இலங்கைக்கு நிதி கொடுக்காதீங்க.. ஜப்பானிடம் பற்ற வைத்த ரணில்? விக்கிலீக்ஸ் வெளியிட்ட சீக்ரெட்? (படங்கள்)
இலங்கையின் புதிய அதிபராக பொறுப்பேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே கடந்த 2007-ம் ஆண்டு ஜப்பான் நாட்டிடம் இலங்கைக்கு நிதி வழங்க வேண்டாம் என கேட்டுக்கொண்ட தகவல்களை விக்கிலீக்ஸ் அம்பலப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான இலங்கை கடும் பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. இதனால் அந்த நாட்டில் அத்தியாவசிய பொருட்களுக்கு கூட திண்டாட்டம் ஏற்பட்டுள்ளது.
குறிப்பாக பெட்ரோல், டீசல் உள்பட அத்தியாவசிய பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டது. இலங்கை வரலாற்றில் முதன் முறையாக ஏற்பட்ட இப்படி ஒரு கஷ்ட காலத்தை தாங்க முடியாத மக்கள் ஆளும் ராஜபக்சே அரசுக்கு எதிராக கொதித்தெழுந்தனர்.
மக்களின் பலத்த எதிர்ப்பு
மேலும் அவர்கள் ராஜபக்சே சகோதரர்களை ஆட்சி அதிகாரத்தில் இருந்து வெளியேறுமாறு மிகப்பெரிய அளவில் போராட்டம் நடத்தினர். பிரதமரின் அதிகாரபூர்வ இல்லமான அலரி மாளிகையையும் போராட்டக்காரர்கள் ஆக்கிரமித்து இருந்தனர். மக்களின் கடும் எதிர்ப்புக்கு பணிந்து மகிந்த ராஜபக்சே பதவி விலகினார். ஆனால் பதவியில் இருந்து விலக மறுத்து கோத்தபய ராஜபக்சே அடம் பிடித்தார். ஆனால், இலங்கையில் போராட்டக்காரர்கள் அதிபர் மாளிகையை முற்றுகையிட்ட காரணத்தால், தப்பித்தோம் பிழைத்தோம் என ஓட்டம் பிடித்த அதிபர் கோத்தபய ராஜபக்சே தற்போது சிங்கப்பூரில் முகாமிட்டுள்ளார்.
புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே
சிங்கப்பூரில் இருந்தபடியே தனது அதிபர் பதவியை கோத்தபய ராஜபக்ஷே ராஜினாமா செய்தார். இதையடுத்து, இலங்கையின் புதிய அதிபராக ரணில் விக்ரமசிங்கே பொறுப்பேற்றுக்கொண்டார். தற்போது அதிபராக பதவியேற்றுள்ள ரணில் விக்ரமசிங்கே, நாட்டை பொருளாதார சீரழிவில் இருந்து மீட்க போதுமான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று உறுதி அளித்துள்ளார். மக்களும் ரணில் விக்ரமசிங்கே நாட்டை பொருளாதார சிக்கலில் இருந்து மீட்டெடுப்பார் என்று நம்பியுள்ளனர். அதேபோல், கொந்தளிப்பில் உள்ள மக்களை ஆசுவாசப்படுத்தும் விதமாக அதிரடி அறிவிப்புகளையும் அதிபர் ரணில் விக்ரமசிங்கே வெளியிட்டு வருகிறார்.
தர்ம சங்கடத்தில் ஆழ்த்தியது
இவற்றில் முக்கியமாக 2 ஏக்கருக்கு குறைவாக நிலம் வைத்துள்ளவர்களின் விவசாயக் கடன்களை ரத்து செய்வதாக அறிவித்தார். அதேபோல், பெட்ரோல் விலையையும் சற்று குறைத்து அறிவிப்பு வந்தது. ரணில் விக்ரமசிங்கே அதிரடி அறிவிப்புகளை வெளியிட்டாலும் ஒருபுறம் அவருக்கும் எதிர்ப்புகள் எழாமல் இல்லை. இந்த நிலையில், விக்கிலீக்ஸ் இணைய தளம் வெளியிட்டு இருக்கும் ஒரு தகவல் இலங்கையின் தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கேவிற்கு தர்ம சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.
நிதி வழங்காதீங்க..
கடந்த 2007ஆம் ஆண்டு ஜப்பானுக்கு கோரிக்கை விடுத்த ரணில் விக்ரமசிங்கே, இலங்கைக்கு அளித்து வரும் நிதி உதவியை நிறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொண்டுள்ளார். ஆனால், இதை ஏற்க மறுத்த ஜப்பான், தலைவர்கள் கமிஷன் அடித்து உதாசீனப்படுத்தினாலும், இதனை காரணமாக வைத்து மக்களை தண்டிக்கக் கூடாது என பதிலளித்துள்ளது. இந்த நிகழ்வு நடைபெற்ற சமயத்தில் ரணில் விக்ரமசிங்கே எதிர்க்கட்சித்தலைவராக இருந்துள்ளார். அப்போது இலங்கை அதிபராக மகிந்த ராஜபக்சே இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.