;
Athirady Tamil News

பெண்களுக்கான தலைமைத்துவத்தை ஏற்குமாறு வடக்கு மாகாண ஆளுநருக்கு ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியம் அழைப்பு

0

ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பியோ ஸ்மித், வடக்கு மாகாண ஆளுநர் பி.எஸ்.எம். சார்ள்ஸ் அவர்களை சந்தித்து கலந்துரையாடினர். யாழ்ப்பாணத்திலுள்ள ஆளுநரின் உத்தியோகபூர்வ வாசஸ்தலத்தில் இந்த சந்திப்பு(28.02.2024) நடைபெற்றது.

பெண்கள், இளைஞர்கள் மற்றும் சமூகங்கள் மீது கவனம் செலுத்தி பாலியல் மற்றும் குடும்பதிட்ட ஆரோக்கியம், பெண்களுக்கான உரிமைகள் மற்றும் பாலின அடிப்படையிலான வன்முறைகளை தடுப்பது உள்ளிட்ட பல விடயங்கள் குறித்து அதிகாரிகள், துறைசார் நிபுணர்கள் மற்றும் சிவில் அமைப்புகளுடன் கலந்துரையாடும் நோக்கில் பணிப்பாளர் பியோ ஸ்மித் இலங்கைக்கு விஜயம் மேற்கொன்டுள்ளார். அதன் ஒரு கட்டமாக வடக்கு மாகாண ஆளுநரை சந்தித்து, மாகாணத்தில் வசிக்கும் பெண்களின் நிலை குறித்து கலந்துரையாடினார்.

பொலீஸ் நிலையங்களில் பாலின சமத்துவத்தின் அடிப்படையிலான விசாரணை பிரிவை மேம்படுத்துவதற்கான தேவைக்குறித்தும், தமிழ் பெண் பொலீஸ் உத்தியோகஸ்தர்களுக்கான ஆளணி தொடர்பிலும் ஆளுநர் இதன்போது தெளிவுப்படுத்தினார்.

பெண்களுக்கான தொழில் சட்டங்கள் போதுமானதாக இல்லை என தெரிவித்த ஆளுநர், நிறுவனமயப்படுத்தப்பட்ட பாதுகாப்பு பெண்களுக்கு இல்லை எனவும் கூறினார். தொழில் இடங்களில் கழிப்பறை வசதி, உணவு வசதிகள் உள்ளிட்ட பல விடயங்கள் பெண்களுக்கு போதுமானதாக இல்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.

வடக்கு மாகாணத்தில் 65 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பெண் தலைமைதாங்கும் குடும்பங்கள் காணப்படுகின்ற போதிலும், அவர்கள் வாழ்வியலை நாடாத்தி செல்வது பெரும் போராட்டமாக அமைந்துள்ளதாகவும் ஆளுநர் தெரிவித்தார்

வடக்கு மாகாணத்தில் வசிக்கும் பெண்களின் நிலை தொடர்பில் கேட்டறிந்துக்கொண்ட ஐக்கிய நாடுகளின் சனத்தொகை நிதியத்தின் ஆசிய மற்றும் பசுபிக் பிராந்தியத்திற்கான பணிப்பாளர் பியோ ஸ்மித், இங்குள்ள பெண்களுக்கான தலைமைத்துவத்தை ஏற்று, அவர்களுக்கான முன்மாதிரியாக செயல்பட வடக்கு மாகாண ஆளுநருக்கு அழைப்பு விடுத்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.