;
Athirady Tamil News

முதல்வர் தேர்வு விவகாரம் – சித்தராமையாவை வாழ்த்திய டிகே சிவகுமார்- டெல்லி பயணத்தை ரத்து செய்தார்!!!

0

கர்நாடக மாநில சட்டமன்ற தேர்தலில் அபார வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சி, ஆட்சியமைக்கும் முனைப்பில் உள்ளது. அம்மாநிலத்தின் அடுத்த முதல்வர் யார் என்ற கேள்வி எழுந்துள்ள நிலையில், சித்தராமையா மற்றும் டிகே சிவகுமார் இடையே கடும் போட்டி நிலவுகிறது. முதல்வரை தேர்வு செய்வது தொடர்பாக நேற்று மாலை காங்கிரஸ் சட்டமன்ற கூட்டம் நடைபெற்றது. இந்த நிலையில், இன்று சித்தராமையா டெல்லி சென்றுள்ளார்.

இவரைத் தொடர்ந்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் டிகே சிவகுமார் டெல்லி செல்ல இருந்தார். இந்த நிலையில், டெல்லி பயணத்தை ரத்து செய்த டிகே சிவகுமார் விமான நிலையம் செல்லாமல் வீடு திரும்பினார். இது தொடர்பாக தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “எனக்கு உடல்நிலை சரியில்லாத காரணத்தால் நான் இன்று டெல்லி செல்லவில்லை. மொத்தம் 135 காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். என்னிடம் எந்த சட்டமன்ற உறுப்பினரும் இல்லை,” என்று டிகே சிவகுமார் தெரிவித்தார். “நான் போர்க்கொடி தூக்கவில்லை. யாரையும் மிரட்டவில்லை.

முதலமைச்சரை தேர்வு செய்யும் பொறுப்பை கட்சி மேலிடத்திடம் விட்டுவிட்டேன். காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்களில் பெரும்பான்மை ஆதரவு சித்தராமையாவுக்கு இருந்தால் அவருக்கு எனது வாழ்த்துகள்,” என்று அவர் மேலும் தெரிவித்தார். டெல்லி பயணத்தை ரத்து செய்ததோடு, சித்தராமையாவுக்கு டிகே சிவகுமார் வாழ்த்து தெரிவித்து இருப்பதால் கர்நாடக மாநிலத்தின் அடுத்த முதல்வராக சித்தராமையா தேர்வு செய்யப்படுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.