;
Athirady Tamil News

வங்கதேசத்தின் 43 புதிய எம்.பி.க்கள் மீது கொலைக் குற்றச்சாட்டு!

0

வங்கதேசத்தில் நடைபெற்ற 13 ஆவது பொதுத் தேர்தல் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட 43 புதிய நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வங்கதேச நாட்டில், நடைபெற்ற பொதுத் தேர்தல்களில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான வங்கதேச தேசியவாத கட்சி மாபெரும் வெற்றி பெற்று, ஆட்சி அமைத்துள்ளது. இதன்மூலம், முதல்முறையாக தாரிக் ரஹ்மான் வங்கதேசத்தின் பிரதமராகப் பதவியேற்றுள்ளார்.

இந்த நிலையில், வங்கதேச நாடாளுமன்றத்தின் 297 உறுப்பினர்களில் 43 பேரின் மீது கொலைக் குற்றச்சாட்டுகள் உள்ளதாக, உள்நாட்டு செய்தித்தாளில் வெள்ளிக்கிழமை (பிப். 20) தகவல் வெளியாகியுள்ளது.

இதனைத் தொடர்ந்து, வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ள வங்கதேச தேசியவாத கட்சியின் 50.24 சதவீத நாடாளுமன்ற உறுப்பினர்களும், தீவிர வலதுசாரியான ஜமாத்-இ-இஸ்லாமி கட்சியின் 47.07 சதவீத உறுப்பினர்களும் குற்றவழக்குகளில் சிக்கியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது.

இதில், நாடாளுமன்றத்திற்குத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 142 உறுப்பினர்கள் தற்போதும் சட்டவழக்குகளை எதிர்கொள்வதாகவும், 185 பேர் கடந்த காலங்களில் சட்டவழக்குகளை எதிர்கொண்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சுமார் 95 நாடாளுமன்ற உறுப்பினர்கள் கடந்த காலங்களிலும் மற்றும் தற்போதும் வழக்குகளை எதிர்கொள்கின்றனர்.

இத்துடன், கடந்த 12 ஆவது நாடாளுமன்றத் தேர்தலுடன் ஒப்பிடுகையில் 13 ஆவது தேர்தலில் வெற்றி பெற்ற உறுப்பினர்களில் உயர் கல்வி கற்றவர்களின் எண்ணிக்கை குறைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

297 வங்கதேச நாடாளுமன்ற உறுப்பினர்களில் 8 பேர் முனைவர் பட்டமும், 138 பேர் முதுகலைப் பட்டமும், 93 பேர் இளங்கலைப் பட்டமும் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.