;
Athirady Tamil News

போர்நிறுத்தமா அல்லது இஸ்ரேலின் அராஜகமா… அமெரிக்காவை எச்சரித்த ஈரான்

0

போர்நிறுத்தம் அல்லது இஸ்ரேல் வாயிலாகப் போரைத் தொடர்வது என ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும் என்று ஈரானிய வெளிவிவகார அமைச்சர் அப்பாஸ் அராக்ச்சி அமெரிக்காவை எச்சரித்துள்ளார்.

சமூக ஊடகத்தில் பதிவிட்டுள்ள அராக்ச்சி, ஈரான்-அமெரிக்கா போர்நிறுத்த ஒப்பந்தத்தின் நிபந்தனைகள் தெளிவானவை மற்றும் வெளிப்படையானவை: அமெரிக்கா போர்நிறுத்தம் அல்லது இஸ்ரேல் வழியாகத் தொடரும் போர் ஆகிய இரண்டில் ஒன்றைத் தெரிவு செய்ய வேண்டும்.

இரண்டையும் ஒரே நேரத்தில் முன்னெடுக்க முடியாது. லெபனானில் நடைபெறும் படுகொலைகளை உலகம் பார்த்துக் கொண்டிருக்கிறது. பந்து தற்போது அமெரிக்காவின் களத்தில் உள்ளது; அமெரிக்கா தனது வாக்குறுதிகளின்படி செயல்படுமா என்பதை உலகம் உற்றுநோக்கி வருகிறது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்காவிற்கும் ஈரானுக்கும் இடையில் இரண்டு வார காலப் போர் நிறுத்தம் ஏற்பட்டுள்ள நிலையில், இதற்கு இஸ்ரேல் அச்சுறுத்தல் விடுப்பதாக ஈரான் புதன்கிழமை குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேலும், இஸ்ரேலியப் படைகள் லெபனான் மீது தொடர்ந்து தாக்குதல்களை நடத்தினால், அது ஒப்பந்தம் முறிவடைவதற்கும் ஹார்முஸ் நீரிணையில் பதற்றங்கள் மீண்டும் ஏற்படுவதற்கும் வழிவகுக்கும் என்றும் ஈரான் தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இருப்பினும், தற்காலிகப் போர்நிறுத்த ஒப்பந்தத்தில் லெபனானைச் சேர்ப்பதை வெள்ளை மாளிகை நிராகரித்துள்ளது; ஹிஸ்புல்லாவிற்கு எதிரான இஸ்ரேலின் தொடர் இராணுவ நடவடிக்கையை அமெரிக்கா ஆதரித்துள்ளது என்பதே உடன்படிக்கை மீறலாகும்.

வெள்ளை மாளிகைச் செய்திச் செயலாளர் கரோலின் லெவிட் குறிப்பிடுகையில், போர் நிறுத்தத்தின் ஒரு பகுதியல்ல லெபனான் என்று விளக்கமளித்துள்ளார்.

ஆனால், போர் நிறுத்தம் தொடர்பில் அமெரிக்காவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட 10 அம்ச நிபந்தனைகளில் லெபனான் தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த ஒப்பந்தத்தில் லெபனான் சேர்க்கப்படவில்லை என்றே ட்ரம்பும் குறிப்பிட்டுள்ளார். லெபனானில் இஸ்ரேலிய இராணுவ நடவடிக்கை ஏன் இந்த ஒப்பந்தத்திலிருந்து விலக்கி வைக்கப்பட்டிருந்தது என்று மீண்டும் கேட்கப்பட்ட கேள்விக்கு, ஹிஸ்புல்லா காரணம் என பதிலளித்துள்ள ட்ரம்ப், அவர்கள் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்படவில்லை என்று விளக்கமளித்தார்.

ஹிஸ்புல்லா படைகளால் இஸ்ரேலுக்கு ஏற்படும் அச்சுறுத்தலை முறியடிக்கும் நோக்கில், தென் லெபனானில் இஸ்ரேலியர்கள் தங்கள் தாக்குதலைத் தொடர்வார்கள் என்று இஸ்ரேலியப் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு தெரிவித்துள்ளார்.

மட்டுமின்றி, அமெரிக்கா, இஸ்ரேல், ஈரானின் அரபு அண்டை நாடுகள் மற்றும் உலகிற்கு இனி அணு, ஏவுகணை மற்றும் பயங்கரவாத அச்சுறுத்தலாக ஈரான் இல்லாதிருப்பதை உறுதி செய்வதற்கான அமெரிக்காவின் முயற்சிகளுக்கு இஸ்ரேலும் ஆதரவளிக்கிறது என நெதன்யாகு அறிக்கை ஒன்றில் குறிப்பிட்டுள்ளார்

இதற்கிடையில், துணை ஜனாதிபதி ஜே.டி. வேன்ஸ் தலைமையிலான தூதுக்குழுவுடன், சனிக்கிழமை இஸ்லாமாபாத்தில் ஈரானுடன் நடைபெறவுள்ள அமைதிப் பேச்சுவார்த்தையில் அமெரிக்கா பங்கேற்கும் என்பதை வெள்ளை மாளிகை உறுதி செய்துள்ளது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.