வரலாற்று பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி ஆலயத்தில் வெற்றிலை மென்றவர்களுக்கு நடந்த சம்பவம்!
வரலாற்று பிரசித்தி பெற்ற தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலய சூழலில் தடையை மீறி வெற்றிலை மென்றவாறு நடமாடிய ஐவருக்கு ஐம்பதாயிரம் ரூபா தண்டப்பணம் விதித்து பருத்தித்துறை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தொண்டைமானாறு செல்வச்சந்நிதி ஆலயத்தில் வருடாந்த மகோற்சவம் நடைபெற்றுவரும் சூழ்நிலையில், ஆலயத்தின் சுற்றுப்புறச்சூழலை வல்வெட்டித்துறை நகரசபையினர் சுகாதாரமாகப் பேணிவருவதுடன், ஆலய சுற்றுப்புறமானது புகையிலை அற்ற மண்டலமாகச் சுகாதாரத் தரப்பினரினால் அறிவிக்கப்பட்டுள்ளது.
50,000 ரூபா தண்டப்பணம்
குறித்த மண்டலத்தில் புகையிலை சார் பொருட்கள் விற்பனை செய்வதும் பயன்படுத்துவதும் முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளது.
இந்நிலையில், குறித்த பகுதியில் வெற்றிலை மென்ற வண்ணம் ஆலய சுற்றுப்புறத்தில் காணப்பட்ட ஐந்து பேருக்கு எதிராக, கடந்த 2026.08.20 வியாழக்கிழமை அன்று வல்வெட்டித்துறை நகரசபையின் பொதுச்சுகாதாரப் பரிசோதகரான ப. தினேஸினால் பருத்தித்துறை நீதவான் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டது.
குறித்த வழக்கானது அன்றைய தினமே விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, சம்பந்தப்பட்டவர்கள் குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டதன் அடிப்படையில், தலா 10,000 ரூபா வீதம் மொத்தம் 50,000 ரூபா தண்டப்பணம் அறவிடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.