யாழ்ப்பாணத்தில் வீடொன்றில் காணிக்குள் சாராய போத்தல்களை புதைத்து வைத்து விற்பனை செய்த நபரை யாழ்ப்பாண பொலிஸார் கைது செய்துள்ளனர்
பௌர்ணமி தினமான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை கொக்குவில் புகையிரத நிலையத்தை அண்மித்த பகுதியில் உள்ள வீடொன்றில் நபர் ஒருவர் மதுபானம் விற்பனை செய்வதாக யாழ்ப்பாண தலைமை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பாலித செனவிரத்தினவிற்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில் , பொலிஸார் குறித்த வீட்டிற்கு விரைந்தனர்
வீட்டில் சோதனை நடத்திய போது , வீட்டின் பின்புறமாக கிடங்கு வெட்டி , அதனுள் மதுபான போத்தல்களை புதைத்து வைத்து , அவற்றை எடுப்பதற்கு ஏதுவாக கிடங்கில் சிறு துளை விட்டு , அதனூடாக போத்தல்களை எடுத்து விற்பனை செய்து வந்துள்ளார்
அந்நிலையில் ,குறித்த நபரை கைது செய்த பொலிஸார் 187.5 மில்லி லீட்டர் (கால் போத்தல்) மதுபான போத்தல்கள் 45 இனை கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட நபரை பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்