மக்களை தாக்கியது நாட்டுக்கு எதிரான செயல்!!

ஜனநாயக மரபுகளின்படி அமைதி வழியில் போராடிய மக்கள் மீது வன்முறை பிரயோகிக்கப்பட்டமையை கண்டிக்கிறேன் என யாழ்.மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தனது உத்தியோகபூர்வ முகநூலில் பதிவிட்டுள்ளார்.
காலி முகத்திடல் மற்றும் அலரி மாளிகை முன்பாக ஜனாதிபதி மற்றும் பிரதமரை பதவி விலக கோரி போராட்டத்தில் ஈடுபட்டு வந்தவர்கள் மீது , வன்முறை கும்பல் ஒன்று தாக்குதல் நடாத்தி , அவர்களின் கூடாரங்களை அடித்து நொறுக்கி அவற்றுக்கு தீ வைத்துள்ளது.
இந்த சம்பவங்கள் தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் தனது உத்தியோக பூர்வ முகநூலில் மேற்கண்டவாறு பதிவிட்டுள்ளார்.
குறித்த பதிவில் மேலும் உள்ளதாவது,
பொதுமக்கள் தமது கோரிக்கைகளை அமைதிவழியில் வெளிப்படுத்திய நிலையில், அவர்கள் மீது இன்று கொழும்பில் இடம்பெற்ற வன்முறைத் தாக்குதலானது மிகவும் அநாகரிகமானது.
ஜனநாயக பண்புகளுக்கமைய அமைதியாக போராடும் உரிமை நாட்டு மக்களுக்குண்டு. இன்று அந்த உரிமை மீது இரத்தக்கறை படிந்துள்ளது.
இந்த தாக்குதல் சம்பவங்களானது நாட்டின் மக்கள் உரிமைகள், அரசியல் உரிமைகள், மனித உரிமைகள் மற்றும் ஜனநாயக மாண்பின் மீது நிகழ்த்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதலாக நான் கருதுவதோடு எனது கண்டனத்தை வேதனையடைந்த மனதுடன் தெரிவிக்கிறேன்.
சர்வதேச ஒத்துழைப்புடன் நாடு, பொருளாதார மீட்சியை எட்டுமென எதிர்பார்த்துள்ள நிலையில் இச்சம்பவமானது பேரிடியாக மாறியுள்ளது என்றுள்ளது.
“அதிரடி” இணையத்துக்காக யாழில் இருந்து “கலைநிலா”