;
Athirady Tamil News

பாகிஸ்தானின் நெருக்கடியும் பிராந்திய அரசியலும் !! (கட்டுரை)

0

உலகில் அரசியல் கொந்தளிப்புகளை எப்போதும் இயங்கு நிலையில் வைத்திருக்கும் ஒரு நாடுதான் பாகிஸ்தான். தற்போது இந்த நாடு அரசியல் கொந்தளிப்புக்கு மட்டுமல்லாமல், மிகப்பொிய பொருளாதார நெருக்கடிக்கும் முகம்கொடுத்துக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தானின் அந்நியச் செலாவணி கையிருப்பு முற்றாக குறைந்திருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதம் இலங்கை எதிா்கொண்ட பாரிய பொருளாதார வீழ்ச்சியின் நிலையை அந்நாடு தற்போது எட்டியிருக்கிறது.

அந்நாட்டில் ஏற்பட்டுள்ள பணவீக்கமும், உயர்ந்து வரும் வாழ்க்கைச் செலவும் பாகிஸ்தானை பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் நிற்க வைத்திருக்கிறது. நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் உறுதியற்ற தன்மை, பொருளாதார நெருக்கடியை மேலும் மோசமாக்கியுள்ளது. நெருக்கடியில் இருந்து நாட்டைத் மீட்க வேண்டிய அரசாங்கத்தின் மீதும், அந்நாட்டின் பொருளாதார நிபுணர்களின் திறன் மீதும் பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வருகின்றனர்.

மறுபுறம், நாட்டின் அரசியல் தலைவர்கள் பழிவாங்கும் விளையாட்டிலும், ஒருவருக்கொருவர் மாறி மாறி ஊழல் குற்றச்சாட்டுகளை அள்ளி வீசும் செயற்பாடுகளிலும் ஈடுபட்டுள்ளனர். பாகிஸ்தான் அரசியல்வாதிகளின் இந்த கயிறிழுப்புகளுக்கிடையே அதன் பொருளாதாரம் அதல பாதாளத்தை நோக்கி வீழ்ந்து வருகிறது.

முன்னாள் பிரதமர் இம்ரான்கானின் பாகிஸ்தான் தஹ்ரீக்-இ-இன்சாப் (Pakistan Tehreek-e-Insaf – PTI) கட்சி தோ்தல் பிரச்சார நிதி விதிகளை மீறியதாக பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்தின் சமீபத்திய தீர்ப்பால் அரசியல் கொந்தளிப்பு மேலும் தீவிரமடைந்தது.

நாட்டின் அந்நிய செலாவணி கையிருப்பு 8.24 பில்லியன் அமெரிக்க டொலர்களாக குறைந்துள்ளது. வேலையின்மை விகிதம் மிக வேகமாக உயா்ந்துள்ளது, அதே நேரத்தில் பணவீக்கம் உச்சத்தை தொட்டுள்ளது.

பாகிஸ்தான் ரூபாயின் வீழ்ச்சி பாதாளத்திற்கு சென்றுக் கொண்டிருக்கிறது.

பாகிஸ்தானின் பொருளாதாரம் விளிம்பில் தத்தளித்துக் கொண்டிருக்கும் நிலையில், சா்வதேச நாணய நிதியம் (IMF) அந்நாட்டுக்கான விரிவாக்கப்பட்ட நிதி வசதியின் அடுத்த தவணையை இன்னும் வெளியிடவில்லை. அதே நேரத்தில், பாகிஸ்தானின் நேச நாடுகளான சீனா, சவூதி அரேபியா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் ஆகியவை கடந்த காலத்தைப் போல நாட்டின் வெளிநாட்டு இருப்புக்களை உயர்த்துவதில் ஆர்வத்தை குறைவாகவே காட்டி வருகின்றன.

பாகிஸ்தான் என்ற நாடு ஒரு மூழ்கும் கப்பலாக இருக்கிறது என்றும் இலங்கை எதிா்கொண்ட பொருளாதார நெருக்கடியின் பாதையில் அது பயணிக்கிறது என்றும் ஒரு கருத்தும் பரவி வருகிறது. இதன் காரணமாக பல நாடுகள் பாகிஸ்தானுக்கு உதவி செய்வதில் தயக்கத்தைக் காட்டி வருகின்றன.

