;
Athirady Tamil News

ஸ்தம்பிக்கும் வைத்திய பரிசோதனைகளால் மீண்டும் கேள்விக்குள்ளாகும் சுகாதாரத்துறை

0

நாட்டில் கடந்த காலங்களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிக் காரணமாக மூளைசாளிகள் அதிகளவில் வெளியேறிவருகின்றமை இலங்கையின் எதிர்காலத்துக்கு பாரிய சவாலை ஏற்படுத்துமென பொருளாதார வல்லுநர்கள் தொடர்ந்தும் குரல்கொடுத்து வருகின்றனர்.

குறிப்பாக வைத்தியர்களின் வெளியேற்றமானது சுகாதாரத்துறையில் பாரியதொரு நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கின்றது. கடந்த இரு வருடங்களில் மாத்திரம் 1,500 வைத்தியர்கள் நாட்டைவிட்டு வெளியேறியுள்ளனர். இதையடுத்து வைத்தியர்களின் ஓய்வுபெறும் வயது 63 ஆக அதிகரிக்கப்பட்டு வைத்தியர்களின் பற்றாக்குறைக்கு குறுகிய காலத்துக்கான தற்காலிக தீர்வு எட்டப்பட்டுள்ளது.

ஏற்கனவே தரமற்ற மருந்துகளின் உபயோகத்தால் உயிரிழப்புக்கள் அடுத்தடுத்து பதிவான நிலையில் சுகாதார அமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணையும் கொண்டுவரப்பட்டது. இதனால் கடந்த சில மாதங்களாக இலங்கையின் சுகாதாரத்துறை பேசுப்பொருளாக மாறியது. இதற்கிடையில் வடக்கு கிழக்கு பகுதிகளில் நிலவிய காணி அபகரிப்பு, உள்நாட்டு கடன் மறு சீரமைப்பு தொடர்பில நிலவிய சர்ச்சைகள், அதனோடிணைந்த போராட்டங்கள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் அதிகாரிகளின் முதற்கட்ட விஜயம் போன்றபல சம்பவங்கள் தலைத்தூக்கியதை தொடர்ந்து சுகாதாரத்துறை தொடர்பான சர்ச்சைகள் சற்று ஓய்ந்தாலுமேக் கூட மீண்டும் மற்றொரு வடிவில் தலைத்தூக்க ஆரம்பித்துள்ளன.

அதாவது கடந்த சில நாட்களாக தேசிய வைத்தியசாலைகளில் அதிமுக்கிய மருத்துவ உபகரணங்கள் பழுதடைகின்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளன.

கொழும்பு தேசிய வைத்தியசாலை

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் இயங்கிவந்த டிஜிட்டல் எக்ஸ்ரே இயந்திரமும் தற்போது பழுதடைந்தள்ளது.

விபத்து மற்றும் என்பு முறிவு பிரிவில் இயங்கிவந்த ஒரே ஒரு டிஜிட்டல் தொழில்நுட்ப எக்ஸ்ரே இயந்திரமும் கடந்த இரண்டு வாரங்களாக செயலிழந்துள்ளது. இதனால விபத்துப்பிரிவில் சிகிச்சைப்பெற வரும் நோயாளர்களுக்கான எக்ஸ்ரே பரிசோதனைகளை முன்னெடுப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளதுடன் பரிசோதனை அறிக்கைகளின் பிரகாரம் சிகிச்சைகளை வழங்க முடியாமலுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

அதேபோன்று நரம்பியல் அறுவை சிகிச்சை மற்றும் தீவிர சிகிச்சைப்பிரிவில் சிகிச்சைப்பெறும் நோயாளர்களுக்கான சி.ரி.ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்ள பயன்படும் இயந்திரமும் கடந்த 4 மாதங்களாக செயலிழந்துள்ளது. இந்த நிலையில் எக்ஸ்ரே இயந்திரமும் பழுதடைந்துள்ளமை மேலுமொரு நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது.

சுகாதாரத்துறையினால் வருடாந்தம் மருத்துவ உபகரணங்களை பழுதுபார்க்கும் சேவை ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்படாமல் பிற்போடப்பட்டமையே இதற்கு காரணமென அரச கதிரியக்க தொழில்நுட்பவியலாளர் சங்கத்தின் தலைவர் சானக்க தரம் விக்ரம தெரிவித்துள்ளார்.

கொழும்பு தேசிய வைத்தியசாலையில் காணப்படும் எக்ஸ்ரே பரிசோதனை அறிக்கையானது குறுகிய காலத்துக்குள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தின் ஊடாக வைத்தியர்களுக்கும் உரிய தரப்பினருக்கும் பகிரக்கூடிய வசதிகளைக் கொண்டுள்ளது. இவ்வாறான டிஜிட்டல் வசதிகளைக் கொண்டுள்ள ஒரேயொரு இயந்திரமும் தற்போது செயலிழந்துள்ளமையால் நோயாளர்களுக்கு சிகிச்சைகளை மேற்கொள்வதற்கு சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது.

