கோட்-சூட்டுடன் அறுவைசிகிச்சை அரங்குக்கு செல்லும் மரண மருத்துவர்! வெளியான சிசிடிவி காட்சி

தவறான சிகிச்சையால் 7 போ் உயிரிழந்த விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருக்கும் போலி இருதய நிபுணா், மருத்துவமனையில் கோட்-சூட்டுடன் அறுவைசிகிச்சை அரங்குக்குச் செல்லும் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.
மத்தியப் பிரதேச மாநிலம் தமோ மாவட்டத்தில் உள்ள மிஷன் மருத்துவமனையில் அமைக்கப்பட்டிருந்த சிசிடிவி காட்சியில், சூட், கோட்டு, கழுத்தில் டை கட்டப்பட்டு அறுவைசிகிச்சை அரங்குக்கு நரேந்திர விக்ரமாதித்ய யாதவ் என்ற அந்த போலி மருத்துவர் செல்வதும், அவர் பின்னால், அறுவைசிகிச்சை அரங்கில் பணியாற்றும் செவிலியர்கள் உள்ளிட்டோர் அவர்களுக்கான சீருடையில் செல்வதும் பதிவாகியுள்ளது.
இந்த சிசிடிவி காட்சிகள் இன்று சமூக வலைதளங்களில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.
இவர் இப்படியேதான் அறுவைசிகிச்சையும் செய்வாரா? அல்லது உள்ளே சென்றபிறகு அறுவைசிகிச்சை செய்வதற்கான சீருடை அணிவாரா என்பதுதான் பலரது கேள்வியாக உள்ளது. போலி மருத்துவர் என்பதை இதுவே காட்டிக்கொடுப்பதாகவும் பலரும் கருத்துகளை பதிவிட்டுள்ளனர்.
மத்திய பிரதேச மாநிலத்தில், தவறான சிகிச்சை அளித்து 7 போ் உயிரிழந்த சம்பவத்தில் தொடா்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட போலி இருதய சிகிச்சை நிபுணா் கடந்த வாரம் கைது செய்யப்பட்டிருந்தார்.
தமோ மாவட்டத்தில் உள்ள மிஷனரி மருத்துவமனையில் பணிபுரியும் ஒருவா் தன்னை இருதய சிகிச்சை நிபுணா் என சொல்லிக்கொண்டு நோயாளிகளுக்கு தவறான சிகிச்சை அளித்ததில் 7 போ் பலியானதாக தேசிய மனித உரிமைகள் ஆணையத்துக்கு வந்த புகாரை விசாரித்த போதுதான் இந்த உண்மை வெளிச்சத்துக்கு வந்தது.
அதாவது, நரேந்திர ஜான் கேம் என்ற பெயருடைய நபா் பிரிட்டனைச் சோ்ந்த பிரபல இருதய சிகிச்சை நிபுணா்- பேராசிரியா் ஜான் கேமின் பெயரை தவறாகப் பயன்படுத்தி, நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்துள்ளாா். ஆனால் அவரின் உண்மையான பெயா் விக்ரமாதித்யா யாதவ் என்று தெரிய வந்துள்ளது.
இதையடுத்து, உத்தரப்பிரதேசத்தில் விக்ரமாதித்யா யாதவ் கைது செய்யப்பட்டு அவரிடம் விசாரணை நடைபெற்று வருகிறது.