தற்போதைய, பாகிஸ்தான் முஸ்லிம் லீக் (Pakistan Muslim League -N) அரசாங்கம் 2022-23 நிதியாண்டின் இறுதிக்குள் IMF கடனுடன் நாட்டிற்கு சுமார் 5 பில்லியன் அமெரிக்க டாலர்கள் தேவைப்படும் என்று கூறியுள்ளது. ஆனால் இதுவரை எந்த உதவிகளுக்குமான சமிக்கைளும் பாகிஸ்தானுக்கு கிடைக்கவில்லையென்று அறிய வருகிறது. என்றபோதிலும், பாகிஸ்தானில் இலங்கையைப் போல மோசமான நெருக்கடி நிலை இல்லையென்று அதன் ஆட்சியாளா்கள் கூறி வருகின்றனா்.

பாகிஸ்தான் பொருளாதார வீழ்ச்சியின் விளிம்பில் இல்லை என்பதை சுட்டிக்காட்டுவதில் அதன் ஆட்சியாளர்கள் திருப்தியடைகிறார்கள். என்றாலும், இன்று இலங்கை எதிர்கொண்டிருக்கும் அந்த பயங்கரமான நெருக்கடி நிலையை எட்டக் கூடிய மிக கிட்டிய தூரத்தில் அந்த நாடு இருக்கிறது என்பதே பொருளாதார நிபுணா்களின் கருத்தாக இருக்கிறது.

அதேசமயம், பாகிஸ்தானிய ஆட்சியாளர்கள், பொருளாதார ரீதியாக சமயோசிதமான முடிவுகளை எடுப்பதற்குப் பதிலாக, கட்டமைப்புகளில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதற்குப் பதிலாக, அதன் கடன் வழங்கும் பங்காளிகளின் உதவியை மட்டும் எதிர்பார்க்கின்றனர்.

பாகிஸ்தான் தற்போது அமெரிக்காவுடனான அதன் உறவை சீர்செய்ய விரும்புகிறது, ஆனால் சீனாவுடனான அதன் உறவுகளை மீள்பரிசீலனை செய்ய வேண்டும் என பாகிஸ்தான் மீது அமெரிக்கா அழுத்தம் கொடுத்து வருகிறது.

நெருக்கடியில் இருந்து விடுபடுவதற்கான வழியை அரசாங்கம் தீவிரமாக தேடிக்கொண்டிருக்கும் நிலையில், பாகிஸ்தான் மக்கள் விரக்தியின் விளிம்பில் வாழ்ந்துக் கொண்டிருப்பதை அவதானிக்க முடிகிறது. இலங்கை எதிா்கொண்டிருக்கின்ற பொருளாதார நெருக்கடியிலிருந்தும், வீழ்ச்சியிலிருந்தும் மீட்சியடைவதற்கு சீனா தனது உதவிகளை வழங்க தயக்கம் காட்டி வருவது இந்த விரக்திக்கு காரணமாக கருதப்படுகிறது.

சீனாவினால் இலங்கைக்கு ஏற்பட்ட கையறு நிலை பாகிஸ்தானுக்கும் ஏற்படலாம் என்று அந்நாட்டு மக்கள் நம்புகின்றனா். சீனாவின் மீதான பாகிஸ்தானின் நம்பிக்கையை அந்நாட்டு மக்கள் சந்தேகத்துடன் பார்க்க ஆரம்பித்துள்ளனா்.

இலங்கையை போலவே சீனாவின் கடன் பொறியில் சிக்கிய ஒரு நாடுதான் பாகிஸ்தான். தனக்கு தேவையான மூலோபாய இலக்குகளை அடைவதற்காக இந்த நாடுகளில் சீனா முதலீடு செய்துள்ளது. இலங்கையில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை நிா்மாணித்தது போல, பாகிஸ்தானில் குவாதா் துறைமுகத்தை அதி நவீனமாக சீனா மேம்படுத்தியுள்ளது. அதுமட்டுமல்லாமல், நாட்டுக்கு பிரயோசனமில்லாத, எவ்வித வருமானமும் வராத, ஆடம்பரமான உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு கடன்களை வாரி வழங்கி, வளரும் நாடுகளை “கடன் பொறிக்குள்” சீனா வேண்டுமென்றே சிக்க வைத்து வருகிறது என்ற குற்றச்சாட்டை பல நாடுகள் சீனாவின் மீது சுமத்தி வருகின்றன.

