;
Athirady Tamil News

டிரம்ப்பை தொடர்ந்து சீனா செல்லும் ரஷிய அதிபர் புதின்

0

மாஸ்கோ,

அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப், 3 நாட்கள் பயணமாக கடந்த 13-ந்தேதி சீனாவுக்கு பயணம் மேற்கொண்டார். சீனா சென்ற டொனால்டு டிரம்ப் அந்நாட்டு அதிபர் ஜி ஜின்பிங்கை சந்தித்தார். இந்த சந்திப்பின்போது இருநாட்டு உறவு, வர்த்தகம், சர்வதேச அரசியல் சூழ்நிலை உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து இருநாட்டு தலைவர்களும் விவாதித்தனர்.

அதிபர் டிரம்ப்புடன் அமெரிக்காவின் பெரும் தொழிலதிபர்களும் சீனா சென்றிருந்தனர். சீன தொழிலதிபர்களை அமெரிக்க தொழிலதிபர்கள் சந்தித்தனர். இந்த பயணத்தின்போது சீனா, அமெரிக்கா இடையே பல்வேறு முக்கிய வர்த்தக ஒப்பந்தங்கள் கையெழுத்தான நிலையில், அதிபர் டிரம்ப் தனது சுற்றுப்பயணத்தை நிறைவு செய்துவிட்டு இன்று அமெரிக்கா திரும்பினார்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப்பை தொடர்ந்து, ரஷிய அதிபர் புதின் 2 நாட்கள் சுற்றுப்பயணமாக அடுத்த வாரம் சீனா செல்ல உள்ளார் என தகவல் வெளியாகியுள்ளது. 2001-ம் ஆண்டு கையெழுத்தான சீன-ரஷ்ய நட்புறவு ஒப்பந்தத்தின் 25-வது ஆண்டு நிறைவு விழாவையொட்டி, மே 19, 20 ஆகிய தேதிகளில் புதின் சீனா செல்ல திட்டமிட்டுள்ளார் என ரஷிய அதிபர் மாளிகை வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த பயணத்தின்போது சீன அதிபர் ஜின்பிங்கை ரஷிய அதிபர் புதின் சந்தித்து பேசுவார் என்றும், அப்போது இரு தலைவர்களும் இருதரப்பு உறவுகள், முக்கிய சர்வதேச மற்றும் பிராந்திய பிரச்சினைகள் மற்றும் பொருளாதார ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்துவார்கள் என்றும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.