;
Athirady Tamil News

ஈரானுடன் வர்த்தகம் செய்யும் நாடுகளுக்கு 25% உடனடி வரி: அதிபர் டிரம்ப் உத்தரவு!

0

ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்தை ஈரான் அரசு ஒடுக்குவதைக் கண்டிக்கும் வகையில், அந்நாட்டுடன் வர்த்தக தொடர்பில் இருக்கும் அனைத்து நாடுகள் மீதும் 25 சதவீத கூடுதல் வரி விதிக்கப்படுவதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்துள்ளார்.

போராட்டங்களுக்கு இடையே மக்கள் 2,000 பேர் உயிரிழந்துள்ள நிலையில் அமெரிக்கா அறிவித்துள்ள இந்தத் திடீர் வரி, ஈரானுக்குப் புதிய நெருக்கடியாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இது தொடர்பாக தனது “ட்ரூத் சோஷியல்’ சமூக ஊடகப் பக்கத்தில் பதிவிட்டுள்ள டிரம்ப், “ஈரானுடன் வர்த்தகம் செய்யும் எந்தவொரு நாடும், அமெரிக்காவுடனான அனைத்து வர்த்தகங்களுக்கும் 25 சதவீத கூடுதல் வரியைச் செலுத்த வேண்டும். இந்த உத்தரவு உடனடியாக அமலுக்கு வருகிறது; இதில் எந்த மாற்றமும் இல்லை’ என்று குறிப்பிட்டுள்ளார்.

2,000-ஐ கடந்த உயிரிழப்பு: ஈரானில் கடந்த இரண்டு வாரங்களாக நடைபெற்று வரும் ஆட்சி எதிர்ப்பு போராட்டங்கள் தீவிரமடைந்துள்ளன. இந்தப் போராட்டத்தை ஒடுக்குவதற்கு பாதுகாப்புப் படையினர் மேற்கொண்ட நடவடிக்கைகளில் இதுவரை அரசு சார்ந்த 135 பேர் உள்பட சுமார் 2,000 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 10,700 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஈரானில் இணையச் சேவை முடக்கப்பட்டுள்ளதால், கள நிலவரத்தை அறிவதில் சிக்கல் நீடிக்கிறது.

இந்த வன்முறையைக் கண்டித்துள்ள டிரம்ப், ஈரான் அரசு தனது போக்கை மாற்றிக்கொள்ளாவிட்டால் ராணுவ நடவடிக்கை எடுக்கவும் தயங்க மாட்டோம் என எச்சரித்துள்ளார்.

“போராட்டக்காரர்கள் மீதான ஈரான் அரசின் வன்முறைகள் எல்லைத் தாண்டிவிட்டது. இனி பேச்சுவார்த்தை மூலம் அமெரிக்காவின் பிடியில் இருந்து தப்பிக்க அவர்கள் முயலுகின்றனர். இது தொடர்பாக தேசிய பாதுகாப்பு குழுவுடன் ஆலோசித்து வருகிறேன்’ என்று டிரம்ப் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

அமெரிக்காவுடன் ஈரான் ரகசியப் பேச்சு: போராட்டங்கள் ஒருபுறமிருக்க, அமெரிக்க அதிபரின் சிறப்புப் பிரதிநிதி ஸ்டீவ் விட்காஃப் உடன் ஈரான் தொடர்ந்து பேசி வருவதாக அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் அப்பாஸ் அராக்சி தெரிவித்துள்ளார். “போராட்டங்கள் தொடங்குவதற்கு முன்பிருந்து இந்தத் தொடர்பு நீடிக்கிறது. ஆனால், அமெரிக்கா முன்வைக்கும் சில நிபந்தனைகளும், மிரட்டல்களும் ஏற்றுக்கொள்ள முடியாதவை’ என்று அவர் கூறினார்.

இதனிடையே, வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் கேரோலின் லெவிட் கூறுகையில், “ஈரான் வெளியே தெரிவிக்கும் கருத்துகளுக்கும் எங்களுக்கு அனுப்பும் ரகசியத் தகவல்களுக்கும் நிறைய முரண்பாடுகள் உள்ளன. அவர்களின் ஒவ்வொரு செய்திகளையும் டிரம்ப் கவனித்து வருகிறார். அதேநேரம், தேவையெனில் ராணுவ நடவடிக்கையை எடுக்க அவர் தயங்கமாட்டார் என்பது ஈரானுக்குத் தெரியும்’ என்றார்.

இந்தியாவுக்கு பெரிதாகப் பாதிப்பு இருக்காது: மத்திய அரசு வட்டாரங்கள்

அமெரிக்க அதிபரின் இந்த வரி விதிப்பால் இந்தியாவுக்கு பெரிதாகப் பாதிப்பு இருக்காது என்று மத்திய அரசு வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுதொடா்பாக அந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘இந்தியா வா்த்தகம் மேற்கொள்ளும் முதல் 50 நாடுகளின் வரிசையில்கூட ஈரான் இல்லை. கடந்த நிதியாண்டு ஈரானுடன் இந்தியா மேற்கொண்ட வா்த்தகத்தின் மதிப்பு 1.6 பில்லியன் டாலராகும் (சுமாா் ரூ.14,450 கோடி). இது அந்த நிதியாண்டில் இந்தியா மேற்கொண்ட மொத்த வா்த்தகத்தில் வெறும் 0.15 சதவீதம்தான்.

சில பொருளாதார காரணங்களால் நடப்பு நிதியாண்டில் ஈரானுடனான இந்தியாவின் வா்த்தக மதிப்பு மேலும் சரியக் கூடும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

அந்நாட்டுடன் குறைந்த அளவில் இந்தியா வா்த்தகம் மேற்கொண்டு வரும் நிலையில், அதில் உணவு மற்றும் மருந்துப் பொருள்களின் வா்த்தகம் பிரதான இடம்பிடித்துள்ளன. எனவே, டிரம்ப்பின் தற்போதைய வரி விதிப்பு முடிவால் இந்தியாவுக்கு பெரிதாகப் பாதிப்பு இருக்காது’ என்று தெரிவித்தன.

கடந்த 2019-ஆம் ஆண்டு அமெரிக்க அதிபராக இருந்த டிரம்ப் விதித்த பொருளாதாரத் தடைகளால், ஈரானிடம் இருந்து கச்சா எண்ணெய் கொள்முதல் செய்வதை இந்தியா நிறுத்திக்கொண்டது குறிப்பிடத்தக்கது.

You might also like

Leave A Reply

Your email address will not be published.