;
Athirady Tamil News

இந்திய அரசின் ஆயுஸ் புலமைப்பரிசில் திட்டத்துக்கு விண்ணப்பங்கள் கோரல் !

0

இந்திய அரசின் ஆயுஸ் புலமைப்பரிசில்
திட்டத்துக்கு விண்ணப்பங்கள் கோரல் !

ஜூன் 8 முடிவுத் திகதி

இந்திய அரசாங்கத்தினால் வருடாந்தம் வழங்கப்படும் ஆயுஸ் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் இந்தியப் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பதற்காக இலங்கையர்கள் இடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

ஆயுஸ் புலமைப்பரிசில் திட்டத்தின் கீழ் சித்த, ஆயுர்வேத, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் இளமானி, முதுமாணி மற்றும் கலாநிதி கற்கை நெறிகளைத் தொடர முடியும்.

ஒவ்வொரு கற்கை நெறிகளுக்குமான தகைமைகள் மற்றும் தேவைப்பாடுகள் தொடர்பான விபரங்கள் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.

சித்த, ஆயுர்வேத, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் இளமாணிக் கற்கைநெறி ஒன்றுக்காக விண்ணப்பிக்க விரும்புபவர்கள் உயிரியல், பௌதிகவியல், இரசாயனவியல் ஆகிய பாடங்களில் சித்தியடைந்து கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் தகமை பெற்றவர்களாகவும், யோக சாஸ்திரத்தில் கலைமாணி மற்றும் யோகாவில் விஞ்ஞானமாணி ஆகிய பட்டங்களுக்கு விண்ணப்பிப்பவர்கள் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையில் ஏதாவது ஒரு பாடத்துறையில் தகமை பெற்றவர்களாகவும் இருத்தல் வேண்டும்.

சித்த, ஆயுர்வேத, யுனானி மற்றும் ஹோமியோபதி ஆகிய துறைகளில் முதுமாணிக் கற்கைநெறி ஒன்றுக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்திய மத்திய மருத்துவப் பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய – அவ்வத் துறைகளில் இளமாணிப் பட்டத்தைக் கொண்டவர்களாகவும், கலாநிதிப் பட்டத்துக்கு விண்ணப்பிப்பவர்கள் இந்திய மத்திய மருத்துவப் பேரவையினால் ஏற்றுக்கொள்ளப்படக்கூடிய – அவ்வத் துறைகளில் இளமாணி, முதுமாணித் தகைமைகளைக் கொண்டிருக்க வேண்டும்.

இத் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கு அவர்களின் கற்றல் காலம் முழுவதற்குமான கற்கைநெறிக் கட்டணம் மற்றும் மாதாந்த மாணவர் உதவித் தொகை, தங்குமிடத்துக்கான உதவுதொகை மற்றும் வருடாந்த மானியம் என்பன வழங்கப்படும் என்றும், ஆர்வமுடையவர்கள் www.a2ascholarships.iccr.gov.in என்ற இணையத்தளத்தின் ஊடாக எதிர்வரும் ஜூன் மாதம் 8ஆம் திகதிக்கு முன்னர் விண்ணப்பிக்கலாம் என்றும் கொழும்பிலுள்ள இந்தியத் தூதரகத்தின் முதல் செயலாளர் சந்தீப் சௌதாரி அறிவித்துள்ளார்.

மேலதிக விவரங்களை 011-2421605, 011-2422788, 011-2422789 என்ற தொலைபேசி இலக்கங்களுடன் அல்லது [email protected] என்ற மின்னஞ்சல் முகவரி ஊடாக இந்தியத் தூதரகத்தின் கல்விப் பிரிவுடன் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளலாம்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.