;
Athirady Tamil News

ஆப்கன் நிலநடுக்கம் வெளியுலகுக்குத் தெரிய தாமதம் ஆனது ஏன்? துயரக் கதை!

0

தலிபான்களின் ஆட்சி நடைபெற்று வரும் ஆப்கானிஸ்தானில், ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டு இரண்டு மாகாணங்களே முழுமையாக நாசமாகியிருக்கும் நிலையில், திங்கள்கிழமை காலைதான் அந்த செய்தி வெளியுலகுக்குத் தெரிய வந்தது.

நிலநடுக்கம் ஏற்பட்டது, ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு. அதிலும் ஆப்கானிஸ்தானின் மலைப் பகுதியான கிழக்கு மாகாணங்களில் இங்கு தொலைத்தொடர்பு வசதியே குறைவு. இதில் நிலநடுக்கத்தால் தொலைத்தொடர்பு வசதி முற்றிலும் பாதிக்கப்பட்டிருந்தது.

இதனால், நிலநடுக்கம் ஏற்பட்டதும், அப்பகுதியில் பதற்றம் அதிகரித்ததே தவிர, அது பற்றி ஆப்கானிஸ்தானின் பிற பகுதிகளுக்கே தாமதமாகத்தான் தெரிய வந்திருக்கும். காரணம் மோசமாக பாதிக்கப்பட்ட தொலைத்தொடர்பு.

கடந்தகாலங்களில்கூட இதுதான் நிலைமை. முதலில் பலி எண்ணிக்கை தெரிய வராமல் இருக்கும். சர்வதேச ஊடங்களின் பார்வை பட்டதும்தான் பலி எண்ணிக்கை கிடுகிடுவென உயரும்.

கடந்த 2021ஆம் ஆண்டு முதல், நாடு தலிபான்களின் ஆட்சியின் கீழ் உள்ளது. இந்த அரசை பல உலக நாடுகள் அங்கீகரிக்கவில்லை. இஸ்லாமிய குழுவான தலிபான்கள் மீண்டும் ஆப்கானிஸ்தானில் ஆட்சிக்கு வந்ததால், பல சர்வதேச ஊடகவியலாளர்கள், நாட்டை விட்டு வெளியேறினர். பல ஊடகங்கள் தங்களது செய்தியாளர்களை ஆப்கானிஸ்தானிலிருந்து திரும்பப் பெற்றுக்கொண்டது. இதனால், ஆப்கானிஸ்தானில் என்ன நிலைமை என்பதை வெளியுலகுக்குச் சொல்ல ஒன்றுமில்லாமல், ஒருவருமில்லாமல் போனது.

அது மட்டுமா? தலிபான்களின் ஆட்சியால், பல தன்னார்வ அமைப்புகள் நாட்டை விட்டு வெளியேறின. இவைதான், ஆப்கானிஸ்தானில் என்ன நடக்கிறது என்பதை உறுதி செய்ய இருந்த ஒரே வழியாக இருந்தது. அதுவும் இல்லாமல் ஆனது.

சர்வதேச உதவிகளைப் பெறுதில் பல கட்டுப்பாடுகள் இருந்ததால் உதவும் கைகள் உதறிப்போனது. மக்கள் நிலைமை சொல்லொணாத் துயரத்துக்கு ஆளானது.

தலிபான்கள் ஆட்சியமைத்தபோது, பல லட்சக்கணக்கான ஆப்கன் மக்களுக்குக் கிடைத்துவந்த மனிதாபிமான உதவிகள் நிறுத்தப்பட்டன. வெளிநாட்டு உதவித் தொகைகள், சர்வதேச நிதிகள் நின்றன. 1990ஆம் ஆண்டு தலிபான்கள் ஆட்சிக் காலத்தின்போது ஆப்கனின் பொருளாதார நிலையே மீண்டும் வந்தது.

ஆப்கானிஸ்தான் நிதிநிலை அறிக்கையில் இருந்த 80 சதவீத நிதி வெளிநாட்டிலிருந்து வந்தது. அவைதான் சுகாதாரத் துறைக்கு அடிப்படையாக இருந்தது. அது முற்றிலும் நின்றுபோனது.

ஜலாலாபாத் முக்கிய மருத்துவமனை, நிலநடுக்கத்தைத் தொடர்ந்து, காயமடைந்தவர்களால் நிரம்பி வழிந்த நிலையில், மேலும் யாரையும் அனுமதிக்க முடியாமல் மூடப்பட்டது. இதனால், ஏராளமானோர் அருகில் உள்ள பாகிஸ்தான் மருத்துவமனைகளுக்குச் செல்லும் துயர நிலை ஏற்பட்டது.

அமெரிக்காவிலிருந்து வந்த மிகப்பெரிய நிதி ஆதாரம் நின்றுபோனதால் பொருளாதாரம் பாதாளம் சென்றது.

ஏற்கனவே நிலநடுக்கத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகள் இன்னமும் சீரடையாமல் இருக்கும் நிலையில் தற்போது நேரிட்ட நிலநடுக்கத்தால் நாசமான கிராமங்கள் மீண்டும் அதிலிருந்து மீள்வது இயலுமா என்பதை உலக நாடுகள்தான் சொல்ல வேண்டும். சொல்ல முடியும்.

குனார் மாகாணம் மிகுந்த கட்டுப்பாடுகளைக் கொண்ட சமுதாய மக்கள் வாழும் பகுதி. இதனால் பெண்கள் சிகிச்சைக்கு மருத்துவமனைக்கு வருவதே கேள்விக்குறி. சிறுமிகளின் நிலையும் இதுதான். அதிலும் குடும்பத் தலைவர்களை இழந்த குடும்பங்களின் நிலையை வார்த்தையால் விவரிக்க இயலாது.

அது மட்டுமா? மீட்புப் பணியில் ஒரு பெண்கூட ஈடுபட முடியாது. கடந்த 2022 நிலநடுக்கத்தின்போதுகூட, காயமடைநத் பெண்கள் சில நாள்களுக்குப் பின்பே மருத்துவமனைக்கு வந்தனர். இதனால் நிலநடுக்கம் புரட்டிப்போட்டிருப்பது வெறும் கட்டடங்களை அல்ல. ஏற்கனவே, பாதாளத்தில் இருந்த மக்களின் வாழ்வாதாரத்தை. வாழ்க்கை முறையை.

You might also like

Leave A Reply

Your email address will not be published.