;
Athirady Tamil News

மம்தானி வெற்றி! நியூயார்க்கில் இருந்து யூதர்கள் வெளியேறுங்கள் – இஸ்ரேல் அமைச்சர் பதிவு!

0

நியூயார்க் மேயர் தேர்தலில் ஸோரான் மம்தானி வெற்றி பெற்றதால், அங்குள்ள யூதர்கள் உடனடியாக வெளியேறுங்கள் என இஸ்ரேல் அமைச்சர் அமிச்சாய் சிக்லி பேசியுள்ளார்.

அமெரிக்காவின் நியூயார்க் நகர மேயர் தேர்தலில் ஜனநாயகக் கட்சியின் சார்பாகப் போட்டியிட்ட ஸோரான் மம்தானி வெற்றி பெற்றுள்ளார். இதன்மூலம், நியூயார்க்கின் முதல் இஸ்லாமிய மற்றும் முதல் இந்திய வம்சாவளியைச் சேர்ந்த மேயர் என்ற பெருமையை அவர் பெற்றுள்ளார்.

ஏற்கெனவே, ஸோரான் மம்தானி காஸா மீதான இஸ்ரேலின் தாக்குதல்களைக் கண்டித்ததுடன், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு நியூயார்க் வந்தால் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தின் பிடி உத்தரவின் கீழ் அவரைக் கைது செய்வேன் எனவும் கூறியிருந்தார்.

இதனால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் இஸ்ரேல் அதிகாரிகள், ஆதரவாளர்கள் உள்ளிட்டோர் மம்தானிக்கு எதிர்ப்பு தெரிவித்து நியூயார்க் மக்கள் அவருக்கு வாக்களிக்க வேண்டாம் என வலியுறுத்தி வந்தனர்.

இந்த நிலையில், ஹமாஸ் படைகளுக்கு ஆதரவளிக்கும் மம்தானி வெற்றி பெற்றுள்ளதால் நியூயார்க்கில் வசிக்கும் யூதர்கள் உடனடியாக வெளியேறுங்கள் என இஸ்ரேலின் புலம்பெயர் விவகார அமைச்சர் அமிச்சை சிக்லி கூறியுள்ளார்.

இதுபற்றி, அவர் வெளியிட்ட எக்ஸ் தளப் பதிவில்:

“ஒரு காலத்தில் உலகளாவிய சுதந்திரத்தின் அடையாளமாக இருந்த நகரம் அதன் சாவியை ஒரு ஹமாஸ் ஆதரவாளரிடம் ஒப்படைத்துள்ளது. அவரது நிலைப்பாடு 25 ஆண்டுகளுக்கு முன்பு 3,000 சொந்த மக்களைக் கொன்ற ஜிஹாதி வெறியர்களிடம் இருந்து வெகு தொலைவில் இல்லை” என அவர் பதிவிட்டுள்ளார்.

மேலும், இந்தப் பதிவில் நியூயார்க்கில் உள்ள புகழ்பெற்ற சுதந்திர தேவி சிலையின் கையில் உள்ள தீப ஜோதியை தண்ணீரில் அணைப்பது போன்ற செய்யறிவால் (ஏஐ) உருவாக்கப்பட்ட படத்தையும் இணைத்து அவர் பதிவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.