;
Athirady Tamil News

பணிப்பெண்ணின் பேத்திக்கு வீட்டை எழுதிவைத்த முதியவர்.. ரத்த உறவை கடந்த உண்மையான அன்பு

0

குஜராத் மாநிலம் ஆமதாபாத்தை சேர்ந்தவர் குஸ்டாத் போர்ஜோர்ஜி. என்ஜினீயரான இவர், டாடா நிறுவனத்தில் வேலை பார்த்தார். திருமணமாகி மனைவியுடன் வாழ்ந்த அவருக்கு குழந்தைகள் இல்லை. கடந்த 2001-ம் ஆண்டு அவருடைய மனைவி இறந்துவிட்டார்.

அப்போது அவருடைய வீட்டில் சமையல் வேலைக்காக ஒரு பெண் இருந்தார். அவருடன் அவருடைய பேத்தியான அமிஷா மக்வானாவும் தங்கி இருந்தார்.

சிறுமி அமிஷா மீது அளவற்ற பாசம் வைத்த குஸ்டாத், சிறுமியின் கல்விச்செலவை ஏற்றுக்கொண்டார். என்ஜினீயர் குஸ்டாத் கடந்த 2014-ம் ஆண்டு தனது 89-வது வயதில் மரணம் அடைந்தார். அவர் தான் இறப்பதற்கு முன்பு, ஷாஹிபாக் நகரில் தனக்கு சொந்தமான ஒரு சொகுசு பங்களாவை அந்த சிறுமிக்கு உயிலாக எழுதி வைத்திருந்தார். அப்போது அமிஷா சிறுமியாக இருந்ததால் அவர் வளர்ந்ததும் அவருக்கு அந்த சொத்து கிடைக்கும் வகையில் அந்த உயில் இருந்தது.

சிறுமி மேஜர் ஆகும்வரை அந்த சொத்துக்கு பாதுகாவலராக தனது மருமகன் பெஹ்ராமை நியமித்தார். அவரது இறப்புக்கு பின்னர் இந்த விவரங்கள் தெரிய வந்தது. பொதுவாக சொத்துகளை தனது ரத்த உறவுகளுக்கே உயிலாக எழுதி வைப்பார்கள். ஆனால் மனித நேயமிக்க குஸ்டாக், தனது பணியாளரின் பேத்தியாக இருந்தாலும், அந்த சிறுமியின் மீது அவர் கொண்ட பாசத்தால் அந்த உயிலை எழுதி வைத்திருந்தார்.

சிறுமியாக இருந்த அமிஷா 18 வயதை கடந்ததும், கடந்த 2023-ம் ஆண்டு, தனது வக்கீல் அடில் சயீத் மூலம், உயிலின் மீதான உரிமை கோரி, ஆமதாபாத் உரிமையியல் கோர்ட்டில் மனுதாக்கல் செய்தார்.

அதை ஏற்ற கோர்ட்டு, ஆட்சேபனை ஏதும் இருக்கிறதா என்பதற்காக பொது அறிவிப்பு ஒன்றை வெளியிட்டது. என்ஜினீயர் குஸ்டாக் குடும்பத்தை சேர்ந்த உறவினர்களிடம் இருந்து எந்த ஆட்சேபனையும் வரவில்லை. மேலும் குஸ்டாக்கின் தம்பியும் ஆட்சேபனை இல்லை என்ற சான்றிதழை அமிஷாவுக்கு ஆதரவாக வழங்கினார்.

இதையடுத்து கடந்த 2-ந்தேதி, அமிஷாவுக்கு 2014-ம் ஆண்டு எழுதி வைக்கப்பட்ட உயில்படி சொத்து வழங்கப்பட்டது.

இதுபற்றி அமிஷா மக்வானா கூறுகையில், என்ஜினீயர் குஸ்டாக் எனக்கு தாயும், தந்தையுமாக இருந்தார். என்னை தத்து எடுக்க விரும்பினார். ஆனால் மத நம்பிக்கையை பாதுகாப்பதற்காக அதை அவர் செய்யவில்லை. ரத்தன் டாடாவை எல்லா வகையிலும் பின்பற்றிய அவர், உயில் விவகாரத்திலும் அவரை பின்பற்றி ரத்த உறவு இல்லாத எனக்கு இந்த சொத்தை வழங்கியுள்ளார் என்று நெகிழ்ச்சியுடன் கூறினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.