கடந்த வருடம் பிரித்தானியாவில் இடம்பெற்ற ஜீ 7 மாநாட்டில் வறிய நாடுகளை இலக்கு வைக்கும் சீனாவின் கடன் பொறி ராஜதந்திரம் முக்கிய பேசு பொருளாக இருந்தது.

சர்வதேச நாணய நிதியம் வெளியிட்ட சமீபத்திய அறிக்கையின்படி, பாகிஸ்தான் நாட்டின் வெளிநாட்டுக் கடனில் சுமார் 30 சதவீதம் சீனாவுக்குச் செலுத்த வேண்டியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதத்தில் இதன் அளவு 27 சதவீதமாக இருந்த நிலையில் தற்போது 30 சதவீதமாக உயர்ந்துள்ளது.

பிராந்திய அரசியல் சக்தியான சீனாவின் கடன் பொறியில் சிக்கியுள்ள பாகிஸ்தானுக்கும் இதே கதி ஏற்படக்கூடும் என்று பாகிஸ்தான் மக்கள் நம்புகின்றனா். சீனா-பாகிஸ்தான் பொருளாதார வழித்தடத்தின் (China–Pakistan Economic Corridor -CPEC) கீழ் 2015 ஆம் ஆண்டு முதல் பாகிஸ்தானில் அதிகளவான முதலீடுகளை சீனா செய்துள்ளது.

இலங்கையின் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தைப் போலவே, பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள ஆழ்கடல் துறைமுகமான குவாதர் துறைமுகம் சீனாவுக்கு மூலோபாய ரீதியில் முக்கியத்துவம் பெற்றுள்ளது.

ஹம்பாந்தோட்டை துறைமுகம் பற்றிய செய்திகள் பாகிஸ்தானின் அதிகார வா்க்கத்தின் தாழ்வாரங்களில் எச்சரிக்கை மணியை அடித்துக் கொண்டிருக்கின்றன. குவாதா் துறைமுகத்தின் மீதான சீனாவின் ஆா்வம், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை கபளீகரம் செய்த முன்மாதிரியைப் பின்பற்ற வாய்ப்பளிக்கலாம் என்று பாகிஸ்தானிய மக்கள் அஞ்சுகின்றனா்.

சீனாவுடனான உறவின் பாதகத்தை, எளிதாகக் கண்டுகொள்ளாதது போல பாகிஸ்தான் ஆட்சியாளா்கள் இருக்கின்றனா். சீனாவை முற்றிலும் சாா்ந்துள்ள பாகிஸ்தானின் அரசியலுக்கு பாதகம் ஏற்படாத முறையில் ஆட்சியாளா்களின் நழுவல் அணுகுமுறை அமைந்திருக்கிறது.

சீனாவின் மீது பாகிஸ்தான் கொண்டுள்ள இந்த அதிகப்படியான சார்பு நிலைக்கு, பொருளாதார ரீதியான ஈடுபாட்டைக் காட்டிலும் இரண்டு நாடுகளும் கொண்டிருக்கின்ற இந்திய விரோத நிலைப்பாடே அடிப்படையாக அமைந்திருக்கிறது.

கடந்த ஒரு தசாப்த காலப்பகுதியில் தான் பாகிஸ்தான் சீனாவின் செல்லப் பிள்ளையாக உருமாறியது. அதற்கு முற்பட்ட காலங்களில், அதாவது 1980களில் பாகிஸ்தான் அமெரிக்காவுடன் மிகவும் நேசம் வைத்து நெருங்கி செயற்பட்டது. அப்போதைய சோவியத் ரஷ்யாவிற்கு எதிரான அமெரிக்காவின் அரசியல் காய் நகா்த்தல்களுக்கு சிறந்த தளமாக பாகிஸ்தானை அமெரிக்கா பயன் படுத்தியது.

சோவியத் ரஷ்யாவுடனான பனிப்போரை, பினாமி போராக எதிா்கொள்வதற்கு முக்கிய தளமாக பாகிஸ்தானை அமெரிக்கா பயன்படுத்தியது. இன்று பாகிஸ்தானின் ஜனநாயகத்தை ஆட்டம் காண வைத்திருக்கும் கட்டுக்கடங்காத தீவிரவாதம் அந்நாட்டில் ஆழமாக வேரூன்றுவதற்கும் இந்த உறவு காரணமானது. இன்று பாகிஸ்தான் அரசியலில் இராணுவத்தின் தலையீடும், மத தீவிரவாதமும் பிரிக்க முடியாத அங்கங்களாக மாறி ஜனநாயகத்தை கேள்விக் குறியாக்கி இருக்கின்றன.

