சிறிலங்கா சுதந்திரக்கட்சியை நிச்சயம் மீட்டெடுப்பேன்: விஜயதாஸ ராஜபக்ச உறுதி
“சிறிலங்கா சுதந்திரக்கட்சியை நிச்சயம் மீட்டெடுப்பேன். நான் கை வைத்த விடயங்கள் தோல்வியில் முடிந்தது கிடையாது.” – என்று சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள நீதி அமைச்சர் விஜயதாஸ ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரிவித்த அவர், “நான் கட்சியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர்களால் பதில் தலைவராக ஏகமனதாகத் தெரிவு செய்யப்பட்டுள்ளேன்.
கட்சியில் உறுப்புரிமை இருப்பதால்தான் பதில் தலைவராகியுள்ளேன். கட்சியை நிச்சயம் மீட்டெடுப்பேன். நான் கைவைத்த காரியங்கள் தோல்வியில் முடிந்தது கிடையாது.
விஜயதாஸவின் சபதம்
தற்போதைய அரசில் பல கட்சிகள் உள்ளன. எனவே, சுதந்திரக் கட்சிக்கும், அதிபருக்கும் இடையில் எவ்வித பிரச்சினையும் கிடையாது. புதிய பதவியை ஏற்றுள்ளதால் அமைச்சுப் பதவி பறிபோகும் என நம்பவில்லை.” என தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சிறிலங்கா சுதந்திர கட்சியின் பதில் தலைவராக நியமிக்கப்பட்ட காரணத்தால் நீதி அமைச்சர் விஜேதாச ராஜபக்ச தனது நாடாளுமன்ற ஆசனத்தை இழக்க நேரிடுமென பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் திஸ்ஸ குட்டியாராச்சி தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.