்றி காவல் துறையில் புகார் செய்யக்கூடாது என்றும் மிரட்டி உள்ளனர். தொடர்ந்து 2 மாதங்களாக அவர்களை வீடியோ அழைப்பு மூலம் கண்காணித்து வந்ததுடன், பல்வேறு தவணைகளாக ஆர்டிஜிஎஸ் பரிவர்த்தனை மூலம் ரூ.58 கோடியை பறித்துள்ளனர்.
ஒரு கட்டத்தில் தாங்கள் ஏமாற்றப்பட்டுள்ளோம் என்பதை உணர்ந்த தொழிலதிபரும் அவரது மனைவியும் கடந்த வாரம் இணையவழி குற்றப் பிரிவில் (சைபர் கிரைம்) புகார் செய்துள்ளனர். இதுகுறித்து பாரதிய நியாய சன்ஹிதா மற்றும் தகவல் தொழில்நுட்பத் துறை சட்டத்தின் பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
.
இதையடுத்து நடத்திய விசாரணையில் 88 வங்கிக் கணக்குகளுக்கு பணம் செலுத்தப்பட்டது தெரியவந்துள்ளது. மேலும் இந்த மோசடியில் ஈடுபட்ட 3 பேரை போலீஸார் கைது செய்துள்ளனர். டிஜிட்டல் கைது மூலம் அதிக அளவில் பறிக்கப்பட்ட சம்பவங்களில் இதுவும் ஒன்று என போலீஸார் தெரிவித்துள்ளனர்.