மேற்படி வைத்தியசாலையில் சி.ரி.ஸ்கேன் இயந்திரம் பழுதடைந்து 4 மாதங்கள் கடந்துள்ளபோதிலும் இதனை திருத்தியமைப்பது தொடர்பில் சுகாதார அமைச்சு இயந்திரங்களை பழுது பார்க்கும் சேவை ஒப்பந்தங்களை மேற்கொள்ளாமல் உள்ளதாக வைத்தியசாலை நிர்வாகத்தின் சார்பில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. இதனால் நோயாளர்களுக்கு சிகிச்சை அளிப்பது பாரிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. குறிப்பாக வெளி மாவட்டங்களிலிருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு மாற்றப்படும் நோயாளர்களே இதனால் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர். மருத்துவ பரிசோதனைகள் தாமதமாவதால் அவர்களது அன்றாட வாழ்க்கைச்செலவுகளும் அதிகரிக்கின்றனமை இங்கு சுட்டிக்காட்டத்தக்கது. நாட்டில் பொருளாதார நெருக்கடிகளுக்கு மத்தியில் வறுமைக்கோட்டின் கீழ் வாழும் மக்கள் கொழும்புக்கு வைத்தியசாலைக்கென வந்துசெல்லவே ஒரு தொகை செலவிடுகின்ற நிலையில் தனியார் வைத்தியசாலைகளுக்குச் சென்று மேற்படி பரிசோதனைகளை மேற்கொள்வதென்பது சாத்தியமற்றவொன்றாக காணப்படுவதாக பொதுமக்கள் சார்பில் கவலைத் தெரிவிக்கப்படுகின்றது.

இவ்வாறு மருத்துவ பரிசோதனை இயந்திரங்கள் தொடர்ச்சியாக பழுதடைவதனால் நோயாளர்கள் மாத்திரமின்றி சுகாதார சேவைகள் தொடர்பான பட்டப்படிப்புகளை மேற்கொள்ளும் மாணவர்களுக்கான மருத்துவ பயிற்சிகளை வழங்குவதிலும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக பல்கலைக்கழகங்கள் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்நிலை தொடருமானால் எதிர்வரும் காலங்களில் இளங்கலை சுகாதார கதிரியக்க தொழில்நுட்ப வல்லுநர்களின் பயிற்சிகளை குறித்த காலப்பகுதிக்குள் நிறைவு செய்ய முடியாமல் போகும் எனவும் எதிர்வுக்கூறப்பட்டுள்ளது.

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலை

கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் இயங்கிவந்த ஒரேயொரு சி.ரி.ஸ்கேன் பரிசோதனை இயந்திரமும் பழுதடைந்துள்ளது. இதனால் வைத்தியசாலையின் சி.ரி.ஸ்கேன் செயற்பாடுகள் 9 ஆம் திகதி திங்கட்கிழமை முதல் முழுமையாக இடைநிறுத்தப்பட்டுள்ளன. இதனால் மேற்படி வைத்தியசாலையில் சிகிச்சைப்பெற்றுவரும் சிறுவர்களுக்கு சிகிச்சையளிப்பதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக வைத்தியசாலை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நாட்டின் சகல பகுதிகளிலும் சிறுவர்களுக்கான மேலதிக சிகிச்சைகளுக்கு கொழும்பு லேடி ரிஜ்வே சிறுவர் வைத்தியசாலைக்கே அனுப்பி வைக்கப்படுகின்றனர். இந்த நிலையில் சி.ரி.ஸ்கேன் இயந்திரம் பழுதடைந்துள்ளமையானது பல்வேறு சிக்கல்களை தோற்றுவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே கொழும்பு தேசிய வைத்தியசாலையில் கதிரியக்க நிபுணர்களின் பற்றாக்குறை காரணமாக 2 பெட் ஸ்கேன் இயந்திரங்களின் செயற்பாடுகள் முழுமையாக நிறுத்தப்பட்டுள்ளன.

இலங்கையின் சகல வசதிகளையும் கொண்ட வைத்தியசாலையாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள கொழும்பு தேசிய வைத்தியசாலையிலேயே மருத்துவ உபகரணங்கள் பழுதடைகின்ற நிலையில் நாட்டின் ஏனைய வைத்தியசாலைகளின் நிலை என்னவென்பது கேள்விக்குறியே.

அதிலும் சி.ரி.ஸ்கேன் பரிசோதனைகளை மேற்கொள்ள பயன்படும் இயந்திரம் பழுதடைந்து 4 மாதங்கள் கடந்துள்ள நிலையில் அதனை திருத்தி அமைப்பதற்கோ அல்லது வெளிநாடுகளிடமிருந்து கடன் அல்லது அன்பளிப்பு என்ற பெயரிலாவது பெற்றுக்கொள்வது குறித்து சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். இந்நிலை மேலும் தொடருமானால் நோயாளர்களின் நிலை மேலும் பாதிக்கப்படும்.

