;
Athirady Tamil News

கிளிநொச்சி தனியார் கல்வி நிலையங்களின் செயற்பாடுகள் தொடர்பான கலந்துரையாடல்! (PHOTOS)

0

கிளிநொச்சி மாவட்டத்திலுள்ள தனியார் கல்வி நிலையங்களுக்கான கலந்துரையாடல் இன்று(30) வெள்ளிக்கிழமை கிளிநொச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்றது.

குறித்த கலந்துரையாடல் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி. றூபவதி கேதீஸ்வரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்றது.

இதன்போது அறநெறிக் கல்வி மற்றும் திறன் விருத்தி செயற்பாடுகள், தனியார் கல்வி நிலையங்களின் அடிப்படை வசதிகள் தொடர்பாக ஆராயப்பட்டது.

மேலும், தனியார் கல்வி நிலையங்களின் சுகாதார வசதி, வகுப்பறை பிரமாணம், கட்டடங்கள் என்பவை விதிமுறைகளுக்கு அமைவாக அமைந்திருக்க வேண்டும் என்றும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தனியார் கல்வி நிலையங்களின் பதிவு நடவடிக்கைகள் தொடர்பாக அதிக கவனம் செலுத்தப்பட்டது. கிளிநொச்சி மாவட்டத்தில் 113 தனியார் கல்வி நிலையங்கள் இயங்குகின்றன. இவற்றுள் பதிவுசெய்யப்படாத நிலையில் இயங்கும் 50 நிறுவனங்களும் தமது பதிவு நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும் என மாவட்ட அரசாங்க அதிபர் வலியுறுத்தியிருந்தார்.

மேலும் பிரதேச சபைகள் ஊடாக வருடாந்தம் பதிவு செய்யப்பட வேண்டும். இதனூடாக அடிப்படை வசதிகளை சரியாக பூர்த்தி செய்யப்படுவதை உறுதிசெய்ய முடியும் எனவும் தெரிவித்தார்.

மேலும் தனியார் கல்வி நிலையங்களின் மாணவர்களின் பதிவு நடவடிக்கைகள், ஆசிரியர் பதிவு நடவடிக்கைகள், பெற்றோர் சந்திப்பு, பிள்ளைகளை பிற இடங்களுக்கு அழைத்து செல்வதற்கான நடவடிக்கைகள், கட்டண வேறுபாடுகள் தொடர்பான விடயங்கள் கலந்துரையாடப்பட்டன.

தனியார் கல்வி நிலையங்களுக்கான நேர முகாமைத்துவம் தொடர்பில் விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றிருந்தது.
கல்வி நிலைய செயற்பாடுகள் காலை 5.30மணி தொடக்கம் மாலை 6.00மணிவரை இடம்பெறவேண்டும். அறநெறி பாடசாலைகளின் செயற்பாட்டுக்காக வெள்ளிக்கிழமைகளில் வகுப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும். மேலும் ஞாயிற்றுக் கிழமைகளில் நண்பகல் 12.00மணிவரை வகுப்புக்கள் நிறுத்தப்பட வேண்டும்.மேற்குறிப்பிட்ட நேரமுகாமைத்துவத்தில் குறிப்பாக பாடசாலை நேரங்களில் வகுப்புக்களை நடாத்துவது முற்றாக தவிர்க்கப்படல் வேண்டும்

அத்தோடு இந் நடைமுறைகள் கல்விப் பொதுத்தராதர உயர்தர மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளிற்கு பொருந்தாது என்பதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

குறித்த கூட்ட தீர்மானங்கள் மாவட்ட செயலக மற்றும் பிரதேச செயலகங்களின் துறைசார்ந்த திணைக்கள உத்தியோகத்தர்கள் மற்றும் பொலிஸ், பொதுசுகாதார பரிசோதகர்களால் கண்காணிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

இக் கலந்துரையாடலில் மேலதிக அரசாங்க அதிபர், மேலதிக அரசாங்க அதிபர்(காணி), திட்டமிடல் பணிப்பாளர், பிரதம கணக்காளர்,உதவி மாவட்டச்செயலர்,மத தலைவர்கள், தனியார் கல்வி நிலையங்களுக்கான அமைப்பின் தலைவர், பொருளாளர், பொலிஸ் நிலையங்களின் சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவுகளின் நிலைய பொறுப்பதிகாரிகள், சிரேஷ்ட பொதுச் சுகாதார பரிசோதகர், மாவட்ட மற்றும் பிரதேச செயலகங்களின் இந்து கலாசார உத்தியோகத்தர்கள், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், தனியார் கல்வி நிலையங்களின் நிர்வாகிகள், அறநெறி பாடசாலை ஆசிரியர்கள், World Vision முகாமையாளர் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.