;
Athirady Tamil News

₹5 லட்சம் வெகுமதி! இந்தியாவால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதி அமெரிக்காவில் கைது: NIA நடவடிக்கை

0

இந்தியாவில் தேடப்படும் பயங்கரவாதி ஹேப்பி பாசியா அமெரிக்காவில் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹேப்பி பாசியா அமெரிக்காவில் கைது
இந்தியாவால் தீவிரமாக தேடப்பட்டு வந்த முக்கிய பயங்கரவாதியான ஹேப்பி பாசியா என்ற ஹர்ப்ரீத் சிங் அமெரிக்காவில் கைது செய்யப்பட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

பஞ்சாபில் தொடர்ச்சியாக வெடிகுண்டு தாக்குதல்கள் மற்றும் பயங்கரவாத செயல்களில் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்ட இவர், இந்திய பாதுகாப்பு அமைப்புகளுக்கு பெரும் தலைவலியாக இருந்து வந்தார்.

கடந்த செப்டம்பர் 2024-ல் சண்டிகரில் ஓய்வு பெற்ற பஞ்சாப் காவல்துறை அதிகாரியின் வீட்டில் நடந்த வெடிகுண்டு தாக்குதலில் ஹேப்பி பாசியாவுக்கு நேரடித் தொடர்பு இருப்பது தேசிய புலனாய்வு முகமை (NIA) விசாரணையில் தெரியவந்தது.

இந்த பயங்கரவாத சதிச் செயலை தடை செய்யப்பட்ட பாப்பர் கல்சா இன்டர்நேஷனல் (BKI) என்ற அமைப்பு திட்டமிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

NIA தீவிர நடவடிக்கை
இதையடுத்து, ஹேப்பி பாசியாவை கைது செய்ய என்ஐஏ தீவிர நடவடிக்கை மேற்கொண்டது. கடந்த ஜனவரி மாதம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடியாணை பிறப்பிக்கப்பட்டது.

விசாரணையில், ஹேப்பி பாசியா பஞ்சாபில் நிகழ்ந்த 14 க்கும் மேற்பட்ட வெடிகுண்டு தாக்குதல் சம்பவங்களில் தொடர்புடையது மட்டுமல்லாமல், இரண்டு சர்வதேச பயங்கரவாத அமைப்புகளுடனும் நெருங்கிய தொடர்பில் இருந்தது கண்டறியப்பட்டுள்ளது.

மேலும், பஞ்சாபில் இவர் மீது 18க்கும் மேற்பட்ட கிரிமினல் வழக்குகள் நிலுவையில் உள்ளன. இவை அனைத்தும் பயங்கரவாதத்தை தூண்டும் மற்றும் உருவாக்கும் நோக்கத்துடன் செய்யப்பட்டவை என்று குற்றம் சாட்டப்பட்டுள்ளது.

₹5 லட்சம் வெகுமதி

இதையடுத்து, தலைமறைவாக இருந்த ஹேப்பி பாசியா குறித்து தகவல் அளிப்பவர்களுக்கு NIA ₹5 லட்சம் வெகுமதி அறிவித்திருந்தது.

இந்நிலையில், இந்தியாவால் தேடப்படும் மிக முக்கியமான பயங்கரவாதிகளில் ஒருவரான ஹேப்பி பாசியாவை அமெரிக்க போலீசார் தற்போது கைது செய்துள்ளனர்.

அவரை விரைவில் இந்தியாவுக்கு கொண்டு வந்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க இந்திய அதிகாரிகள் தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

இந்த கைது நடவடிக்கை இந்திய பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஒரு பெரிய வெற்றியாக கருதப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.