;
Athirady Tamil News

மாகாண சபையின் நியதிச் சட்டங்களை மீறி உள்ளூராட்சி ஆணையாளரின் சுற்றுநிருபத்தை நடைமுறைப்படுத்த இயலாது.கிஷோர் காட்டம்

0

வடக்கு மாகாண சபையின் நியதிச் சட்டங்களை மீறி உள்ளூராட்சி ஆணையாளரால் அனுப்பப்படுகின்ற சுற்றுநிருபங்களை ஒரு போதும் நடைமுறைப்படுத்த முடியாது எனவும் அவ்வாறு நடைமுறைக்கு முரணான விதத்தில் அனுப்பப்பட்ட சுற்றுநிருப கடிதத்தை மீள அனுப்பி எதிர்ப்பினை வெளியிட வேண்டும் என சாவகச்சேரி நகரசபையின் உபதவிசாளர் ஞா.கிஷோர் வலியுறுத்தியுள்ளார்.

கடந்த செவ்வாய்க் கிழமை இடம்பெற்ற மாதாந்த அமர்வின்போதே அவர் மேற்படி விடயத்தை சுட்டிக்காட்டியிருந்தார். இது தொடர்பாக மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்;

அண்மையில் வடக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரால் தவிசாளர் மற்றும் செயலாளருக்கு முகவரியிட்டு கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

அதில் வணிக நிறுவனங்களுக்கான வியாபார உரிமம் வழங்கும் போது கட்டிடங்களுக்கான குடிபுகு சான்றிதழ் அவசியம் எனவும் அதனை சமர்ப்பிக்காத பட்சத்தில் வியாபார உரிமத்தை இடைநிறுத்தி சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்துமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேற்படி சுற்றுநிருபம் உள்ளூராட்சி அதிகாரசபைகள் தொடர்பாக மாகாணசபையால் இயற்றப்பட்ட நியதிச்சட்டங்களுக்கு முரணாக உள்ளது. மாகாண சபையால் உருவாக்கப்பட்ட துணை விதிகளில் வியாபார அனுமதிக்கு குடிபுகு சான்றிதழ் அவசியமில்லை. மாகாணசபை முறைமையை நடைமுறைப்படுத்த கோருகின்ற இத்தருணத்தில் இவ்வாறான மாகாணசபை துணை விதிகளுக்கு முரணான செயற்பாடுகளை ஏற்க முடியாது.

கட்டிடங்களுக்கு அனுமதி பெறப்பட வேண்டும். குடிபுகுதல் சான்றிதழ் பெறப்பட வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து கிடையாது. ஆனால் வடக்கு மாகாணத்தை பொறுத்தவரை 2010 ஆம் ஆண்டின் பின்னரே கட்டிடங்களுக்கு அனுமதி பெறும் நடவடிக்கைகள் ஆரம்பித்தன.
அதற்கு முன்னரே 50 வருட காலத்திற்கும் மேலாக வியாபார நடவடிக்கைகளில் தொடர்ச்சியாக ஈடுபட்டு வருகின்ற வியாபாரிகள் உள்ளனர். எனவே உள்ளூராட்சி சட்டத்திற்கு முரணான கடித்தை ஏற்க முடியாது. உத்தியோகதர்களை பிழையாக வழிநடத்த முயற்சிக்க வேண்டாம்.

எனவே உள்ளூராட்சி ஆணையாளரால் அனுப்பப்பட்ட சுற்றுநிருபம் மீளப்பெறப்பட வேண்டும். பழைய முறைமையில் வியாபாரிகளுக்கு வியாபார உரிமம் வழங்கப்பட வேண்டும். அதனையும் மீறி நடைமுறைப்படுத்த முயன்றால் வடக்கில் உள்ள சகல உள்ளூராட்சி சபைகளும் இணைந்து இது தொடர்பில் நீதிமன்றத்தை நாடவேண்டிய நிலை ஏற்படும் எனவும் அவர் எச்சரித்தார்.

You might also like

Leave A Reply

Your email address will not be published.