அடேங்கப்பா.. இலங்கை அதிபர் மாளிகை போராட்டத்தில் 1000 பொருட்கள் திருட்டு.. என்னென்ன தெரியுமா? (படங்கள்)
இலங்கையில் பொதுமக்கள் நடத்திய போராட்டத்தையொட்டி அதிபர் மாளிகை மற்றும் பிரதமர் இல்லத்தில் இருந்து விலையுயர்ந்த 1000க்கும் அதிகமான பொருட்களை போராட்டக்காரர்கள் அள்ளிச்சென்றுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகி உள்ளன.
இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் கடந்த சில மாதங்களாக 9 ம் தேதியை குறிவைத்து பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த போராட்டத்தின் காரணமாக பிரதமர் மகிந்த ராஜபக்சே, அதிபர் கோத்தபய ராஜபக்சே ஆகியோர் தங்களின் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.
அதிபர் மாளிகையில் போராட்டம்
தற்போது இலங்கையில் இடைக்கால அதிபராக ரணில் விக்ரமசிங்கே செயல்பட்டு வருகிறார். முன்னதாக இந்த மாதம் 9 ம் தேதி நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பொதுமக்கள் தலைநகர் கொழும்பு நோக்கி வந்தனர். உயிருக்கு பயந்து அதிபர் கோத்தபய ராஜபக்சே மாலத்தீவு சென்றார். இருப்பினும் பொதுமக்கள் அதிபர் மாளிகை, பிரதமரின் அதிகாரப்பூர்வ மாளிகை ஆகியவற்றில் நுழைந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் அதிபர் மாளிகை, பிரதமர் மாளிகையில் சில நாட்கள் தங்கியிருந்தனர்.
1000 பொருட்கள் திருட்டு
மேலும் அதிபர், பிரதமர் மாளிகையில் இருந்த பொருட்கள் சூறையாடப்பட்டன. இதுதொடர்பாக தற்போது போலீசார் விசாரணையை துவக்கி உள்ளனர். அதன்படி ஜனாதிபதி மாளிகை மற்றும் பிரதமரின் இல்லத்தில் இருந்து 1,000க்கும் அதிகமான பொருட்கள் மாயமாகி உள்ளது தெரியவந்துள்ளது. அதாவது போராட்டத்தின்போது அந்த பொருட்கள் திருடப்பட்டுள்ளன.
என்னென்ன பொருட்கள்
இதுதொடர்பாக போலீசார் சிறப்பு புலனாய்வு குழுக்களை அமைத்து விசாரித்து வருகின்றனர். திருட்டு போன அனைத்து பொருட்களும் தொல்பொருட்களாகவும், கலைநயம் சார்ந்தவைகளாகவும் இருப்பது தெரியவந்துள்ளது. திருட்டு போன பொருட்களின் மதிப்பு உள்ளிட்ட விபரங்கள் இன்னும் வெளியாகவில்லை.
சிரமத்தில் போலீசார்
மேலும் அதிபர் மாளிகையில் என்னென்ன வகையான தொல்பொருட்கள் இருந்தன என்பது பற்றிய விபரங்கள் இலங்கையின் தொல்பொருள் துறையிடம் இல்லை. இதனால் மாயமான பொருட்களை தொல்பொருட்களை கண்டுபிடிப்பது என்பதில் சிறப்பு புலனாய்வு அதிகாரிகளுக்கு கூடுதல் சிரமத்தை சந்தித்து வருகின்றனர். இருப்பினும் திருட்டு போன பொருட்களை மீட்பதில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
அதிபர் எச்சரிக்கை
இதற்கிடையே தான் நாட்டில் அமைதியான வழியில் பொதுமக்கள் போராட்டங்கள் நடத்தி எதிர்ப்பை காட்டலாம். ஆனால் அதிபர் மாளிகை, பிரதமர் இல்லத்தில் நுழைவதை தவிர்க்க வேண்டும். அதோடு பொதுவெளியில் வன்முறையை தூண்டக்கூடாது என தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே கூறியுள்ளார். மேலும் இதனை மீறுவோர் மீது சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.