;
Athirady Tamil News

இந்தியாவில் முதல் முறையாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவை!!

0

இந்தியாவில் பலவகையான போக்குவரத்து உள்ளது. பஸ், ரெயில் விமானம், மெட்ரோ ரெயில், படகு போக்குவரத்து ஆகியவை நடைமுறையில் உள்ளன. இவற்றில் படகு போக்குவரத்து கேரளா மாநிலத்திலும் மற்றும் தீவுகளுக்கு செல்லவும் பயன்பட்டு வருகின்றது. தற்பொழுது பைக் டேக்சி என்று பைக் மூலம் பயணிகள் ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு செல்வதற்கு தொடங்கப்பட்டுள்ளது. இதேபோல ஆட்டோ, கார் ஆகிய வாகனங்களிலும் போக்குவரத்து வசதி உள்ளது. சமீபத்தில் வந்தே பாரத் என்ற பெயரில் புதிய ரெயில் சேவை தொடங்கப்பட்டு இயக்கப்பட்டு வருகின்றது. இந்த வந்தே பாரத் ரெயில் சேவைக்கு மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பு கிடைத்துள்ளது.

ஆனாலும் மெட்ரோ ரெயில் பயணம் செய்வதற்கு மக்கள் அதிகம் ஆசைப்படுகிறார்கள். இது மாநிலத்தின் முக்கிய பகுதிகளில் மட்டுமே இயங்கி வருகிறது. தமிழகத்தில் சென்னையில் மட்டுமே மெட்ரோ ரெயில் சேவை உள்ளது. திருச்சி, சேலம், நெல்லையில் இதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு வருகிறது. பொதுவாக மெட்ரோ ரெயில்கள் பாலத்திற்கு மேலேயும் பூமிக்கு அடியிலும் செல்வதைப் பார்த்திருப்போம். ஆனால் தண்ணீருக்கு அடியில் செல்வதைப் பார்த்ததில்லை. இந்தியாவில் முதல் முறையாக நீருக்கு அடியில் செல்லும் மெட்ரோ ரெயில் சேவையை கொல்கத்தா மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷன் தொடங்க உள்ளது. இதற்காக கொல்கத்தா மாநிலத்தில் இருந்து ஹவுரா பகுதி வரை ஹூக்ளி ஆற்றின் நீருக்கு அடியில் சுரங்கப்பாதை கட்டப்பட்டுள்ளது. கொல்கத்தாவில் உள்ள இந்த மெட்ரோ சுரங்கப்பாதைகள், லண்டன் மற்றும் பாரிஸ் இடையேயான யூரோஸ்டார் ரெயில்கள் சேனல் சுரங்கப்பாதை வழியாகச் செல்வதைப் போலவே கட்டப்பட்டுள்ளன.

நகரத்தின் கிழக்கு-மேற்கு பகுதியை இணைக்கும் இந்த வழித்தடம் மொத்தம் 16 கி.மீ தூரம் கொண்டது. இந்தப் பாதை தண்ணீருக்கு அடியில் மட்டும் 4.8 கி.மீ சென்று, எஸ்ப்ளனடே பகுதியை ஹவுரா மைதானத்தோடு இணைக்கிறது. இந்த வழித்தடம் செயல்பாட்டிற்கு வந்தபிறகு ஒவ்வொரு 12 நிமிடங்களுக்கு ஒரு மெட்ரோ ரெயில் இந்தப் பாதையில் செல்லும். இந்த சுரங்கப் பாதையில் வெற்றிகரமாக மெட்ரோ ரெயில் சோதனை நடத்தப்பட்டது. அடுத்த மாத இறுதியில் எஸ்ப்ளனடே ஹவுரா மைதான் இடையேயான வழித்தடத்தை ரெயில்வே பாதுகாப்பு ஆணையர் சோதனை செய்வார். அதன் பிறகே இந்தப் பாதையில் மெட்ரோ போக்குவரத்து தொடங்கும்.

ரெயில் தண்டவாளங்கள் தண்ணீருக்கு அடியில் இருப்பதால் ரெயில்வே பாதுகாப்பு ஆணையரின் சோதனை அவசியமாகும். எப்படியும் டிசம்பர் மாத இறுதிக்குள் மெட்ரோ சேவை தொடங்கிவிடும் என நம்பிக்கை தெரிவிக்கிறார் கொல்கத்தா மெட்ரோ ரெயில் கார்ப்பரேஷனின் மேலாண்மை இயக்குனர் ஸ்ரீவத்ஸா. ஹவுரா மைதானில் ரெயிலை நிறுத்தி வைக்க போதுமான வசதிகள் இல்லாத காரணத்தால், சென்ட்ரல் பார்க்கில் இருந்து கொண்டு வரப்பட்ட 2 பெட்டிகள் கொண்ட ரெயில், தற்போது சால்ட் லேக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. நீருக்கு அடியில் அடித்தளம் அமைக்கும் பணி மிகவும் சிக்கல் நிறைந்தது.

ஆனால் அந்த சிக்கல்களை சாதனையாக்கி இருக்கிறது கொல்கத்தா மெட்ரோ ரெயில் நிர்வாகம். ஆற்றின் சுரங்கப்பாதையில் சுரங்கம் அமைப்பது ஒரு பொறியியல் அதிசயம். உலகம் முழுவதும் இது அரிதாக இருந்தாலும், இந்தியாவில் இதுவே முதல்முறையாக நடந்துள்ளது. சுரங்கப்பாதைகள் 120 ஆண்டுகள் சேவை செய்யும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளன. ஆற்றின் சுரங்கப் பாதைகளில் ஒரு சொட்டு நீர் கூட நுழைய முடியாது. சுரங்கங்களின் கான்கிரீட் இடையே ஹைட்ரோபிலிக் கேஸ்கட்கள் உள்ளன. சுரங்கங்களுக்குள் தண்ணீர் வந்தால், கேஸ்கட்கள் திறக்கப்படும். நீர் உட்புகுவதற்கான தொலைதூர சாத்தியக்கூறுகளில், பாதுகாப்பான வெளியேற்றத்திற்காக டி.பி.எம்.கள் நீரில் மூழ்கும்.

மிகவும் அனுபவம் வாய்ந்த சுரங்கப்பாதை பணியாளர்களை ஆப்கான்ஸ் நிறுவனம் பயன்படுத்தியது. ஹுக்ளி ஆற்றில் அமைய உள்ள புதிய பாதை மூலம் தினசரி சுமார் 9 லட்சம் பேர் மெட்ரோ ரெயில்களை பயன்படுத்துவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹவுரா பாலத்தைக் கடக்க ஒரு மணி நேரத்திற்கு மேல் ஆகிறது. இந்நிலையில், கிழக்குமேற்குப் பகுதிகளை இணைக்கும் நீருக்கடியிலான மெட்ரோ ரெயில் திட்டம், நகர மக்களுக்கு பெரும் வரப்பிரசாதமாக அமையும் என கருதப்படுகிறது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.