சுகாதாரத்துறையை சாடும் எதிர்கட்சி

சுகாதாரத்துறையில் எழுந்துள்ள நெருக்கடிகள் மற்றும் தரமற்ற மருந்துகளின் பயன்பாடு என்பவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து சுகாதார அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா பிரேரணை கொண்டுவரப்பட்டது. இதில் 113 பேர் இந்த நம்பிக்கையில்லா பிரேரணைக்கு எதிராகவும் 73 பேர் மாத்திரமே ஆதரவாகவும் வாக்களித்தனர். இதனால் எதிர்கட்சியின் முயற்சி தோற்கடிக்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது தேசிய வைத்தியசாலைகளில் நிலவும் மருத்துவ இயந்திரங்களின் தட்டுப்பாடு சுகாதாரத்துறையில் மீண்டுமொரு அலையை ஏற்படுத்தி விட்டதாகவும் இதற்காகத்தான் சுகாதாரத்துறையை மாற்றியமைக்க வேண்டுமென வலியுறுத்தியுள்ளதாவும் எதிர்கட்சி தெரிவித்துள்ளது.

அதேவேளை தரமற்ற மருந்துகளின் பாவனையால் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படும் நபர்களின் குடும்பங்களுக்கு நிவாரணத்திட்டங்களை முன்னெடுக்க அரசாங்கம் துரித நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் எதிர்கட்சி சார்பில் கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது.

சுகாதாரத்துறை கூறும் காரணமென்ன?

2019 ஆம் ஆண்டுக் காலப்பகுதியில் இலங்கையில் நிலவிய பொருளாதார நெருக்கடிக்காரணமாக ஏற்பட்ட நிதிப்பற்றாக்குறை காரணமாக வருடாந்தம் மருத்துவ உபகரணங்களை பழுதுபார்க்கும் செயற்திட்டங்கள் பிற்போடப்பட்டன. இதற்கிடையில் இலங்கையில் பரவிய கொவிட் 19 வைரஸ் தொற்றுக் காரணமாக மேற்படி மருத்துவ உபகரணங்களின் பழுது பார்த்தல் செயற்பாடுகளுக்கு முன்னுரிமை அளிப்பதற்கு மாறாக கொவிட் தொற்றிலிருந்து மக்களை பாதுகாப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட வைத்திய செலவுகளுக்கு பெருந்தொகையை செலவிட வேண்டி ஏற்பட்டது. இதன்காரணமாக இவற்றுக்கு முக்கியத்துவம் கொடுக்க முடியாமல்போனது. இதற்கிடையில் கொவிட் பரவலுக்கு பின்னர் ஏற்பட்ட இலங்கையின் பொருளாதார நெருக்கடி சுகாதாரத்துறையில் பாரிய வீழ்ச்சியை ஏற்படுத்திவிட்டது. அப்படியே இவற்றை பழுதுபார்ப்பதென்றால் வருடமொன்றுக்கு 30 பில்லியன் ரூபா செலவிட வேண்டியுள்ளது.

இந்தநிலையில் தற்போது அரச வைத்தியசாலைகளில் பழுதடைந்துள்ள மருத்துவ உபகரணங்களை திருத்தியமைப்பதற்கு மாத்திரம் கிட்டத்தட்ட 67 பில்லியன் ரூபா தேவையென சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

மேற்படி செலவுகள் குறித்து நிதி அமைச்சுக்கு முன்மொழியப்பட்டுள்ளது. அந்த கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ள நிதி அமைச்சு செலவுகளுக்கான ஒரு தொகையை நிதி அமைச்சிலிருந்தும் எஞ்சிய செலவுத்தொகையை வரவுசெலவுத்திட்டத்திலிருந்தும் ஒதுக்குவதாக உறுதியளித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

எனவே அரச வைத்தியசாலைகளின் மருத்துவ உபகரணங்களை பழுது பார்க்கும் சேவை ஒப்பந்தங்களை உடனடியாக மேற்கொள்ள வேண்டிய கட்டாயம் தற்போது சுகாதாரத்துறைக்கு ஏற்பட்டுள்ளது. இலங்கையின் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் நடுத்தர மற்றும் வறுமை கோட்டின் கீழ் வாழும் மக்கள் இலவச சேவைகளையே நம்பி வாழுகின்றனர். இந்த நிலையில் மக்களின் அத்தியாவசிய சேவைகளில் ஒன்றான சுகாதார சேவையில் இதுபோன்ற நெருக்கடிகள் காணப்படுவதென்பது மக்களுக்கு மாத்திரமின்றி இலங்கையின் முன்னேற்றத்துக்கும் பாரிய சவாலை ஏற்படுத்தும் என்பதை உணர்ந்து செயற்பட வேண்டியது அரசாங்கத்தின் கடமை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.