;
Athirady Tamil News

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை ஆதரிக்கும் இஸ்ரேல்!

0

ஈரான் மீதான கடற்படை முற்றுகையை இஸ்ரேல் ஆதரிப்பதாக அந்நாட்டு பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு திங்கள்கிழமை (ஏப்.13) தெரிவித்துள்ளார்.

முன்னதாக, பாகிஸ்தானில் நடந்த அமைதிப் பேச்சுவார்த்தையில் எந்தவொரு முடிவும் எட்டப்படாததால், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ஈரானின் கடற்படையை முற்றுகையிடப்போவதாக சமூக ஊடகங்களில் அறிவித்தார்.

இதுகுறித்து இஸ்ரேல் அமைச்சரவைக் கூட்டத்தில் பிரதமர் நெதன்யாகு பேசியதாக காணொளி ஒன்றை அவரது அலுவலகம் வெளியிட்டிருக்கிறது.

அதில், “நாங்கள், நிச்சயமாக, டிரம்ப்பின் இந்த உறுதியான நிலைப்பாட்டை ஆதரிக்கிறோம். மேலும் இந்த விவகாரத்தில் அமெரிக்காவுக்கு இஸ்ரேல் தொடர்ச்சியான ஒத்துழைப்பை வழங்கி வருகிறது.

போர் நிறுத்தத்தை அறிவித்தவுடன் ஈரான் உடனடியாக ஹோர்முஸ் நீரிணையைத் திறக்கும் என்று ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தது. ஆனால் அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. அமெரிக்காவால் இதை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. அதனால்தான் அமெரிக்கா இந்த ஈரானின் கடற்படையை முற்றுகை செய்ய முடிவு செய்துள்ளது” எனத் தெரிவித்தார்.

பாகிஸ்தானின் இஸ்லாமாபாதில் 21 மணி நேரம் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்படாமல் தோல்வியில் முடிந்ததாக அமெரிக்க துணை அதிபர் ஜே.டி. வான்ஸ் தெரிவித்தபிறகு இத்தகைய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.