பாகிஸ்தானுக்கு விரும்பத்தக்க பொருளாதார நன்மைகளைக் கொண்டுவருவதில் ஏற்பட்டுள்ள தோல்விக்கு, புவியரசியலில் அதன் வகிபாகம் காரணமாகியிருக்கிறது. அதுமட்டுமல்லாமல், பாகிஸ்தானின் உள்ளுா் அரசியலின் நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் உலகப் பொருளாதார நிலைமைகள், அரசியல், பொருளாதார நெருக்கடியின் தன்மையை மேலும் உக்கிரமடைய வைத்துள்ளன.

1947ம் ஆண்டு பாகிஸ்தான் சுதந்திரம் அடைந்ததிலிருந்து அதிக காலத்தை ராணுவ ஆட்சியில் கழித்திருக்கிறது. பாகிஸ்தானை நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ ராணுவம் தான் ஆட்சி செய்து வருகிறது என்ற கருத்தை யாராலும் மறுக்கவும் முடியாது. 2008 ம் ஆண்டு அந்நாட்டில் இடம்பெற்ற பாராளுமன்ற மற்றும் ஜனாதிபதித் தேர்தல்களுடன், அந்த நாடு இராணுவ ஆட்சியிலிருந்து ஜனநாயகத்திற்கு திரும்பும் என்ற ஒரு நம்பிக்கை ஏற்படுத்தப்பட்டது.

2010ம் ஆண்டு , பாகிஸ்தானில் அரசியலமைப்பில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டன. இந்த திருத்தத்தின் மூலம் பாராளுமன்றம், பிரதம மந்திரி பதவி, மாகாணங்களின் அதிகாரங்கள் மற்றும் நீதித்துறையின் சுதந்திரம் ஆகியவை பலப்படுத்தப்பட்டதாக கூறப்பட்டது..

தகவல் அறியும் உரிமை, கல்வி உரிமை என்பனவும் இந்த திருத்தத்தின் மூலம் உறுதி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இருப்பினும், பாகிஸ்தானில் வெளியுறவு மற்றும் பாதுகாப்புக் கொள்கையில் ராணுவம் தொடர்ந்து செல்வாக்கு செலுத்தி வரும் நிலை ஜனநாயகத்திற்கு அச்சுறுத்தலாகவே இருந்து வருகிறது..

கடந்த 2018ம் ஆண்டு இடம்பெற்ற , பாராளுமன்றத் தேர்தலில் இம்ரான் கானின் தஹ்ரீக்-இ-இன்சாப் கட்சி (PTI) வெற்றி பெற்றது. தேர்தல் பிரச்சாரத்தின் போது கணிசமான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தாலும், தேர்தல் ஜனநாயகத்திற்கு எவ்வித சவால்களையும் ஏற்படுத்தவில்லை என்று சொல்லப்பட்டது. புதிய அரசாங்கம் ஊழலுக்கு எதிரான பல சமூக-பொருளாதார சீர்திருத்தங்கள் மற்றும் முயற்சிகளை உறுதியளித்தது.

தீவிரவாதம் மற்றும் பிரிவினைவாத இயக்கங்களால் பாகிஸ்தானின் உள்நாட்டு பாதுகாப்புக்கு பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. ஆப்கானிஸ்தானில் தாலிபான்கள் மீண்டும் ஆட்சியைப் பிடித்ததிலிருந்து, பயங்கரவாதம் மீண்டும் பாகிஸ்தானில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.

தீவிரவாதம், இராணுவ தலையீடு மற்றும் ஊழல் போன்றவற்றால் பாகிஸ்தான் துவம்சம் செய்யப்பட்ட நிலையில் இருக்கிறது. பிரச்சினைகளில் தத்தளிக்கும் இத்தகைய நாடுகளை பிராந்திய அரசியல் சக்திகள் பகடைக்காய்களாக, பலிக்கடாக்களாக பாவிக்கும் அபாயம் அதிகமிருக்கிறது.

ஊழல், தீவிரவாதம், இராணுவ தலையீடு, கடன் சுமை, பிராந்திய அரசியல் ஆதிக்கம் போன்ற பிரச்சினைகளில் சிக்கி ஆட்டம் கண்டிருக்கும் பாகிஸ்தானுக்கு மீட்சி எப்போது கிடைக்கும்?

You might also like

Leave A Reply

Your email address will not be published.