;
Athirady Tamil News

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுக்கு இன்று இறுதி நாள்!

0

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் தொடர்பான சத்தியக்கடதாசியைச் சமர்ப்பிப்பதற்கு வழங்கப்பட்ட கால அவகாசம் இன்று (10) வெள்ளிக்கிழமையுடன் நிறைவடைவதாக இலஞ்ச, ஊழல் விசாரணை ஆணைக்குழு இறுதி எச்சரிக்கை விடுத்துள்ளது.

2015ஆம் ஆண்டுக்குரிய சொத்து விபரங்கள், வருடாந்த செலவினங்கள் மற்றும் வருமான ஆதாரங்கள் தொடர்பாக இந்த ஆவணங்கள் கோரப்பட்டுள்ளன

சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும்
விபரங்களைச் சமர்ப்பிக்கத் தவறினால், ஊழல் எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் அவருக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என ஆணைக்குழு திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் 23ஆம் திகதி வழங்கப்பட்ட 14 நாள் கால அவகாசம் எக்காரணம் கொண்டும் நீடிக்கப்பட மாட்டாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் கருத்து வெளியிட்டுள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் நாமல் ராஜபக்சவை வேட்பாளராக முன்னிறுத்தத் தமது கட்சி எதிர்பார்த்துள்ளதாகவும், இளைஞர்களுக்கான பொருளாதாரத்தைக் கட்டியெழுப்ப அவராலேயே முடியும் என்றும் அவர் குறிப்பிட்டார்.

தற்போதைய அரசாங்கம் எரிபொருள், மின்சாரம் மற்றும் எரிவாயு விலைகளை உயர்த்தி மக்களின் வாழ்வாதாரத்தைச் சீர்குலைத்துள்ளதாகக் குற்றம் சாட்டிய அவர், மகிந்த ராஜபக்ச மீதான திருட்டுக் குற்றச்சாட்டுகள் இதுவரை நிரூபிக்கப்படவில்லை என்றும் சாகர காரியவசம் தெரிவித்தார்.

மகிந்த ராஜபக்ச நிறுத்திய இடத்திலிருந்து நாட்டை மீண்டும் ஆசியாவின் பலமான நாடாக மாற்றுவதே தமது இலக்கு என அவர் மேலும் வலியுறுத்தினார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.