ஹவாய் வெள்ளப்பெருக்கு: 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிப்பு!
ஹவாய் தீவில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அமெரிக்கவின் ஹவாய் தீவுக் கூட்டங்களில் புயல் காரணமாக கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவு மிக மோசமான வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
புயல் காரணமாக ஹவாயில் சில நாள்களாக பெய்து வரும் தொடர் கனமழையால் அங்குள்ள ஓஹூ மற்றும் மாய் பகுதிகள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன. இதனால், 5,500-க்கும் மேற்பட்ட மக்கள் தங்கள் வசிப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
இதுபற்றி ஹவாய் ஆளுநர் ஜோஷ் க்ரீன் வெளியிட்டுள்ள விடியோ பதிவில், “புயல் காரணமாக இந்த வாரத்தில் ஓஹூ பகுதியில் 4 முதல் 6 இன்ச்-க்கு மேல் மழை பதிவாகியுள்ளது. இது மேலும் அதிகரிக்கும். ஆனால், தற்போது மாய் பகுதியை நோக்கி புயல் நகர்கிறது. இதனால், அதிகபட்சமாக 10 முதல் 12 இன்ச் வரை கனமழை பெய்யக்கூடும்.
இதுவரை உயிர்ச்சேதம் எதுவுமில்லை. ஆனால், சிலர் படுகாயமடைந்துள்ளனர். இந்தப் புயலை சாதாரணமாக எடுத்துக்கொள்ளக் கூடாது” என்று தெரிவித்தார்.
நிலம் ஏற்கனவே ஈரப்பதமாக இருப்பதால் மேற்கொண்டு மழையை அவை ஏற்றுக்கொள்ளாது. இதனால், மிக மோசமான சூழல் உருவாகும் அபாயம் ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறினார்.
மேலும் பேசிய அவர், “புயலால் கிட்டத்தட்ட ரூ. 9,000 கோடி அளவில் பொது மற்றும் தனியார் சொத்துக்கள் சேதமடைந்துள்ளன. இதுவரை 230 பேர் வெள்ள பாதிப்பில் சிக்கி மீட்கப்பட்டனர். 120 ஆண்டுகள் பழமையான அணை ஒன்று உடையக்கூடும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்” என்று அவர் தெரிவித்துள்ளார்.
200க்கும் மேற்பட்ட தேசிய பாதுகாப்புப் படையினர் வெள்ளப் பாதிப்பு தொடர்பான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும், மீட்புப் பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.