;
Athirady Tamil News

மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்து கொள்ளவிருக்கும் முதல் பாகிஸ்தானிய அழகி!!

0

பெண்களுக்கான சர்வதேச அழகி போட்டிகளில் மிஸ் வேர்ல்ட், மிஸ் இன்டர்நேஷனல் மற்றும் மிஸ் எர்த் ஆகியவற்றுடன் பிரபலமான மற்றொரு அழகி போட்டி, மிஸ் யூனிவர்ஸ். இது அமெரிக்கா மற்றும் தாய்லாந்து ஆகிய இரு நாடுகளையும் தளமாக கொண்ட மிஸ் யூனிவர்ஸ் நிறுவனத்தால் வருடாவருடம் நடத்தப்படுகிறது. சில தினங்களுக்கு முன் மாலத்தீவில் “மிஸ் யூனிவர்ஸ் பாகிஸ்தான்” போட்டி நடைபெற்றது. அதில் 4 போட்டியாளர்களை பின்னுக்கு தள்ளி, எரிகா ராபின் (24) எனும் இளம் பெண் முதலிடம் பிடித்தார். இதனையடுத்து இவ்வருடம் எல் சால்வடார் நாட்டில், வரும் நவம்பரில் நடைபெறவுள்ள 72-வது “குளோபல் மிஸ் யூனிவர்ஸ்” அழகி போட்டியில், முதல்முறையாக, பாகிஸ்தான் நாட்டின் சார்பாக கலந்து கொள்ளவிருக்கிறார்.

இந்த வெற்றியை குறித்து எரிகா ராபின் தெரிவித்ததாவது: நான் பணிவுடன் இந்த வெற்றியை ஏற்கிறேன். எனக்கு இது உண்மையிலேயே பெருமையான விஷயம். மிஸ் யூனிவர்ஸ் போட்டியில் கலந்து கொண்டு பாகிஸ்தான் நாட்டின் அழகை உலகிற்கு பறைசாற்றுவேன். ஊடகங்கள் தெரிவிக்காத அழகான கலாச்சாரம் எங்களுக்கு உள்ளது. பாகிஸ்தானியர்கள் விருந்தோம்பலில் சிறந்தவர்கள்; பழகுவதற்கு அன்பானவர்கள், பெருந்தன்மையானவர்கள். பாகிஸ்தான் நாட்டின் ருசி மிக்க உணவு வகைகளை உண்டு மகிழவும், எங்கள் நாட்டின் இயற்கையழகையும், பனிமலைகளையும் மற்றும் வயல்வெளிகளையும் காணவும் அனைவரையும் அழைக்கிறேன்.

இவ்வாறு அவர் கூறினார். பாகிஸ்தானின் கராச்சி பகுதியில் உள்ள ஒரு கிறித்துவ குடும்பத்தை சேர்ந்தவர் எரிகா. அவர், அந்நாட்டின் புகழ் பெற்ற மாடலாக பல விலையுயர்ந்த பிராண்டுகளின் விளம்பரங்களில் தோன்றியவர். மேலும், எரிகா ஒரு மென்பொருள் நிறுவனத்தில் துணை மேலாளராக பணிபுரிபவர். இதற்கிடையே எரிகாவின் வெற்றியை “வெட்கக்கேடானது” என அந்நாட்டில் உள்ள மத அடிப்படைவாதிகள் சமூக வலைதளங்களில் விமர்சித்து வருகின்றனர்.

அதே சமயம், எரிகாவிற்கு ஆதரவாக பெண்ணுரிமைவாதிகள் குரல் கொடுத்து வருகின்றனர். இந்நிலையில், “பாகிஸ்தான் அரசாங்கம் எந்த பெண்ணையும் நாட்டின் சார்பாக அழகி போட்டிக்கு அனுப்பவில்லை. இத்தகைய போட்டிகளில் கலந்து கொள்பவர்களை அரசாங்கத்தின் பிரதிநிதியாக கருத முடியாது,” என இது குறித்து அந்நாட்டின் செய்தி மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சர் முர்டாசா சோலங்கி கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.