;
Athirady Tamil News

ஆவணத்தை தேடியே அனலைதீவில் கனேடியப் பிரஜைகள் மீது தாக்குதல்! விசாரணையில் புதிய திருப்பம்!!

0

ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அனலைதீவில் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு கனேடிய பிரஜைகளைத் தாக்கி பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பான விசாரணையில் புதிய திருப்பம் ஏற்பட்டுள்ளது.

தாக்குதலாளிகள் கொள்ளையிடும் நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் ஓர் ஆவணத்தை தருமாறு கோரியே தாக்குதல் நடத்தியுள்ளனர் எனவும் தெரியவருகின்றது.

கனடாவிலிருந்து 75 வயதுடைய ஒருவரும் அவரது மனைவியும் அனலைதீவிலுள்ள வீட்டுக்கு வந்து நின்றுள்ளனர். அவர்களது வீட்டில் ஏற்கனவே ஆசிரியர் ஒருவர் தங்கியுள்ளார். அத்துடன் வீட்டு மின்இணைப்பு திருத்தத்துக்காக ஒருவரும் கடந்த 21ஆம் திகதி இரவு அங்கு தங்கியிருந்துள்ளார்.

அன்றைய தினம் இரவு வீட்டுக்குள் வாள்களுடன் மூவர் நுழைந்துள்ளனர். அவர்கள் முகத்தை மூடிக்கட்டியிருந்துள்ளனர். வீட்டில் தங்கியிருந்த ஆசிரியரையும், மின்இணைப்பு திருத்தத்துக்காக தங்கியிருந்தவரையும் கட்டியுள்ளனர்.

‘உங்களுடன் எங்களுக்கு பிரச்சினை இல்லை. அமைதியாக இருங்கள். இல்லையென்றால் வெட்டிவிடுவோம்’ என்று வாள்களுடன் வந்தவர்கள் எச்சரித்துள்ளனர்.

கனடாவிலிருந்து வந்த வீட்டின் உரிமையாளரை வாளால் தாக்கியுள்ளனர். அவரை வெளியில் இழுத்துச் சென்று ‘சி.ஐ.டி.யிடம் கொடுக்க கொண்டு வந்த ஆவணம் எங்கே?’ என்று கேட்டுத் தாக்கியுள்ளனர்.

அவரின் மனைவி மீதும் தாக்குதல் நடத்தியுள்ளனர். அவர் அணிந்திருந்த தாலிக்கொடி உள்ளிட்ட நகைகள் எதனையும் தாக்குதலாளிகள் கொள்ளையிடவில்லை.

அவர்களின் கனேடிய கடவுச்சீட்டு இருந்த பொதிகளை அவிழ்த்து சோதனையிட்டு அதிலிருந்த ஆயிரத்து 20 கனேடிய டொலர் மற்றும் 25 ஆயிரம் ரூபா இலங்கைப் பணம் என்பனவற்றை மாத்திரம் எடுத்துச் சென்றுள்ளனர்.

‘குருநகர் அல்லது ஊர்காவற்றுறையிலிருந்து படகுமூலம் அனலைதீவுக்கு தாக்குதலாளிகள் வந்துள்ளார்கள். கனேடிய கடவுச்சீட்டு, கனேடிய டொலர் மற்றும் இலங்கைப் பணத்தை மட்டுமே கொள்ளையடித்துள்ளனர். தாக்குதலாளிகள் இதுவரை கைதாகவில்லை’ என்று ஊர்காவற்றுறை தலைமை பொலிஸ் பொறுப்பதிகாரி தெரிவித்தார்.

புலம்பெயர் தேசத்தில் நிலவிய முற்பகைமை காரணமாக இந்தத்தாக்குதல் நடத்தப்பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுவதாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.