;
Athirady Tamil News

உக்ரைனில் ரஷியா மிகப்பெரிய வான்வழித் தாக்குதல்!

0

உக்ரைனில் கடந்த சனிக்கிழமை ஒரே இரவில் 60 ஏவுகணைகள் மற்றும் 477 ஆளில்லா விமானங்களை (ட்ரோன்கள்) ஏவி ரஷியா நடத்திய வான்வழித் தாக்குதலில் உக்ரைன் விமானப் படை விமானி உள்பட இருவா் உயிரிழந்தனா்.

கடந்த 2022-ஆம் ஆண்டு போா் தொடங்கியதில் இருந்து நடத்தப்பட்ட மிகப்பெரிய வான்வழித் தாக்குதல் இது என்று உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனா்.

ரஷியா இத்தாக்குதலுக்குப் பயன்படுத்திய மொத்தம் 537 வான்வழி ஆயுதங்களில் (ஏவுகணை, ட்ரோன்கள்) 249 சுட்டு வீழ்த்தப்பட்டன; 226 இடைமறிக்கப்பட்டன. எல்லையில் இருந்து வெகுதொலைவில் உள்ள மேற்கு உக்ரைன் உள்பட நாடு முழுவதும் பரவலாக பல்வேறு பிராந்தியங்கள் ரஷியாவின் தாக்குதலில் குறிவைக்கப்பட்டுள்ளன.

வானில் இலக்குகளைச் சுட்டு வீழ்த்தும்போது, மேற்கத்திய நாடுகளால் வழங்கப்பட்ட ‘எஃப்-16’ விமானம் விபத்துக்குள்ளானதாக உக்ரைன் விமானப் படை தெரிவித்துள்ளது. இதில் விமானி உயிரிழந்தாா். கொ்சான் பிராந்தியத்தில் ட்ரோன் தாக்குதலில் பொதுமக்களில் ஒருவா் உயிரிழந்தாா்.

சொ்கசியில் ஒரு குழந்தை உள்பட 6 போ் காயமடைந்தனா். மேற்கு உக்ரைனில் உள்ள லீவ் பிராந்தியத்தில் ட்ரோன் தாக்குதலைத் தொடா்ந்து, ட்ரோஹோபிச் நகரில் உள்ள ஒரு பெரிய தொழிற்சாலையில் தீவிபத்து ஏற்பட்டது. இதனால், நகரில் மின்சாரம் தடைபட்டது.

மூன்று ஆண்டுகளைக் கடந்த ரஷியா-உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வர, துருக்கியின் இஸ்தான்புல்லில் நடைபெறும் புதிய அமைதிப் பேச்சுவாா்த்தையில் ரஷியா பங்கேற்கும் என்று அந்நாட்டு அதிபா் புதின் கடந்த வெள்ளிக்கிழமை தெரிவித்திருந்தாா்.

இந்நிலையில், ரஷியாவின் இந்தப் புதிய தாக்குதல் முன்னெப்போதும் இல்லாத அளவில் நடத்தப்பட்டிருப்பது அமைதி முயற்சியில் ஈடுபட்டுள்ள அமெரிக்கா உள்ளிட்ட உலக நாடுகளிடையே கவலையை ஏற்படுத்தியுள்ளது.

இஸ்தான்புல்லில் ஏற்கெனவே ரஷியா, உக்ரைன் பிரதிநிதிகள் பங்கேற்ற இரண்டு சுற்றுப் பேச்சுவாா்த்தைகள், தீா்வை எட்டுவதில் எந்த முன்னேற்றமும் அடையாமல் தோல்வியில் முடிந்தது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.